லைவ்: 11ம் நாளாக தொடரும் போர் - இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் பலி


லைவ்: 11ம் நாளாக தொடரும் போர் - இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் பலி
x
தினத்தந்தி 17 Oct 2023 12:29 AM IST (Updated: 17 Oct 2023 11:57 PM IST)
t-max-icont-min-icon

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் இன்று 11ம் நாளாக நீடித்து வருகிறது.

ஜெருசலேம்,

Live Updates

  • 17 Oct 2023 3:17 AM IST

     போர் காரணமாக இரு தரப்பிலும் பலி எண்ணிக்கை உயர்வு

    கடந்த 10 நாட்களாக இடைவிடாது நடந்து வரும் இந்த போரில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.

    இதில் காசா தரப்பில் இதுவரை சுமார் 2,750 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். 9,700-க்கு அதிகமானோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மறுபுறம் இஸ்ரேல் தரப்பில் 1,400-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஏராளமானோர் காயமடைந்து உள்ளனர்.

    உணவு, நீர் இல்லை

    கடந்த 10 நாட்களாக உயிரை கையில் பிடித்துக்கொண்டு பீதியிலேயே இருக்கும் காசா மக்களின் துயரம் மனசாட்சி உள்ள அனைவரின் இதயத்தையும் உலுக்குவதாக உள்ளது.

    அங்கு உணவு, நீர், மருந்து, மின்சாரம் என அத்தியாவசிய பொருட்கள் எதுவும் இல்லாமல், ஏவுகணைகளுக்கு இருப்பிடங்களை பறிகொடுத்து உறைவிடமும் இன்றி எந்த நேரத்தில் எது நிகழுமோ? என நொடிக்கு நொடி மரண வேதனையை அனுபவித்து வருகின்றனர்.

    நோயாளிகளின் நிலை கேள்விக்குறி

    போரில் காயமடைந்தவர்களால் நிரம்பி வழியும் ஆஸ்பத்திரிகளிலும் அத்தியாவசிய மருந்துகள் இருப்பில் இல்லை. இதனால் காசாவில் உள்ள 4 பெரிய மருத்துவமனைகள் மூடப்பட்டு உள்ளன.

    பிற ஆஸ்பத்திரிகளிலும் மின்சாரம் இல்லாததால் ஜெனரேட்டர்கள் மூலமே உயிர்காக்கும் கருவிகள் இயக்கப்படுகின்றன.

    ஜெனரேட்டருக்கான எரிபொருள் ஓரிரு நாட்களுக்கே இருப்பு உள்ளதால் அவை தீர்ந்துவிட்டால் வெண்டிலேட்டர் உள்ளிட்ட உயிர்காக்கும் கருவிகளுடன் சிகிச்சை பெற்று வரும் நூற்றுக் கணக்கான நோயாளிகளின் நிலைமை கேள்விக்குறியாகி இருப்பதாக ஆஸ்பத்திரி நிர்வாகங்கள் தெரிவித்தன.

    பிணப்பைகளுக்கு தட்டுப்பாடு

    இதைப்போல பிணங்களை கையாள முடியாமல் தவித்து வருவதாக ஐ.நா. அகதிகள் நிறுவனமும் கவலை வெளியிட்டு உள்ளது.

    பிணங்களை வைக்கும் பைகளுக்கே தட்டுப்பாடு இருப்பதாகவும், மொத்தமாக சரிவின் விளிப்புக்கு தள்ளப்பட்டு விட்டதாகவும் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிவாரண மைய கமிஷனர் பிலிப் லாசரினி கிழக்கு ஜெருசலேமில் தெரிவித்தார்.

  • 17 Oct 2023 2:00 AM IST

    காசாவில் இருந்து 10 லட்சம் பேர் வெளியேற்றம்

    இஸ்ரேலின் இந்த அறிவிப்பை தொடர்ந்து வடக்கு காசாவில் இருந்து சுமார் 10 லட்சம் பேர் வெளியேறி உள்ளனர். காசாவின் மக்கள் தொகையில் பாதி அளவிலான அவர்கள் தெற்கை நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றனர்.

    இதில் 5 லட்சத்துக்கு மேற்பட்டோர் எங்கு செல்வது என தெரியாமல் ஐ.நா. அகதிகள் முகாம்கள் மற்றும் ஆஸ்பத்திரிகள் போன்ற இடங்களில் அடைக்கலம் புகுந்துள்ளனர்.

    அதேநேரம் காசா மக்களை வீட்டிலேயே இருக்குமாறு வலியுறுத்தி உள்ள ஹமாஸ் அமைப்பினர், மக்கள் வெளியேறுவதை தடுப்பதற்காக சாலைகளில் தடுப்புகளை போட்டு இருக்கும் புகைப்படங்களை இஸ்ரேல் வெளியிட்டது.

  • 17 Oct 2023 1:53 AM IST

    பிணைக்கைதிகளை மீட்பதற்காக தயார் நிலையில் இஸ்ரேல் ராணுவம்

    ஹமாஸ் அமைப்பின் தலைவர்களை கூண்டோடு அழிப்பதற்காகவும், இஸ்ரேலில் இருந்து பிடித்து செல்லப்பட்ட பிணைக்கைதிகளை மீட்பதற்காகவும் இஸ்ரேல் ராணுவம் காசாவுக்குள் நுழைய தயாராகி வருகிறது.

    ஆயிரக்கணக்கில் காசா எல்லையில் குவிந்துள்ள இஸ்ரேல் வீரர்கள் தாக்குதலுக்கு ஒத்திகை பார்த்து வருகின்றனர். அவர்களுக்கு உறுதுணையாக விமானப்படையும் உள்ளது.

    அதேநேரம் அமெரிக்காவின் போர்க்கப்பல்களும் இஸ்ரேல் ராணுவத்துக்கு துணையாக நிறுத்தப்பட்டு உள்ளன. வான், கடல், தரை என மும்முனை தாக்குதலுக்கு இஸ்ரேல் தயாராக உள்ளது.

    இஸ்ரேல் ராணுவம் நுழைவதை முன்னிட்டு காசாவின் வடக்கு பகுதியில் வாழும் மக்கள் வெளியேற இஸ்ரேல் உத்தரவிட்டு இருந்தது. அவர்கள் தெற்கு காசாவுக்கு இடம்பெயர அறிவுறுத்தப்பட்டனர்.

  • 17 Oct 2023 12:58 AM IST

    ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக இஸ்ரேலை தாக்கும் ஹிஸ்புல்லா

    ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பினரும் இஸ்ரேல் மீது தாக்குதல் தொடுத்துள்ளனர். லெபனான் எல்லையில் இருந்து ராக்கெட்டுகள், பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவி தாக்குதல் நடத்தினர்.

    இதில் இஸ்ரேலை சேர்ந்த ஒருவர் பலியானார். ஏராளமானோர் காயமடைந்தனர்.

    இதைத்தொடர்ந்து லெபனான் எல்லைக்குள் இஸ்ரேல் பதில் தாக்குதல் தொடுத்தது. இந்த சண்டையில் இரு தரப்பிலும் பலர் காயமடைந்தனர்.

    கடந்த 14-ந்தேதி இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 2 லெபனானியர்கள் உயிரிழந்ததற்கு எச்சரிக்கையாக இந்த தாக்குதலை நடத்தியதாகவும், முழுமையான போரில் ஈடுபடும் திட்டமில்லை என்றும் ஹிஸ்புல்லா தெரிவித்து உள்ளது.

  • 17 Oct 2023 12:38 AM IST

    இஸ்ரேலின் தாக்குதலில் உருக்குலைந்த காசா

    காசாவில் உள்ள விண்னை முட்டும் அளவிலான கட்டிடங்கள் அனைத்தும் சின்னாபின்னமாகி உள்ளன. கட்டிட இடிபாடுகளும், பற்றி எரியும் கட்டிடங்களுமாக காசா நகர் முழுவதும் உருக்குலைந்து காணப்படுகிறது.

    அங்கு நேற்று நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஹமாஸ் அமைப்பினரின் கட்டளை மையங்கள், பீரங்கிகள் போன்றவற்றை அழித்ததாக இஸ்ரேல் தெரிவித்தது.

    மறுபுறம் இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினரும் தங்கள் தாக்குதலை நீடித்து வருகின்றனர். இது அங்கும் பெருத்த சேதங்களை ஏற்படுத்தி வருகிறது

  • 17 Oct 2023 12:35 AM IST

    காசா மீது தொடர்ந்து இடைவிடாமல் குண்டுமழை பொழியும் இஸ்ரேல்

    இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7-ந்தேதி நடத்திய திடீர் தாக்குதல், இரு தரப்புக்கும் இடையேயான முழுமையான போராக மாறியது. சர்வதேச சமூகத்தை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கும் இந்த போர் இன்று 11-வது நாளை எட்டியுள்ளது.

    ஹமாஸ் அமைப்பை முழுமையாக ஒழிப்பது என்ற உறுதியுடன் போரில் குதித்து இருக்கும் இஸ்ரேல், போர் விமானங்கள் மூலம் காசா மீது தொடர்ந்து ஏவுகணைகளையும், குண்டுகளையும் வீசி வருகிறது. 24 மணி நேரமும் நீடிக்கும் இந்த குண்டு மழையில் சிக்கியுள்ள காசா நகரம், முற்றிலும் நிலைகுலைந்துள்ளது.


Next Story