போர் காரணமாக இரு தரப்பிலும் பலி எண்ணிக்கை உயர்வு
கடந்த 10 நாட்களாக இடைவிடாது நடந்து வரும் இந்த போரில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.
இதில் காசா தரப்பில் இதுவரை சுமார் 2,750 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். 9,700-க்கு அதிகமானோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மறுபுறம் இஸ்ரேல் தரப்பில் 1,400-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஏராளமானோர் காயமடைந்து உள்ளனர்.
உணவு, நீர் இல்லை
கடந்த 10 நாட்களாக உயிரை கையில் பிடித்துக்கொண்டு பீதியிலேயே இருக்கும் காசா மக்களின் துயரம் மனசாட்சி உள்ள அனைவரின் இதயத்தையும் உலுக்குவதாக உள்ளது.
அங்கு உணவு, நீர், மருந்து, மின்சாரம் என அத்தியாவசிய பொருட்கள் எதுவும் இல்லாமல், ஏவுகணைகளுக்கு இருப்பிடங்களை பறிகொடுத்து உறைவிடமும் இன்றி எந்த நேரத்தில் எது நிகழுமோ? என நொடிக்கு நொடி மரண வேதனையை அனுபவித்து வருகின்றனர்.
நோயாளிகளின் நிலை கேள்விக்குறி
போரில் காயமடைந்தவர்களால் நிரம்பி வழியும் ஆஸ்பத்திரிகளிலும் அத்தியாவசிய மருந்துகள் இருப்பில் இல்லை. இதனால் காசாவில் உள்ள 4 பெரிய மருத்துவமனைகள் மூடப்பட்டு உள்ளன.
பிற ஆஸ்பத்திரிகளிலும் மின்சாரம் இல்லாததால் ஜெனரேட்டர்கள் மூலமே உயிர்காக்கும் கருவிகள் இயக்கப்படுகின்றன.
ஜெனரேட்டருக்கான எரிபொருள் ஓரிரு நாட்களுக்கே இருப்பு உள்ளதால் அவை தீர்ந்துவிட்டால் வெண்டிலேட்டர் உள்ளிட்ட உயிர்காக்கும் கருவிகளுடன் சிகிச்சை பெற்று வரும் நூற்றுக் கணக்கான நோயாளிகளின் நிலைமை கேள்விக்குறியாகி இருப்பதாக ஆஸ்பத்திரி நிர்வாகங்கள் தெரிவித்தன.
பிணப்பைகளுக்கு தட்டுப்பாடு
இதைப்போல பிணங்களை கையாள முடியாமல் தவித்து வருவதாக ஐ.நா. அகதிகள் நிறுவனமும் கவலை வெளியிட்டு உள்ளது.
பிணங்களை வைக்கும் பைகளுக்கே தட்டுப்பாடு இருப்பதாகவும், மொத்தமாக சரிவின் விளிப்புக்கு தள்ளப்பட்டு விட்டதாகவும் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிவாரண மைய கமிஷனர் பிலிப் லாசரினி கிழக்கு ஜெருசலேமில் தெரிவித்தார்.