தலையங்கம்

பிளஸ்-2 தேர்வில் ஜொலிக்கும் மாணவிகள்!


பிளஸ்-2 தேர்வில் ஜொலிக்கும் மாணவிகள்!
8 May 2024 12:03 AM GMT

100-க்கு 100 மதிப்பெண் பெற்றவர்களிலும் பெரும்பாலானோர் மாணவிகளாகவே உள்ளனர்.

சென்னை,

"பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா! பெண்மை வெல்கவென்று கூத்திடுவோமடா" என்று பாடினார் மகாகவி பாரதியார் அன்று. அதே பாடலை இன்று பிளஸ்-2 தேர்வில் வெற்றிபெற்று ஜொலிக்கும் மாணவிகள், மகிழ்ச்சியோடு பாடும் நிலை ஏற்பட்டுள்ளது. பிளஸ்-2 தேர்வுமுடிவு என்பது பல சாலைகள் பிரியும் ஒரு சந்திப்பில் நிற்கும் வழிப்போக்கரைப்போன்றது. அங்கு நின்று அடுத்து எந்தபாதையில் செல்லவேண்டும் என்று முடிவெடுத்து செல்வார். அதேபோலத்தான், பிளஸ்-2 தேர்வுமுடிவு வந்தவுடன் அடுத்து என்ன படிக்கவேண்டும்? எப்படி தன் வாழ்க்கை பாதையை தீர்மானிக்கவேண்டும்? என்று மாணவர்களை முடிவெடுக்க வைக்கும் காலகட்டம் இது.

கடந்த மார்ச் மாதம் 1-ந்தேதியில் இருந்து 22-ந்தேதி வரை பிளஸ்-2 தேர்வு நடந்தது. இதில் 7 லட்சத்து 60 ஆயிரத்து 606 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். 3 லட்சத்து 52 ஆயிரத்து 165 மாணவர்களும், 4 லட்சத்து 8 ஆயிரத்து 440 மாணவிகளும் இந்த தேர்வை எழுதினர். மாணவர்களைவிட மாணவிகளே அதிகம் பேர் தேர்வு எழுதி முத்திரை பதித்தனர். இப்போது தேர்வுமுடிவு வெளிவந்திருக்கிறது. இதிலும் மாணவிகளே கொடிக்கட்டி பறக்கிறார்கள். தேர்வு எழுதிய மாணவிகளில் 96.4 சதவீதம் பேரும், 92.37 சதவீதம் மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதுமட்டுமல்லாமல், இந்த பொதுத் தேர்விலும் மாணவிகள் அதிகளவில் மதிப்பெண்களை பெற்று முன்னணியில் இருக்கிறார்கள். 100-க்கு 100 மதிப்பெண் பெற்றவர்களிலும் பெரும்பாலானோர் மாணவிகளாகவே உள்ளனர்.

அதேபோல் அரசுப்பள்ளிக்கூடங்களிலும் மாணவர்களை காட்டிலும் மாணவிகளே அதிகம் கோலோச்சியிருக்கிறார்கள். ஒட்டுமொத்த தேர்ச்சியில் கடந்த ஆண்டைவிட அரசுப்பள்ளிக்கூடம் இந்த ஆண்டு முன்னேறியுள்ளது என்றாலும், தனியார் பள்ளிக்கூட தேர்ச்சி விகிதத்தை ஒப்பிடும்போது, அரசுப்பள்ளிக்கூடங்கள் இன்னும் போகவேண்டிய தூரம் இருக்கிறது. அரசுப்பள்ளிக்கூடங்களில் இப்போது நல்ல கட்டமைப்பு வசதிகள் இருக்கிறது. எனவே ஆசிரியர்கள் இதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு அடுத்தாண்டு தனியார் பள்ளிக்கூட சாதனைகளுக்கு இணையாக மாணவர் தேர்ச்சி விகிதத்தை அரசு பள்ளிகளில் கொண்டு வரவேண்டும்.

அரசுப்பள்ளிக்கூடங்களில் படித்தவர்களுக்கு எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது சலுகைகள், வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. அரசுப்பள்ளியில் படித்து மருத்துவப்படிப்பு, தொழிற்கல்வி படிப்புகளில் சேரும் மாணவ-மாணவிகளுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு, அரசு பள்ளிக்கூடங்களில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம் ஆகியவை உயர்கல்விக்கு அச்சாரமிடுகின்றன. இந்த ஆண்டு முதல் அரசுப்பள்ளிக்கூடங்களில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் தமிழ்புதல்வன் திட்டம் அமலுக்கு வர இருக்கிறது.

இப்போது வந்த தேர்வு முடிவுகளின் அடிப்படையில் பி.காம் பட்டப்படிப்புக்கு கடும் கிராக்கி இருக்கும், கட்-ஆப் மதிப்பெண்களும் 99 சதவீதத்தை தாண்டும். என்ஜினீயரிங் படிப்புக்கு கட்-ஆப் மதிப்பெண்கள் குறையும், கூடுதலாக கம்ப்யூட்டர் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த படிப்புகளுக்கு 8 ஆயிரம் இடங்கள் இருக்கும் என தெரியவந்துள்ளது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் நடத்தும் கல்லூரி கனவு நிகழ்ச்சி, மாணவர்களின் உயர்கல்விக்கான வாய்ப்புகள் பற்றிய பிரிவு வாரியான பட்டப்படிப்புகள், டிப்ளமோ படிப்புகள் என்னென்ன உள்ளன? கல்லூரிகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது? மேற்படிப்பை முடித்தவுடன் கிடைக்கக்கூடிய வேலைவாய்ப்புகள் பற்றிய விவரங்கள் என்பது போன்ற நல்ல வழியை இன்று முதல் காட்ட உள்ளது. மொத்தத்தில் இந்த ஆண்டு பிளஸ்-2 தேறியவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது.