தலையங்கம்

அரிசிக்கு வரி போடுவதில் டிரம்புக்கு ஆனந்தம்


அரிசிக்கு வரி போடுவதில் டிரம்புக்கு ஆனந்தம்
20 Dec 2025 5:36 AM IST

இந்தியா உலக அளவில் அதிக அரிசி ஏற்றுமதி செய்யும் முன்னணி நாடாகும்.

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து நிதானம் இல்லாத போக்கை கடைபிடித்து வருகிறார். சூரியனின் பார்வைக்கு ஏற்றவாறு மாறிக்கொண்டே இருக்கும் பனை மரத்தின் நிழல் போல தனது நிலைப்பாட்டை மாற்றுபவர்களை நிமிஷத்துக்கு நிமிஷம் பேச்சை மாற்றுபவர் என்று சொல்லும் வழக்கம் கிராமங்களில் இன்றளவும் இருக்கிறது. அதற்கு சரியான உதாரணம் டிரம்ப் தான். இந்தியா சிறந்த நாடு, பிரதமர் நரேந்திர மோடி என்னுடைய நெருங்கிய நண்பர் என்று கூறிக்கொண்டு மறுபக்கம் இந்தியா மீது 50 சதவீத வரியை திணித்தார். இதற்கிடையே டெல்லியில் இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே பரஸ்பர வர்த்தக ஒப்பந்தத்துக்கான 6-வது சுற்று பேச்சுவார்த்தை கடந்த 10-ந்தேதி தொடங்கியது.

இந்த பேச்சுவார்த்தையில் என்ன கருத்துகள் பரிமாறிக்கொள்ளப்படுகிறது? என்பதை அறிய இரு நாடுகளும் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டு இருந்தநிலையில், அதுபற்றி துளியும் அக்கறைப்படாத டிரம்ப் அதற்கு முந்தைய நாளில் வெள்ளை மாளிகையில் அமெரிக்க விவசாயிகளுக்கு ரூ.100 கோடி அளவில் மானியம் வழங்குவதற்கான ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். இதில் கலந்துகொண்ட அந்த நாட்டின் நெல் விவசாயிகள், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசி குறைந்த விலையில் விற்கப்படுவதால் தங்களால் அவர்களோடு போட்டி போடமுடியவில்லை. அமெரிக்காவில் நெல் உற்பத்தி செலவு அதிகமாக இருக்கிறது என்றனர். இதற்கு பதில் அளித்த டிரம்ப், இந்த பிரச்சினையை தீர்ப்பது மிக எளிதானது. இதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறிவிட்டு, கூட்டத்தில் கலந்துகொண்ட அந்நாட்டு கருவூலத்துறை மந்திரி ஸ்காட் பெசன்டிடம் அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா விலக்கு பெற்றுள்ளதா? என்று கேட்டார்.

அதற்கு அந்த மந்திரி, இல்லை. இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேசிக்கொண்டு இருக்கிறோம் என்று பதில் அளித்தார். அமெரிக்காவுக்குள் தங்கள் நாட்டில் இருந்து அரிசியை இந்தியா தொடர்ந்து கொட்டக்கூடாது. இந்த பிரச்சினையை இந்திய அரிசிக்கு வரி போடுவதன் மூலம் தீர்த்துவிடமுடியும் என்று வரி போடுவதில் ஆனந்தம் கொள்ளும் வசூல் ராஜாவான டிரம்ப் திட்டவட்டமாக கூறினார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் இந்திய அரிசிக்கு 10 சதவீத வரி இருந்தது. இது கடந்த 3 மாதங்களுக்கு முன்பு 25 சதவீதம் ஆகவும், தொடர்ந்து 50 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டிருக்கிறது. 50 சதவீத வரி இன்னும் உயரப்போகிறது. இந்த வரி விதிப்பால் இந்திய விவசாயிகள் பாதிக்கப்படப்போவதில்லை. ஏனெனில் இந்தியா உலக அளவில் அதிக அரிசி ஏற்றுமதி செய்யும் முன்னணி நாடாகும்.

179 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, உலக அரிசி வர்த்தகத்தில் இந்தியா 40 சதவீதம் அளவுக்கு பங்கு வகிக்கிறது. குறிப்பாக அமெரிக்காவுக்கு அதிகம் ஏற்றுமதி செய்யும் இந்திய பாஸ்மதி அரிசிக்கு வளைகுடா நாடுகளான ஈரான், அமீரகம், சவுதி அரேபியாவில் கடும் கிராக்கி இருக்கிறது. ஆப்பிரிக்க நாடுகளும் மற்ற ரக அரிசியை இந்தியாவில் இருந்து வாங்குகின்றன.

இந்தியாவின் ஒட்டுமொத்த அரிசி ஏற்றுமதியில் 3.1 சதவீதம்தான் அமெரிக்காவுக்கு போகிறது. ஆக இந்திய அரிசியை மற்ற நாடுகளில் விற்றுக்கொள்ளமுடியும் என்றாலும், நமது நாட்டின் அரிசியை விரும்பி சாப்பிடும் அமெரிக்கர்கள் குறிப்பாக அங்கு வாழும் இந்தியர்கள் இந்த வரிவிதிப்பால் கூடுதல் விலை கொடுத்து அரிசி வாங்கவேண்டும் என்பதைத்தவிர இந்தியாவுக்கு பெரிய பாதிப்பு எதுவும் இல்லை.