வலுவிழந்தது பெஞ்சல் புயல்; உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
பெஞ்சல் புயல் கரையை கடந்தும் விழுப்புரம், கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
Live Updates
- 1 Dec 2024 11:34 AM IST
புதுச்சேரி அருகே நேற்றிரவு பெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில், அங்கு 47 செ.மீ அளவிற்கு அதி கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. அதிக அளவிலான மழை பொழிந்ததன் காரணமாக, புதுவை முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. புதுவை ஜமீத் நகர் பகுதியில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது.
- 1 Dec 2024 11:31 AM IST
விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் அதிகபட்சமாக 51 செ.மீ. மழைப்பதிவு
வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் நேற்று நள்ளிரவு புதுச்சேரி அருகே கரையை கடந்தது. புயலின் தாக்கத்தால் சென்னை, புதுச்சேரி, விழுப்புரம், கடலூர், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது.
பெஞ்சல் புயல் எதிரொலியால் விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் அதிகபட்சமாக 51 செ.மீ. மழைப்பதிவானது.
இதேபோல் புதுச்சேரியில் 49 செ.மீ. மழையும், புதுக்கண்ணில் 45 செ.மீ., மழையும், திருக்கனூரில் 43 செ.மீ. மழையும் பதிவானதான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
- 1 Dec 2024 11:29 AM IST
புதுச்சேரியில் உள்ள பள்ளி, கல்லூரிகளை முகாம்களாக மாற்ற உத்தரவு
புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளை தங்கும் முகாமாக மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. புயல், மழையால் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்ட மக்களை முகாம்களில் தங்க வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மூடப்பட்டிருக்கும் கல்வி நிறுவனங்களை உடனடியாக திறக்க கோரி மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளார்.
- 1 Dec 2024 11:27 AM IST
21 மாவட்டங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
திருவண்ணாமலை, தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், கடலூர், கரூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, குமரி, நெல்லை, தென்காசி, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
- 1 Dec 2024 11:02 AM IST
தமிழ்நாடு மாநில மீட்பு படையில் இருந்து திண்டிவனம் மற்றும் விழுப்புரத்திற்கு கூடுதல் குழுவினர் விரைந்துள்ளனர். திண்டிவனத்திற்கு 4 குழுக்களும், விழுப்புரத்திற்கு 2 குழுக்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
- 1 Dec 2024 11:00 AM IST
விழுப்புரத்தில் தொடர்ந்து பெய்யும் கனமழை: குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த வெள்ளம்
சென்னை உள்ளிட்ட மாவட்டங்களை மிரட்டிய பெஞ்சல் புயல் நேற்று இரவு மாமல்லபுரம் - புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது. இதன்படி பெஞ்சல் புயலின் முனைப்பகுதி நேற்று மாலை கரையைக் கடக்கத் தொடங்கிய நிலையில் இரவு 11.30 மணியளவில் புயல் முழுமையாக கரையைக் கடந்தது. பெஞ்சல் புயல், கரையை கடந்தபோது சுமார் 90 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. புயல் காரணமாக தமிழகம் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழை கொட்டித் தீர்த்தது
இதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று அதிகாலை லேசான தூறலுடன் பெய்யத் தொடங்கிய மழை, 30 மணி நேரத்தை கடந்தும் தற்போது கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் 5 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. நகரின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீரால் சூழப்பட்டுள்ளன. விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் ஏரி மதகுகள் உடைந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
கோட்டக்குப்பம் பகுதியில் வெள்ளத்தில் சிக்கியவர்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர். விழுப்புரம் செஞ்சி பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. அங்கு சிக்கி இருந்த மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் கார் பழுது பார்க்கும் கடையை வெள்ளம் சூழ்ந்தநிலையில், அங்கிருந்த கார்கள் வெள்ள நீரில் மிதந்தன. இதனைத்தொடர்ந்து ஜே.சி.பி. மூலம் கார்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.
- 1 Dec 2024 10:32 AM IST
புயல் எதிரொலி: கடலூரில் வெளுத்து வாங்கும் கனமழை
சென்னை உள்ளிட்ட மாவட்டங்களை மிரட்டிய பெஞ்சல் புயல் நேற்று இரவு மாமல்லபுரம் - புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது. இதன்படி பெஞ்சல் புயலின் முனைப்பகுதி நேற்று மாலை கரையைக் கடக்கத் தொடங்கிய நிலையில் இரவு 11.30 மணியளவில் புயல் முழுமையாக கரையைக் கடந்தது.
பெஞ்சல் புயல், கரையை கடந்தபோது சுமார் 90 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இந்நிலையில், புயல் கரையைக் கடந்தபிறகும் பலத்த சூறாவளிக் காற்று தொடர்ந்து வருகிறது. தற்போது வரை மரக்காணத்தில் பலத்த சூறைக்காற்று வீசுகிறது.
புயல் எதிரொலியாக கடலூரில் விடிய விடிய கனமழை பெய்தது. பெஞ்சல் புயல் நேற்று இரவு கரையைக் கடந்துவிட்ட பிறகும் கூட கடலூர் வட்டாரத்தில் விடிய விடிய மழை கொட்டித் தீர்த்தது. விடாது பெய்த கனமழையால் கடலூர் சாலைகளில் தண்ணீர் ஆறாக ஓடியது.
கடலூரில் சாலைகளை சூழ்ந்துள்ள மழைநீரால் பொது மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். கெடிலம் ஆற்றின் கரை உடைந்ததால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் இதுவரை 18 செ.மீ., மழை பதிவாகி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 1 Dec 2024 10:20 AM IST
பெஞ்சல் புயல் பாதிப்பு : மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு படை
புதுச்சேரி அருகே நேற்று இரவு கரையைக் கடந்த பெஞ்சல் புயல். மணிக்கு 60 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதால், சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.
பெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே கரையைக் கடந்த நிலையில், புதுச்சேரியில் 47 செ.மீ மழை பதிவானது. விழுப்புரம் மாவட்டம் மைலத்தில் 49.8 செ.மீ. மழையும், கடலூரில் 18 செ.மீ, மழையும், மரக்காணத்தில் 23.8 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.
பெஞ்சல் புயல் காரணமாக கடலூரில் விடிய விடிய கொட்டிய கனமழையால் சாலைகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. பலத்த காற்று வீசியதன் காரணமாக ஆங்காங்கே மரங்கள் சாய்ந்து, பாதுகாப்பு தடுப்புகள் சரிந்து விழுந்துள்ளன. இரவு முழுவதும் கனமழை பெய்த காரணத்தால் புதுச்சேரி தத்தளிக்க தொடங்கி உள்ளது. புதுச்சேரி அண்ணாநகர் பகுதியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வெள்ளம் தேங்கி உள்ள பகுதிகள் வசிக்கும் பொதுமக்களை படகுகள் மூலம் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்டு வருகின்றனர்.
இதனிடையே பெஞ்சல் புயலால் கடுமையாக பதிக்கப்பட்டுள்ள புதுச்சேரியில் அனைத்து அரசு, தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் முகாம்களாக மாற்றப்பட்டு வருகிறது.
முன்னதாக புயலை எதிர்கொள்ளும்வகையில் அரசு எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. தாழ்வான பகுதிகளில் வசிப்போர் தங்குவதற்கு வசதியாக நிவாரண முகாம்கள், அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், மருந்து, மாத்திரைகள் போன்றவை போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டிருந்தது. தண்ணீர் தேங்கினால் உடனுக்குடன் அப்புறப்படுத்தும் வகையில் மின்மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
- 1 Dec 2024 9:47 AM IST
பெஞ்சல் புயலால் கடுமையான பாதிப்பு: புதுச்சேரியில் உள்ள பள்ளி, கல்லூரிகள் முகாம்களாக மாற்றம்
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று முன்தினம் பிற்பகல் 2.30 மணிக்கு புயலாக வலுப்பெற்றது என அறிவிக்கப்பட்டது. இந்த புயலுக்கு 'பெஞ்சல்' எனவும் பெயர் சூட்டப்பட்டது. இந்த 'பெஞ்சல்' புயல் நேற்று இரவு 10.30 மணி முதல் 11.30 மணிக்குள் முழுமையாக கரையக் கடந்த விட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனிடையே பெஞ்சல் புயல் நகராமல் புதுச்சேரி அருகிலேயே நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து கரையைக் கடந்த பெஞ்சல் புயல் புதுச்சேரிஅருகே 6 மணி நேரமாக நகராமல் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி பெஞ்சல் புயல் கடலூர், விழுப்புரத்தில் இருந்து கிழக்கில் 40 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென் கிழக்கே 120 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பெஞ்சல் புயல் மேற்கு திசையில் நகர்ந்து படிபடியாக ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பெஞ்சல் புயல் கரையைக் கடந்தபோது புதுச்சேரியில் 46 செ.மீ. அளவுக்கு அதிகனமழை பதிவானதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் புதுச்சேரியில் காணும் இடமெல்லாம் தற்போது வெள்ளக்காடாக காட்சி அளித்து வருகிறது. பல இடங்களில் குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. வீடுகளை சுற்றி தேங்கி நிற்கும் மழைநீரால் மக்கள் தவித்து வருகின்றனர். படகுகள் மூலம் மீட்பு படையினர் மக்களை மீட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பெஞ்சல் புயலால் கடுமையாக பதிக்கப்பட்டுள்ள புதுச்சேரியில் அனைத்து அரசு, தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் முகாம்களாக மாற்றப்பட்டு வருகிறது. இதன்படி பள்ளி, கல்லூரிகளை திறந்து வைக்க மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.