பெஞ்சல் புயலால் கடுமையான பாதிப்பு: புதுச்சேரியில் உள்ள பள்ளி, கல்லூரிகள் முகாம்களாக மாற்றம்
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று முன்தினம் பிற்பகல் 2.30 மணிக்கு புயலாக வலுப்பெற்றது என அறிவிக்கப்பட்டது. இந்த புயலுக்கு 'பெஞ்சல்' எனவும் பெயர் சூட்டப்பட்டது. இந்த 'பெஞ்சல்' புயல் நேற்று இரவு 10.30 மணி முதல் 11.30 மணிக்குள் முழுமையாக கரையக் கடந்த விட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனிடையே பெஞ்சல் புயல் நகராமல் புதுச்சேரி அருகிலேயே நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து கரையைக் கடந்த பெஞ்சல் புயல் புதுச்சேரிஅருகே 6 மணி நேரமாக நகராமல் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி பெஞ்சல் புயல் கடலூர், விழுப்புரத்தில் இருந்து கிழக்கில் 40 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென் கிழக்கே 120 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பெஞ்சல் புயல் மேற்கு திசையில் நகர்ந்து படிபடியாக ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பெஞ்சல் புயல் கரையைக் கடந்தபோது புதுச்சேரியில் 46 செ.மீ. அளவுக்கு அதிகனமழை பதிவானதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் புதுச்சேரியில் காணும் இடமெல்லாம் தற்போது வெள்ளக்காடாக காட்சி அளித்து வருகிறது. பல இடங்களில் குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. வீடுகளை சுற்றி தேங்கி நிற்கும் மழைநீரால் மக்கள் தவித்து வருகின்றனர். படகுகள் மூலம் மீட்பு படையினர் மக்களை மீட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பெஞ்சல் புயலால் கடுமையாக பதிக்கப்பட்டுள்ள புதுச்சேரியில் அனைத்து அரசு, தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் முகாம்களாக மாற்றப்பட்டு வருகிறது. இதன்படி பள்ளி, கல்லூரிகளை திறந்து வைக்க மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.