புயல் எதிரொலி: கடலூரில் வெளுத்து வாங்கும் கனமழை
சென்னை உள்ளிட்ட மாவட்டங்களை மிரட்டிய பெஞ்சல் புயல் நேற்று இரவு மாமல்லபுரம் - புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது. இதன்படி பெஞ்சல் புயலின் முனைப்பகுதி நேற்று மாலை கரையைக் கடக்கத் தொடங்கிய நிலையில் இரவு 11.30 மணியளவில் புயல் முழுமையாக கரையைக் கடந்தது.
பெஞ்சல் புயல், கரையை கடந்தபோது சுமார் 90 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இந்நிலையில், புயல் கரையைக் கடந்தபிறகும் பலத்த சூறாவளிக் காற்று தொடர்ந்து வருகிறது. தற்போது வரை மரக்காணத்தில் பலத்த சூறைக்காற்று வீசுகிறது.
புயல் எதிரொலியாக கடலூரில் விடிய விடிய கனமழை பெய்தது. பெஞ்சல் புயல் நேற்று இரவு கரையைக் கடந்துவிட்ட பிறகும் கூட கடலூர் வட்டாரத்தில் விடிய விடிய மழை கொட்டித் தீர்த்தது. விடாது பெய்த கனமழையால் கடலூர் சாலைகளில் தண்ணீர் ஆறாக ஓடியது.
கடலூரில் சாலைகளை சூழ்ந்துள்ள மழைநீரால் பொது மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். கெடிலம் ஆற்றின் கரை உடைந்ததால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் இதுவரை 18 செ.மீ., மழை பதிவாகி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.