வலுவிழந்தது பெஞ்சல் புயல்; உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு


தினத்தந்தி 1 Dec 2024 9:19 AM IST (Updated: 1 Dec 2024 11:56 PM IST)
t-max-icont-min-icon

பெஞ்சல் புயல் கரையை கடந்தும் விழுப்புரம், கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.


Live Updates

  • 1 Dec 2024 9:34 AM IST

    புதுச்சேரி அருகே கரையை கடந்தும் நகராமல் இருக்கும்  'பெஞ்சல் புயல்' 




    வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று முன்தினம் பிற்பகல் 2.30 மணிக்கு புயலாக வலுப்பெற்றது என அறிவிக்கப்பட்டது. இந்த புயலுக்கு 'பெஞ்சல்' எனவும் பெயர் சூட்டப்பட்டது. இந்த 'பெஞ்சல்' புயல் மேற்கு-வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து நேற்று மாலைக்குள் சென்னை-புதுச்சேரிக்கு இடையே, மாமல்லபுரம்-புதுச்சேரி இடைப்பட்ட பகுதியை மையமாகக் கொண்டு கரையை கடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.

    இதன்படி நேற்று இரவு 10.30 மணி முதல் 11.30 மணிக்குள் முழுமையாக கரையக் கடந்த விட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. புயல் கரையைக் கடந்தபோது அதிகபட்சமாக மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதாகவும், வட மாவட்டங்களில் சூறைக்காற்று வீசியது என்றும் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் மேற்கு-தென் மேற்கில் 7 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் பெஞ்சல் புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது.

    இதனிடையே பெஞ்சல் புயல் நகராமல் புதுச்சேரி அருகிலேயே நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் கரையைக் கடந்த பெஞ்சல் புயல் புதுச்சேரிஅருகே 6 மணி நேரமாக நகராமல் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி பெஞ்சல் புயல் கடலூர், விழுப்புரத்தில் இருந்து கிழக்கில் 40 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென் கிழக்கே 120 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே பெஞ்சல் புயல் மேற்கு திசையில் நகர்ந்து படிபடியாக ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    புயல் நகராமல் இருந்துவரும் நிலையில் தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Next Story