விழுப்புரத்தில் தொடர்ந்து பெய்யும் கனமழை: குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த வெள்ளம்
சென்னை உள்ளிட்ட மாவட்டங்களை மிரட்டிய பெஞ்சல் புயல் நேற்று இரவு மாமல்லபுரம் - புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது. இதன்படி பெஞ்சல் புயலின் முனைப்பகுதி நேற்று மாலை கரையைக் கடக்கத் தொடங்கிய நிலையில் இரவு 11.30 மணியளவில் புயல் முழுமையாக கரையைக் கடந்தது. பெஞ்சல் புயல், கரையை கடந்தபோது சுமார் 90 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. புயல் காரணமாக தமிழகம் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழை கொட்டித் தீர்த்தது
இதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று அதிகாலை லேசான தூறலுடன் பெய்யத் தொடங்கிய மழை, 30 மணி நேரத்தை கடந்தும் தற்போது கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் 5 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. நகரின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீரால் சூழப்பட்டுள்ளன. விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் ஏரி மதகுகள் உடைந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
கோட்டக்குப்பம் பகுதியில் வெள்ளத்தில் சிக்கியவர்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர். விழுப்புரம் செஞ்சி பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. அங்கு சிக்கி இருந்த மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் கார் பழுது பார்க்கும் கடையை வெள்ளம் சூழ்ந்தநிலையில், அங்கிருந்த கார்கள் வெள்ள நீரில் மிதந்தன. இதனைத்தொடர்ந்து ஜே.சி.பி. மூலம் கார்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.