சாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அரசை பா.ம.க. தான் வலியுறுத்த வேண்டுமானால் தி.மு.க.வுக்கு ஆட்சி எதற்கு? - ராமதாஸ்

தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

Update: 2024-07-01 14:52 GMT

கோப்புப்படம் 

சென்னை,

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

சாதிவாரி விவரங்கள் வேண்டும் என்று  பாட்டாளி மக்கள் கட்சி விரும்பினால், 2021-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்தும்படி கூட்டணி கட்சியான பாரதிய ஜனதாவை பாட்டாளி மக்கள் கட்சி தான் வலியுறுத்த வேண்டும் என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியிருக்கிறார். தமிழ்நாட்டின் சமூகநீதியை காப்பதில் தி.மு.க. அரசின் கையாலாகாத தனத்தையே அமைச்சரின் கருத்து காட்டுகிறது.

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தேசிய அளவிலும், மாநில அளவிலும் நடத்தப்பட வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு. இதற்காக 2008-ம் ஆண்டில் 150-க்கும் மேற்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களவை உறுப்பினர்களின் கையெழுத்துகளை வாங்கி அன்புமணி ராமதாஸ் தலைமையிலான குழுவினர் அப்போதைய உள்துறை மந்திரி சிவ்ராஜ் பாட்டீலிடம் ஒப்படைத்தது, மக்களவையில் தொடர்ந்து குரல் கொடுத்து சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை ஒப்புக் கொள்ள வைத்தது போன்ற வரலாறுகள் எல்லாம் அந்த ஆட்சியில் தி.மு.க. சார்பில் மத்திய உள்துறை இணை மந்திரியாகவும், சுற்றுச்சூழல் துறை இணை மந்திரியாகவும், பதவி வகித்த ரகுபதி போன்றவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவருக்கும் சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்?

தமிழ்நாட்டில் சமூகநீதியைக் காக்க சாதிவாரி கணக்கெடுப்பு தேவை. அதற்காக மத்திய அரசை பாட்டாளி மக்கள் கட்சி தான் வலியுறுத்த வேண்டும் என்றால் தமிழ்நாட்டில் தி.மு.க. ஏன் ஆட்சியில் இருக்க வேண்டும்? பதவி விலகி விடலாமே? நாடாளுமன்ற மக்களவையில் தி.மு.க. அணிக்கு 39 உறுப்பினர்கள் எதற்கு? அவர்களும் பதவி விலகி விடலாமே? அதிகாரத்தை சுவைப்பதற்கு மட்டும் தான் தி.மு.க.வுக்கு மக்கள் வாக்களித்தார்களா?

தமிழ்நாட்டில் சமூக நீதியைக் காக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டியது தமிழக அரசின் கடமை. அந்தக் கடமைகளை நிறைவேற்றுவதற்காக தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. அதை நீதிமன்றங்களும் உறுதி செய்துள்ளன. இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி கடமையை செய்ய திறனற்ற தி.மு.க. அரசு, மத்திய அரசு தான் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று போகாத ஊருக்கு வழிகாட்டக் கூடாது.

பீகார், கர்நாடகா, ஒடிசா, ஆந்திரா, தெலுங்கானா, ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்கள், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு தான் நடத்த வேண்டும் என்று தட்டிக்கழிக்கவில்லை. அந்த அரசுகளே 2008-ம் ஆண்டின் புள்ளிவிவர சேகரிப்பு சட்டத்தைப் பயன்படுத்தி கணக்கெடுப்பு நடத்தியுள்ளன. அதே வழியில் பயணிக்க தமிழக அரசுக்கு என்ன தயக்கம்? தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாட்டோம், சமூகநீதி வழங்க மாட்டோம் என்பது தான் தமிழக அரசின் கொள்கை என்றால் அதை வெளிப்படையாக அறிவித்து விடுங்கள்.

தமிழ்நாட்டின் சட்ட அமைச்சராக இருக்கும் ரகுபதி தமக்குத் தெரிந்த சட்ட அறிவை பயன்படுத்தி, மனசாட்சிக்கு அஞ்சி தமிழக அரசுக்கு சரியான ஆலோசனைகளை வழங்க வேண்டும். அதை விடுத்து தி.மு.க. தலைமை சொல்லிக் கொடுத்ததையே கிளிப்பிள்ளை போல மீண்டும், மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்