ஹத்ராஸ் சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த யோகி ஆதித்யநாத் உத்தரவு

ஹத்ராஸ் சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2024-07-03 12:41 GMT

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் நேற்று இந்து மத ஆன்மீக நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சி முடிந்து மக்கள் புறப்பட்டபோது கடும் நெரிசல் ஏற்பட்டது.

இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர். மேலும் ஏராளமானோர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் போலே பாபா சாமியார் நடத்திய இந்த ஆன்மிக நிகழ்ச்சியில் பலர் உயிரிழந்த சம்பவத்திற்கு பிறகு திடீரென அவர் தலைமறைவானார். இவரை உத்தரப்பிரதேச போலீசார் தேடி வருகின்றனர்.

இதனிடையே ஹத்ராஸ் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காயமடைந்தவர்களை உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் ஹத்ராஸ் சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களில் 6 பேர் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இந்த சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்துவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விசாரணை குழுவில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் இடம்பெற்றிருப்பார்கள். இதுபோன்ற சம்பவம் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்வோம்" என்று தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்