நிறத்தை காரணம் காட்டி சித்ரவதை செய்த கணவர் குடும்பத்தினர் - இளம்பெண் தற்கொலை
உடலின் நிறம், ஆங்கிலம் சரிவர பேசத்தெரியவில்லை என கூறி கணவர் குடும்பத்தினர் சித்ரவதை செய்ததால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார்.;
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் கொன்கோட்டி பகுதியை சேர்ந்த இளம்பெண் சஹனா மும்தாஜ் (வயது 19). இவர் கல்லூரியில் முதலாம் ஆண்டு கல்வி பயின்று வருகிறார். இவருக்கு அதே மாவட்டத்தின் முராயூர் பகுதியை சேர்ந்த அப்துல் வஹித் என்பவருடன் கடந்த ஆண்டு மே 27ம் தேதி திருமணமானது.
திருமணமான 20 நாட்களில் அப்துல் வஹித் வேலைக்காக ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய்க்கு சென்றுவிட்டார். இதையடுத்து, சஹானா மும்தாஜ் தனது கணவர் வீட்டில் மாமனார், மாமியாருடன் வசித்து வந்தார். அதேவேளை, திருமணமானது முதல் சஹானாவுக்கு கணவர் அப்துல் வஹித்தும், அவரது குடும்பத்தினரும் மனரீதியில் தொல்லை கொடுத்துள்ளனர்.
உடல் நிறத்தை காரணம் காட்டியும், ஆங்கிலம் சரிவர பேசத்தெரியவில்லை என கூறியும் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் சஹானாவை சித்ரவதை செய்துள்ளனர். துபாயில் இருந்தவாறு வாட்ஸ் அப் கால் மூலம் அப்துல் வஹித் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், விவாகரத்து செய்யப்போவதாகவும் அப்துல் கூறியுள்ளார்.
இதனால் மிகுந்த மனஉளைச்சல் அடைந்த சஹானா படிப்பில் கவனம் செலுத்தமுடியாமல் போனது. இதை அறிந்த கல்லூரி ஆசிரியர்கள் சஹானாவின் நிலை குறித்து அவரது குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
இதையடுத்து, சஹானாவை அவரது குடும்பத்தினர் கொன்கோட்டியில் உள்ள வீட்டிற்கு அழைத்து சென்றனர். மேலும், அவருக்கு மனநலம் தொடர்பான சிகிச்சையும் அளிக்கப்பட்டுள்ளது. இதில் அவரது உடல்நிலை சற்று முன்னேற்றமடைந்த நிலையில் சஹானாவை அவரது குடும்பத்தினர் மீண்டும் கணவர் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர்.
அப்போது, சஹானாவிடம் அவரது மாமியார், எனது மகனுடன் 20 நாட்கள் மட்டுமே சேர்ந்து வாழ்ந்துள்ளார். பின்னர் எதற்கு இந்த உறவு நீடிக்க வேண்டுமென எதிர்பார்க்கிறாய்? என கூறி அவரின் உடல் நிறம் தொடர்பாகவும் பேசி சித்ரவதை கொடுத்துள்ளார்.
இதனால், மீண்டும் மிகுந்த மனஉளைச்சல் அடைந்த சஹானா கொன்கோட்டியில் உள்ள வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில், ஆங்கிலம் சரிவர பேசத்தெரியவில்லை என கூறியும், உடலின் நிறம் குறித்து விமர்சித்தும் கணவன் அவரது வீட்டார் சித்ரவதை செய்ததால் சஹானா இன்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். காலை வெகுநேரமாகியும் சஹானாவின் அறை திறக்காததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றுபார்த்தனர். அங்கு அவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் சஹானாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.