மும்பையில் போலீஸ் தேர்வில் முறைகேடு: 2 பேர் கைது

மும்பையில் போலீஸ் தேர்வில் நடந்த முறைகேடு தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.;

Update:2025-01-15 11:40 IST

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பை போலீஸ் துறைக்கான எழுத்து தேர்வு கடந்த 11-ந்தேதி நடந்தது. இந்த தேர்வில் கலந்துகொள்ள சத்ரபதி சம்பாஜி நகர் பகுதியை சேர்ந்த ரவூப் பதான்(வயது27) என்பவர் வந்தார். அவரிடம் கண்காணிப்பாளர் நடத்திய சோதனையின் போது, காதில் புளூடூத் சாதனம் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

இதேபோல காந்திவிலியில் நடந்த தேர்வின் போது பீட் மாவட்டத்தை சேர்ந்த நிகில்(20) என்பவர் தேர்வு அரங்கில் நுழைய முயன்றார். அவரது ஹால் டிக்கெட்டை வாங்கி பார்த்த போது அது போலியானது என தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையின் போது உடல் தகுதி தேர்வின் போது நிகில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இதனை தனது பெற்றோருக்கு தெரிவிக்கவில்லை. மேலும் எழுத்து தேர்வின் போது தனது உறவினருடன் மும்பை வந்து போலி ஹால் டிக்கெட்டை தயாரித்து உள்ளே நுழைய முயன்றது தெரியவந்தது. இது தொடர்பாக 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்