ஒரே நாளில் ராஜினாமா செய்த கோவை, நெல்லை மேயர்கள்

கோவை மேயர் கல்பனாவைத் தொடர்ந்து நெல்லை மேயர் சரவணனும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

Update: 2024-07-03 12:44 GMT

நெல்லை,

நெல்லை மாநகராட்சியில் தி.மு.க. மேயராக இருந்து வருபவர் பி.எம்.சரவணன். இவரது தலைமையில் மாநகராட்சி கூட்டம் நடத்துவதில் ஒவ்வொரு மாதமும் பிரச்சினைகள் நிலவி வந்தது. சமீபத்தில் மாநகராட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில் தி.மு.க. கவுன்சிலர்களே போதிய எண்ணிக்கையில் கலந்து கொள்ளாததால் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது.

இந்த சூழலில் நேற்று மேயர் பி.எம்.சரவணன் சென்னைக்கு சென்று இருப்பதாகவும், அங்கு கட்சி தலைமையிடம் தனது பதவியை ராஜினாமா செய்வதற்குரிய கடிதத்தை வழங்கி இருப்பதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் நெல்லை மேயர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்பேரில் நெல்லை மேயர் சரவணன் ராஜினாமா செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கோவை மாநகராட்சி மேயர் பதவியில் இருந்து தி.மு.க.வை சேர்ந்த கல்பனா ராஜினாமா செய்தார். கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரனிடம் ராஜினாமா கடிதத்தை மேயர் கல்பனா வழங்கினார். கல்பனா தனது தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்துள்ளதாக மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் விளக்கம் அளித்தார்.

கோவை மற்றும் நெல்லை மேயர்கள் மீதும் தொடர்ச்சியாக கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு எழுப்பி வந்தநிலையில் இருவரும் ராஜினாமா செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

ஒரே நாளில் தி.மு.க.வை சேர்ந்த இரண்டு மேயர்கள் பதவி விலகியது அரசியல் வட்டாரங்களில் பேசுப்பொருளாகி உள்ளது

Tags:    

மேலும் செய்திகள்