கடற்கொள்ளையர்கள் தாக்குதல்: தமிழக மீனவர்களை பாதுகாக்க வேண்டும் - முத்தரசன் வலியுறுத்தல்
கடற்கொள்ளையர்கள் அட்டூழியம் தடுக்கப்படாமல் நீடிப்பது மீனவர்கள் வாழ்வாதாரத்தை அடியோடு நிராகரிக்கும் செயல் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
சென்னை,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகில் உள்ள ஆறுகாட்டுதுறை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று முன்தினம் (20.12.2024) கோடியக்கரைக்கு தென்கிழக்கு திசையில் கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் அந்தப் பகுதிக்கு வந்த கடற்கொள்ளையர்கள் ஆறு பேர், மீன்பிடித்துக் கொண்டிருந்த மூன்று தமிழக மீனவர்களை தாக்கி, அவர்களது படகுகளை சேதப்படுத்தி ஜிபிஎஸ் கருவி உட்பட மீன்பிடி கருவிகளையும் மீன்களையும் எடுத்துச் சென்றுள்ளனர்.
இதே போல், அக்கரைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கா.ராஜ்குமார், கா.ராஜேந்திரன், சென்னையைச் சேர்ந்த எம்.நாகலிங்கம் ஆகியோர் கோடியக்கரையின் தென் கிழக்கு திசையில் உள்ள கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நேரத்தில், அங்கு வந்த ஆறு கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களது படகையும், மீன்பிடி கருவிகளையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.
இதே போல பெருமாள்பேட்டை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மூன்று பேர் இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டுள்ளனர். அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் தமிழ்நாட்டு மீனவர்கள் வாழ்வுரிமையை பாதுகாக்க உதவும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நேரத்தில் கடற்கொள்ளையர்கள் அட்டூழியம் அதிகரித்து வருவது ஏமாற்றம் அளிக்கிறது.
கடந்த 16-ம் தேதி இலங்கையின் புதிய அதிபர் அநுர குமார திசநாயக புது டெல்லி வந்து, பிரதமர் மோடியை சந்தித்து பேசியபோது, மீனவர்கள் பாதுகாப்பு தொடர்பாக பேசப்பட்டதாக தகவல் வெளியாகியது. தமிழ்நாடு முதல்-அமைச்சர் இலங்கை அதிபர் திசநாயகவுக்கு எக்ஸ் தளம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனாலும், இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம் தடுக்கப்படாமல் நீடிப்பது மீனவர்கள் வாழ்வாதாரத்தை அடியோடு நிராகரிக்கும் செயலாக அமைந்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசும், பிரதமரும் அரசியல் உறுதியுடன் நடவடிக்கைகளை மேற்கொண்டு மீனவர்களின் உயிர் மற்றும் உடமைகளை பாதுகாப்பதுடன், அவர்கள் கடலில் அமைதியான சூழலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வர உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.