விஷ சாராயத்தில் 8.6 சதவீதம் முதல் 29.7 சதவீதம் வரை மெத்தனால் கலப்பு: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு அறிக்கை

சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினரால் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-07-03 09:53 GMT

சென்னை,

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 229 போ் பாதிக்கப்பட்டனா். இவா்களில் 65 போ் உயிரிழந்தனர். 150 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது சேலம் அரசு மருத்துவக்கல்லூாி மருத்துவமனையில் 8 பேரும், புதுச்சோி ஜிப்மா் மருத்துவமனையில் 6 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.தமிழகத்தையே பெரும் அதிா்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, ஓய்வுபெற்ற ஐகோா்ட்டு நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபா் ஆணையம் அமைக்கப்பட்டு, இச்சம்பவம் தொடா்பாக அவர் விசாரணை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி விஷச்சாராயத்தில் 8.6 சதவீதம் முதல் 29.7 சதவீதம் வரை மெத்தனால் கலந்திருந்ததாக சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு அறிக்கை சமர்பித்துள்ளது. இதுதொடர்பாக இந்த வழக்கு விசாரணை இன்று வருகையில், கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் இதுவரை தமிழக அரசு முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலர் சிவதாஸ் மீனா ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தார்.

அந்த அறிக்கையில், "கள்ளக்குறிச்சி சம்பவம் நடந்த உடன் உடனடியாக கலெக்டர், வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று உடனடி நடவடிக்கையை மேற்கொண்டனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை தர ஏற்பாடு செய்யப்பட்டது. உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சமும், பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்பட்டது.

முதல்-அமைச்சரின் உடனடி உத்தரவின் பெயரில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், ஏ.வ.வேலு ஆகியோர் கள்ளக்குறிச்சி விரைந்தனர். அடுத்து, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். தமிழக அரசின் உத்தரவின் பெயரில் குற்றவாளிகளை கண்டறியும் வழக்கானது சி.பி.சி.ஐ.டி. காவல்துறைக்கு மாற்றப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 3 வழக்குகள் பதியப்பட்டன. கள்ளக்குறிச்சி கலெக்டர், ஏ.டி.ஜி.பி. ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டனர். 9 காவல் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக முழுதான அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதுவரை சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் 132 சாட்சியங்களிடம் விசாரணை நடத்தி உள்ளனர். 6 குழுக்கள் பிரிக்கப்பட்டு விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக டி.ஜி.பி.க்கள் இந்த வழக்கை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்த கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கில் மெத்தனால் 8.6 சதவீதம் முதல் 29.7 சதவீதம் வரையில் இருந்தது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்குகள், பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி மிகமது சபீக் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தநிலையில், தமிழக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜூலை 11-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்