மாஞ்சோலை விவகாரம் - தலைமைச் செயலாளருக்கு நோட்டீஸ்
மாஞ்சோலை விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலாளருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
சென்னை,
குத்தகை காலம் முடியும் முன்பே விருப்ப பணி ஓய்வில் செல்வதாக மாஞ்சோலை தனியார் தோட்ட நிர்வாகங்கள் நிர்பந்தித்து கையெழுத்து பெற்றதாகவும், நாங்கள் மாஞ்சோலையை விட்டு செல்ல ஒப்புதல் தெரிவிக்கவில்லை என்றும் தொழிலாளர்கள் புகார் தெரிவித்தனர். மேலும் மாஞ்சோலை எஸ்டேட்டை தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகம் நடத்த வேண்டும் என்று அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.
இந்த சூழலில் தொழிற்சாலையை தமிழ்நாடு அரசே எடுத்து நடத்த வேண்டும் என பல தரப்பிலிருந்து கோரிக்கைகளும் வைக்கப்பட்டு வருகின்றன. மாஞ்சோலை மக்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று பல அரசியல் கட்சிகளும் கூறி வருகின்றன. இதனிடையே, உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என இந்திய குடியரசு கட்சி சார்பில் தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கக்கோரி பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையம் தமிழ்நாடு தலைமைச் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த விவகாரத்தில் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.