30-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்


30-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
x
தினத்தந்தி 30 Dec 2024 9:29 AM IST (Updated: 31 Dec 2024 11:04 AM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 30 Dec 2024 7:41 PM IST

    விஜய்யை தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவியுடன் அண்ணாமலை சந்திப்பு

    விஜய்யை தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் இன்று கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னரை சந்தித்தார். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக்கோரி கவர்னரை அண்ணாமலை சந்தித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.


  • 30 Dec 2024 7:09 PM IST

    டி.டி.எப். வாசனின் வீடியோ: செல்லப் பிராணிகள் கடையில் வனத்துறை சோதனை

    யூடியூபர் டி.டி.எப். வாசன் கையில் பாம்புடன் வீடியோ வெளியிட்ட விவகாரம் தொடர்பாக, திருவொற்றியூரில் உள்ள அவரது செல்லப் பிராணிகள் கடையில், வனத்துறையினர் சோதனை செய்து அரியவகை கிளி மற்றும் ஆமையை கைப்பற்றினர்.

    இங்கு பாம்புக்கு கூண்டு வாங்கியதாகவும், பாம்பு விற்கப்படுவதாகவும் வாசன் வீடியோவில் கூறியிருந்த தகவலின் அடிப்படையில் சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

  • 30 Dec 2024 6:38 PM IST

    அறவழியில் மக்களை சந்தித்த கட்சித் தோழர்களை கைது செய்வது தான் ஜனநாயகமா..? த.வெ.க. தலைவர் விஜய்


    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

    இந்நிலையில் சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சூழலில், தமிழகத்துத் தங்கைகளுக்கு இன்று நான் எழுதிய கடிதம் வெளியிடப்பட்டது. அக்கடிதத்தின் நகல்களைத் தமிழகம் முழுவதும் பொதுமக்களிடமும் பெண்களிடமும் த.வெ.க. மகளிரணியினர் மற்றும் கட்சி நிர்வாகிகள் வழங்கியுள்ளனர். சென்னையில் பொதுமக்களிடம் இந்த நகல்களை எம் கட்சித் தோழர்கள் வழங்கவிடாமல் தடுத்த காவல் துறையினர், அவர்களைக் கைது செய்து, பின்னர் விடுவித்துள்ளனர். ஜனநாயக வழியில் பிரசுரங்களை விநியோகம் செய்ய முயன்றதற்காக அவர்களைக் கைது செய்தது கண்டனத்துக்கு உரியது.

    கருத்துரிமை, பேச்சுரிமை அடிப்படையில், யாருக்கும் தொந்தரவு இல்லாமல் அறவழியில் மக்களைச் சந்தித்த எம் கட்சித் தோழர்களைக் கைது செய்வது தான் ஜனநாயகமா?. இது போன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளை மக்கள் வெகு காலம் வேடிக்கை பார்க்க மாட்டார்கள்” என்று அதில் தெரிவித்துள்ளார். 

  • 30 Dec 2024 6:17 PM IST

    கைது செய்யப்பட்ட த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விடுவிப்பு


    சென்னை தியாகராய நகரில் கைது செய்யப்பட்ட தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் விடுவிக்கப்பட்டார். அண்ணா பல்கலை. விவகாரம் தொடர்பாக, அனுமதியின்றி பொதுமக்களுக்கு நோட்டீஸ் வழங்கியதாக கைதான த.வெ.க. கட்சியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோரும் விடுவிக்கப்பட்டனர். 


  • 30 Dec 2024 6:15 PM IST

    இலங்கை அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து

    முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய நியூசிலாந்து 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சாப்மேன் 42 ரன்களும், ராபின்சன் மற்றும் மிச்சேல் ஹே தலா 41 ரன்களும் அடித்தனர். இலங்கை தரப்பில் ஹசரங்கா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    பின்னர் 187 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணியால் நியூசிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியவில்லை. 19.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இலங்கை அணி 141 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

  • 30 Dec 2024 6:05 PM IST

    பாக்சிங் டே டெஸ்ட்: இந்தியாவின் தோல்விக்கான காரணம் என்ன..? ரோகித் சர்மா விளக்கம்


    போட்டி முடிந்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அளித்த பேட்டியில், "உண்மையிலேயே இந்த தோல்வி எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. நாங்கள் இந்த போட்டியில் போராடும் அளவிற்கு விளையாடவில்லை என்று நினைக்கிறேன். இறுதிவரை போராட வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் இந்த போட்டியில் அது முடியாமல் போனது” என்று அவர் கூறினார்.


  • 30 Dec 2024 4:48 PM IST

    தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது

    அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக விஜய் எழுதிய கடிதத்தை பொதுமக்களுக்கு அனுமதியின்றி விநியோகம் செய்ததாக த.வெ.க. தொண்டர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

    இந்நிலையில் தொண்டர்களை பார்க்கச் சென்ற தமிழக வெற்றி கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தையும் போலீசார் கைது செய்தனர். இதன்படி அனுமதியின்றி கூட்டத்தை கூட்டியதாக ஆனந்தை கைது செய்து தனியார் மண்டபத்தில் தி.நகர் போலீசார் தங்க வைத்துள்ளனர்.

  • 30 Dec 2024 4:09 PM IST

    சென்னை கல்லூரி மாணவி கொலை: குற்றவாளிக்கு மரண தண்டனை - கோர்ட்டு அதிரடி

    சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவியை ரெயில் முன் தள்ளி கொலை செய்த வழக்கில், குற்றவாளி சதீஷ்க்கு தூக்கு தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதன்படி 3 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்தபிறகு 2 முறை தூக்கிலிட அல்லிகுளம் மகளிர் கோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

  • 30 Dec 2024 4:03 PM IST

    அரசியல் ஆதாயத்திற்காக வதந்திகளை பரப்புகிறார் எடப்பாடி பழனிசாமி: அமைச்சர் கீதாஜீவன்

    கல்லூரி மாணவியரிடமும் அவர்களின் பெற்றோர்களிடமும் அச்ச உணர்வை ஏற்படுத்தும் வகையில் எடப்பாடி பழனிசாமி நடந்து கொள்வதாக அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்கே எது நடக்கும் அதில் நமக்கென்ன அரசியல் ஆதாயம் கிடைக்கும் என அலைந்து கொண்டிருக்கும் பழனிசாமி, படிக்கவரும் கல்லூரி மாணவர்களிடமும் அவர்களின் பெற்றோர்களிடமும் தேவையின்றி அச்ச உணர்வை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டிருப்பது உண்மையிலேயே அருவருக்கத்தக்க செயல். ஐகோர்ட்டிலேயே தமிழ்நாடு அரசு உரிய பதில் அளித்துவிட்ட போதும் தனது சுய அரசியல் ஆதாயத்திற்காக இல்லாத ஒன்றை இருப்பது போல மேலும்மேலும் வதந்திகளை பரப்பிக் கொண்டிருக்கும் பழனிசாமிக்கு கடும் கண்டனம்.

    தனக்கு விளம்பரம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், படிக்கும் மாணவர்கள் சார்ந்த இந்த சென்சிட்டிவ் விவகாரத்தில் அரசியல் செய்து, அரசியல் அறத்தையும் மாண்பையும் குழி தோண்டி புதைத்துவிட்டார் பழனிசாமி. அவரது இந்த அற்பத்தனமான செயலை தமிழ்நாட்டு மக்கள் என்றும் மன்னிக்கமாட்டார்கள்” என்று அதில் அமைச்சர் கீதாஜீவன் கூறியுள்ளார்.


Next Story