ஆடி மாத சிறப்பு நிகழ்வுகள்

விவசாயத்தை காக்கும் காவிரித் தாயை வணங்கும் வகையில், ஆடி மாதம் பதினெட்டாம் நாளை 'ஆடிப்பெருக்கு விழாவாக மக்கள் கொண்டாடுகின்றனர்.

Update: 2024-07-24 05:41 GMT

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகும். ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை, அமாவாசை போன்ற தினங்கள் மிகவும் சிறப்புக்குரியவை. ஆடி மாதம் சூரியன் வடக்கில் இருந்து தெற்கு திசை நோக்கி செல்வார். இதனை 'தட்சிணாயன புண்ணியகாலம்' என்பார்கள். ஆடி மாதம் மழை பொழிவின் தொடக்கத்தை குறிப்பதால் தமிழர்கள் ஆடிப்பிறப்பை சிறப்பாக கொண்டாடுகிறார்கள். ஆடி மாதத்தில் உள்ள சிறப்புகளைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

* கருடாழ்வார் ஆடி மாதத்தில் சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தார். அந்த தினத்தை 'கருட பஞ்சமி' என்ற பெயரில் விரதமிருந்து கொண்டாடுவர்.

* ஆண்டாள் அவதரித்தது ஆடி மாதம் பூரம் நட்சத்திரம் ஆகும். எனவே அன்றைய தினம், ஆண்டாள் அவதரித்த திருவில்லிபுத்தூரில் தேரோட்டம் நடைபெறும். இந்த நாளில் ஆண்டாளை வணங்கினால், பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும்.

* கஜேந்திரன் என்ற யானை இறைவனுக்கு அபிஷேக நீர் கொண்டு வரச் சென்றபோது, முதலை ஒன்று அதன் காலை கவ்விக்கொண்டது. வலியால் துடித்த யானை 'ஆதிமூலமே.. என்று திருமாலை அழைத்தது. உடனடியாக திருமால், கருட வாகனத்தில் வந்து தன் கையில் இருந்து சக்கராயுதத்தை ஏவி, முதலையைக் கொன்று, யானையை காப்பாற்றினார். இந்த நிகழ்வு ஆடி மாதத்தில்தான் நடந்தது.

* விவசாயத்தை காக்கும் காவிரித் தாயை வணங்கும் வகையில், ஆடி மாதம் பதினெட்டாம் நாளை 'ஆடிப்பெருக்கு விழாவாக மக்கள் கொண்டாடுகின்றனர். அந்த நாளில் தம்பதிகள், ஆற்றங்கரையில் நின்று தங்களின் தாலியை புதியதாக மாற்றிக்கொள்வார்கள்.

* ஆடி மாத பவுர்ணமி நாளில் ஹயக்ரீவர் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. ஏனெனில் ஹயக்ரீவர் அவதாரம் நிகழ்ந்தது ஆடி மாதத்தில் தான்.

* ஆடி மாதத்தில் வியாச பூஜை நடைபெறும். குருவுக்கெல்லாம் குருவாக போற்றப்படுபவர் வியாசர். எனவே ஆடி மாதத்தில் நடைபெறும் ஆடிப் பவுர்ணமி அன்று மாணவர்கள் வியாசரை வணங்கினால் கல்வி வளம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

மேலும் ஆன்மிக செய்திகளுக்கு.. https://www.dailythanthi.com/Others/Devotional

Tags:    

மேலும் செய்திகள்