நரசிம்ம அவதாரத்தை முன்கூட்டியே காட்டிய திருக்கோஷ்டியூர் திருத்தலம்

திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோவிலில் விளக்கு நேர்த்திக்கடன் பிரசித்தி பெற்றது.

Update: 2024-09-06 11:04 GMT

இரண்யன் என்ற அரக்கனை வதம் செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக தேவர்களை மகா விஷ்ணு அழைத்தார். ஆனாலும் பயந்துபோன முனிவர்கள், இரண்யன் தொந்தரவு இல்லாத இடத்தில் ஆலோசிக்க வேண்டும் என்றனர். சுவாமியும் அவர்களின் கோரிக்கையை ஏற்று, கதம்ப மகரிஷி தவமிருக்கும் இடத்தை தேர்ந்தெடுத்தார். அங்கு சென்று ஆலோசனை நடத்தியபோது, நரசிம்ம அவதாரம் எடுத்து இரண்யனை அழிக்கப் போவதாக கூறினார். இதனால் மகிழ்ந்த தேவர்களும், கதம்ப மகரிஷியும் அந்த அவதாரத்தை தங்களுக்கு காட்டும்படி வேண்டினர்.

நரசிம்ம அவதாரம்

அதனை ஏற்ற மகாவிஷ்ணு, தான் எடுக்கப்போகும் நரசிம்ம அவதாரத்தை முன்கூட்டியே தேவர்களுக்கும், கதம்ப முனிவருக்கும் காட்டி அருளினார். இதனால் மகிழ்ச்சி அடைந்த தேவர்களும், கதம்ப முனிவரும், பிற கோலங்களையும் காட்டி அருளும்படி விஷ்ணுவிடம் கேட்டனர். அதன்படி நின்ற, இருந்த, கிடந்த, நடந்த ஆகிய நான்கு கோலங்களையும் காட்டியருளினார் மகாவிஷ்ணு.

இவ்வாறு பகவான் தனது நரசிம்ம அவதாரத்தை உருவாக்கும் நோக்கில் ஆலோசனை நடத்திய இடம் கோஷ்டியூர் என்ற திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் திருத்தலம் ஆகும்.

இந்த தலத்தின் மூலவர் உரக மெல்லணையான், புஜங்க சயனத்தில் கிழக்கு பார்த்த வண்ணம், ஸ்ரீதேவி, பூதேவி, மது, கைடபர், இந்திரன், புருரூப சக்கரவர்த்தி, கதம்ப முனிவர், பிரம்மா, சரஸ்வதி, சாவித்திரி, சந்தான கிருஷ்ணருடன் காட்சி தருகிறார். தாயார் திருமாமகள் என்ற திருநாமத்துடன் தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார்.

அஷ்டாட்சர மந்திர விமானம்

இந்த கோவிலின் கருவறை விமானம் அஷ்டாங்க விமானமாகும். 'ஓம் நமோ நாராயணாய' என்னும் அஷ்டாட்சர மந்திரத்தைக் கொண்டே இந்த விமானம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இது மூன்று தளங்களாக அமைந்துள்ளது. விமானத்தின் கீழ் தளத்தில் ருக்மணி, சத்யபாமாவுடன் நர்த்தன கிருஷ்ணர் உள்ளார். இவர் பூலோகப் பெருமாளாய் அருளாசி வழங்கி வருகிறார்.

அடுத்ததாக முதல் தளத்தில் சவும்ய நாராயணர் திருப்பாற்கடல் பெருமாளாய் பள்ளிகொண்ட கோலத்தில் அருள்செய்கிறார். இவருடன் ஸ்ரீதேவி, பூதேவி தாயாரும் உள்ளனர். இரண்டாவது அடுக்கில் நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக உபேந்திர நாராயணர் தேவலோகப் பெருமாளாய் அருள்பாலித்து வருகிறார். மூன்றாம் அடுக்கில் அமர்ந்த கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பரமபத நாதர் வைகுண்ட பெருமாளாய் அருளாசி அளிக்கிறார்.

திவ்ய தேசக் கோவில்

ஐந்தாம் நிலை ராஜகோபுரத்தை வணங்கி ஆலயம் சென்றால் கருவறையில் உரக மெல்லணையானை தரிசனம் செய்யலாம். இங்குள்ள தீர்த்தம் தேவபுஷ்கரணி என்றழைக்கப்படுகிறது. தல மரமாக பலா மரம் இருக்கிறது. கோவில் முகப்பில் சுயம்பு லிங்கம் ஒன்று இருக்கிறது. பெரியாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோரின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசக்கோவில் இதுவாகும்.

திருக்கோஷ்டியூர் பகுதியில் நம்பி என்பவர் வாழ்ந்து வந்தார். அவரிடம் மந்திர உபதேசம் பெற எண்ணிய ராமானுஜர், ஸ்ரீரங்கத்தில் இருந்து வந்தார். ஆனால் தன்னைக் காண வந்த ராமானுஜரை 17 முறை திருப்பி அனுப்பி விட்டார் நம்பி. இருப்பினும் மனம் தளராது, 18-வது முறையும் நம்பியை காணவந்தார் ராமானுஜர். இதையடுத்து அவருக்கு 'ஓம் நமோ நாராயணாய' என்ற மந்திரத்தை உபதேசம் செய்தார். பின்னர் 'இந்த மந்திரத்தை வெளியில் சொன்னால் உனக்கு நரகம் கிடைக்கும்' என்று கூறி அனுப்பிவிட்டார்.

நாராயண மந்திரம்

ஆனால் ராமானுஜர் உலக உயிர்கள் அனைத்தும் நாராயண மந்திரத்தைத் தெரிந்து கொண்டு, சகல வளங்களும் பெற்று, வைகுண்டம் அடைய வேண்டும் என்பதற்காக இத்தல விமானத்தில் நின்று கொண்டு மக்களுக்கு, 'ஓம் நமோ நாராயணாய' மந்திரத்தை உபதேசித்தார். அவர் நின்ற இடத்தில் ராமானுஜருக்கு சிலை உள்ளது. திருக்கோஷ்டியூர் நம்பிக்கும் சிலை வைக்கப்பட்டுள்ளது. நம்பியின் சன்னிதியில் ஸ்ரீராமபிரான், சீதாதேவி, லட்சுமணர், அனுமன் விக்ரகங்களும் உள்ளன.

இந்த கோவிலில் மாசி மகத்தன்று இரவு தெப்ப விளக்குத் திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவின்போது பெருமாளும், தாயாரும் தங்கப் பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருவார்கள். அந்த நேரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் குளக்கரையில் தீபமேற்றி வழிபாடு செய்வார்கள். இது சிறப்பான விளக்கு பரிகாரமாக கூறப்படுகிறது.

விளக்கு பிரார்த்தனை

இங்கு விளக்கு நேர்த்திக்கடன் பிரசித்தி பெற்றது. இங்கு பிரார்த்தனை செய்பவர்கள், ஒரு அகல் விளக்கை ஆலயத்தில் வாங்கி, சுவாமியிடம் வைத்து பின்னர் வீட்டிற்கு எடுத்துச் செல்கின்றனர். பின்னர் அந்த விளக்கில் ஒரு ரூபாய் காசும், துளசியும் போட்டு, சிறுபெட்டியில் வைத்து மூடி பூஜை அறையில் வைத்து விடுகின்றனர். இந்த விளக்கில் திருக்கோஷ்டியூர் பெருமாளும், மகாவிஷ்ணுவும் எழுந்தருளியிருப்பதாக ஐதீகம். இவ்வாறு செய்வதால் நியாயமான கோரிக்கைகள் பிரார்த்தனைகள் எளிதில் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இவ்வாறு பிரார்த்தனை நிறைவேறியவர்கள் மாசி மகத்தன்று இரவு, இத்தலக் குளக்கரையில் நடைபெறும் தெப்ப திருவிழாவின் போது, தாங்கள் வீட்டில் வைத்து வழிபட்ட அகல் விளக்குடன் மற்றொரு நெய்விளக்கில் தீபமேற்றி தெப்பக்குளக் கரையில் வைத்து வழிபடுகின்றனர். அந்த நேரத்தில் புதிதாக பிரார்த்தனை செய்பவர்கள், இந்த விளக்கை எடுத்துச் செல்கின்றனர்.

மதுரையில் இருந்து 55 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருப்பத்தூர் சென்று அங்கிருந்து 9 கிலோ மீட்டர் தூரம் சென்றால் திருக்கோஷ்டியூரை அடையலாம்.

மகாமக கிணறு

நவக்கோள்களில் ஒருவரான புதனின் புதல்வன் புரு ரூபன், அரச சக்கரவர்த்தியாக திகழ்ந்தவன். ஒருமுறை புருரூப சக்கரவர்த்தி திருக்கோஷ்டியூர் வந்தபோது, மாசி மகாமகம் வந்தது. மகா மகத்தன்று மகாவிஷ்ணுவை, கங்கையில் நீராடி தரிசிக்க விரும்பினார் புருரூப சக்கரவர்த்தி. அவரது விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், திருக்கோஷ்டியூர் தலத்தின் வடகிழக்கு திசையில் உள்ள கிணற்றில் இருந்து கங்கை நதி பொங்கிவர, அதன் மத்தியில் மகாவிஷ்ணு காட்சி தந்தார். ஆலய பிரகாரத்தில் அமைந்துள்ள இந்த கிணறு, 'மகாமக கிணறு' என்று அழைக்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்