திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா: யாகசாலை பூஜையுடன் தொடங்கியது

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது.

Update: 2024-11-02 03:18 GMT

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.

காலை 5.30 மணிக்கு மேல் சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலைக்கு எழுந்தருளினார். பின்னர் காலை 7 மணிக்கு யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது. யாகசாலையில் பிரதான மூன்று கும்பங்களான சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானை அம்பாள் மற்றும் சிவன், பார்வதி உள்பட பரிவார மூர்த்தி கும்பங்கள் என பல்வேறு கும்பங்கள் வைக்கப்பட்டு இருந்தன.

கோவில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் ஆகியோரிடம், காப்பு கட்டிய பட்டர் தாம்பூலம் பெற்று யாகசாலை பூஜையை தொடங்கினார். யாகசாலையில், விக்னேசுவர பூஜை, புன்னியவாஜனம், பூத சுத்தி, கும்ப பூஜை, ஹோம பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடந்தது.

கந்தசஷ்டி திருவிழா முதல் நாளான நேற்று திரளான பக்தர்கள் அதிகாலை கடலில் புனித நீராடி காவி நிற மற்றும் பச்சை நிற ஆடை அணிந்து கோவில் கிரி பிரகாரத்தில் அங்க பிரதட்சணம் செய்து விரதத்தை தொடங்கினர். பெரும்பாளான பெண்கள் கிரி பிரகாரத்தில் அடிபிரதட்சணம் செய்து வழிபாடு செய்தனர். கோவில் வளாகத்தில் ஏராளமான பக்தர்கள் குழுக்களாக அமர்ந்து சுவாமியின் பஜனை பாடல்கள் பாடி வந்தனர். அதேபோல் பக்தர்கள் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

 

திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு முதல் நாளான இன்று கடற்கரையில் குவிந்துள்ள திரளான பக்தர்களை படத்தில் காணலாம்.

காலை 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும், தீபாராதனை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடைபெறுகிறது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் தங்கச்சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடக்கிறது.

மாலை 3.30 மணிக்கு மூலவருக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறுகிறது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு சுவாமி, அம்பாள்களுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து சுவாமி, அம்பாள்களுடன் தங்க தேரில் எழுந்தருளி கிரி வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.

6-ம் திருநாளான வருகிற 7-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை 4.30 மணிக்கு கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது.

7-ம் திருநாளளன 8-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 11 மணிக்கு மேல் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் வைதீக முறைப்படி திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்கிறது.

திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழாவில் கோவில் வளாகத்தில் தங்கி விரத இருக்கும் பக்தர்களை படத்தில் காணலாம்

 

இன்று (சனிக்கிழமை) திருவிழா தொடங்கும் நிலையில் விரதம் இருக்கும் பக்தர்கள் ஏராளமானோர் கோவில் வளாகத்தில் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொட்டகைகளில் நேற்றே இடம் பிடித்து தங்கியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்