தோரணமலை முருகன் கோவில்
சுமார் 800 அடி உயரம் கொண்ட தோரணமலை உச்சியில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் முருகனை தரிசிக்க 1193 படிகள் ஏறிச் செல்ல வேண்டும்.;
தென்காசி மாவட்டம், கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது தோரணமலை முருகன் கோவில். சித்தர்களோடு தொடர்புடையதாகவும், சித்தர்களின் அதிர்வலைககள் நிறைந்ததாகவும் இந்த கோவில் விளங்குகிறது.
தோரணமலையானது ஆதிமுனி அகத்தியரும் தேரையரும் தவமிருந்து மக்களின் நல்வாழ்வுக்காக சித்த மூலிகை ஆராய்ச்சி செய்த தெய்வீக மலை ஆகும். ஒருசமயம், காசிவர்மன் என்ற மன்னனின் தலைவலியைப் போக்க அகத்தியர் கபால அறுவை சிகிச்சை மேற்கொண்டார். தலைப்பகுதிக்குள் தேரை இருக்கும் இடத்தை கண்டுபிடித்த போதிலும் அதை வெளியே எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது. மீறி எடுத்தால் மன்னன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் இக்கட்டான சூழ்நிலை உண்டானது. அப்போது, அறுவை சிகிச்சையின் போது உதவியாக இருந்த ராமதேவர் என்ற சீடர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வந்து, அதை கையால் அலம்பிக்கொண்டே இருந்தார். தண்ணீர் அலம்பும் சத்தத்தை கேட்டதும் மன்னனின் மூளைப்பகுதியில் இருந்த தேரை துள்ளிக்குதித்து தண்ணீர் பாத்திரத்தில் விழுந்தது. இதனால் மன்னன் காசிவர்மனுக்கு கபால அறுவை சிகிக்சை சிக்கலின்றி வெற்றிகரமாக முடிந்தது.
தண்ணீரை கொண்டு வந்து அலம்பி சமயோசிதமாக செயல்பட்டு, தேரை வெளியேற காரணமாக இருந்த சீடர் ராமதேவரை அகத்தியர் பாராட்டினார். அதுமுதல் ராமதேவர் 'தேரையர்' என அழைக்கப்பட்டார்.
அவரது ஜீவசமாதி இத்தலத்தில் தான் உள்ளது. இதனால் மருத்துவ படிப்புக்கு முயற்சி செய்பவர்கள் இங்கு வந்து வழிபட்டு பயன்பெறுகிறார்கள்.
இத்தகைய சிறப்புபெற்ற இம்மலையெங்கும் மூலிகைகள், ஆங்காங்கே நீர் சுரக்கும் சுனைகள்... இவற்றுக்கு மத்தியில் முருகப்பெருமான் இயற்கையாக அமைந்த குகைக்குள் கிழக்கு நோக்கி தோரணையோடு வீற்றிருக்கிறார்.
சுமார் 800 அடி உயரம் கொண்ட தோரணமலை உச்சியில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் முருகனை தரிசிக்க 1193 படிகள் ஏற வேண்டும். பக்தர்கள் இளைப்பாறி செல்வதற்காக மலைப்பாதையில் 6 இடங்களில் மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முருகன் சன்னிதிக்கு அருகில் அவன் கருணை போல் வற்றாத ஊற்றெடுக்கும் தீர்த்தம் உள்ளது. அதிலிருந்து நீர் கொண்டு வந்து தான் முருகனுக்கு தினமும் அபிஷேகம் செய்யப்படுகிறது.
மகனுக்கு அருகில் அன்னை இருப்பது போல் மலைமீது முருகன் சன்னதிக்கு எதிரே பத்திரகாளியம்மன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறாள். மலையேறி வரும் பக்தர்கள் அன்னையை வழிபட்ட பின்னரே முருகனை தரிசிக்க வேண்டும். மலையடிவாரத்தில் வல்லப விநாயகர், பாலமுருகன் சன்னதிகள் உள்ளன. உற்சவ மூர்த்தியும் இங்கேதான் உள்ளது. மலையேற முடியாதவர்கள் உற்சவ மூர்த்தியை வழிபட்டு செல்வார்கள்.
சிவன், கிருஷ்ணன், லட்சுமி, சரஸ்வதி மற்றும் நாகர், சப்த கன்னியர், கன்னிமாரம்மன், நவகிரக சன்னதிகளும் இங்கு உள்ளன. மலைக்கோவிலுக்கு செல்வதற்கு அதிகாலை 5 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
இங்கு திருவண்ணாமலை போல் பவுர்ணமி தோறும் கிரிவலமும் நடைபெறுகிறது. கிரிவல பாதை 6 1/2 கி.மீட்டர் சுற்றளவு கொண்டது. கிரிவலத்தில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இந்த கோவிலில் நடக்கும் வருண கலச பூஜை சிறப்புடையது. தமிழ் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமைதோறும் இந்த கலச பூஜை வழிபாடு நடத்தப்படுகிறது. உலகுக்கே உணவூட்டும் விவசாயம் செழிக்கவும் உழவர்களின் வாழ்வு ஏற்றம் பெறவும் இந்த வருண கலச பூஜை நடத்தப்படுகிறது.அது சமயம் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த விவசாய பெருமக்கள் தாங்கள் சாகுபடி செய்ய வைத்திருக்கும் விதை, நாற்று உள்ளிட்ட இடுபொருள்களை கொண்டு வந்து பூஜையில் வைப்பர். மலையில் இருந்து 21 கலசங்களில் தீர்த்தம் எடுத்து வரப்படும். அதைக் கொண்டு உற்சவ மூர்த்திக்கு அபிஷேகம் செய்து பூஜை நடத்தப்படும்.
தமிழ்ப்புத்தாண்டு அன்று இந்த வழிபாடு மிகவும் விசேஷமாக நடத்தப்படும். இதில் ஏராளமான விவசாய பெருமக்கள் கலந்து கொள்வார்கள். அன்றைய பூஜையில் விவசாய இடு பொருட்களுடன் ஏர்கலப்பை, பரம்பு அடிக்கும் மரம், நீர் இறைக்கும் கூனை உள்ளிட்ட பல்வேறு வேளாண்மை கருவிகளையும் வைத்து வழிபடுவார்கள். இந்த நிகழ்வில் விவசாயிகள் கவுரவிக்கப்படுவார்கள். மேலும் அவர்கள் கையால் சமூக சேவையாளர்களுக்கு தோரணமலையான் விருதும் வழங்கப்படும். அன்று நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படும். கலை நிகழ்ச்சிகளும் இடம் பெறும்.
இதேபோல் தைப்பூசத் திருவிழாவும் இந்த ஆலயத்தில் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. முருகனின் திருக்கல்யாண வைபவம் நடைபெறும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து வழிபடுவார்கள். காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.