திருமால் பூஜை செய்த திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் கோவில்
திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் கோவில் ஓணம் பண்டிகையோடு தொடர்புடையது என்பதற்கு சான்றாகும்.;
நடுநாட்டு சிவத்தலங்களில் 17-வது சிவத்தலமாக விளங்குவது திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் கோவில். இக்கோவில் கடலூரில் இருந்து பண்ருட்டி செல்லும் பாலூர் சாலையில் சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இக்கோவில் சூரியபகவானால் உண்டாக்கப்பட்டு அவரே பூஜை செய்ததாக வரலாறு உண்டு. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவலாயங்களில் இது 228-வது தேவாரத் தலம் ஆகும்.
தல புராணம்
திருமாணிக்குழி கோவிலில் ஈசன் கருவறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அந்த விளக்கில் உள்ள திரி இறங்கி அணையும் நிலையில் இருந்தது. அப்போது, அந்த விளக்கில் உள்ள எண்ணெயை குடிக்க வந்த எலி ஒன்று எண்ணெயை குடிக்கும்போது, அதன் மூக்கு நுனிபட்டு விளக்கு சுடர்விட்டு பிரகாசமாக எரிந்தது. அறியாமல் எலி செய்த சிவ புண்ணியத்தை கண்டு சிவபெருமான் மனம் நெகிழ்ந்து எலிக்கு அடுத்த பிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாக பிறக்குமாறு அருள்பாலித்தார்.
அதன்படி, பிரகலாதனின் பேரனாக மகாபலி சக்கரவர்த்தி பிறந்தார். அவர் தன் நாட்டு மக்கள் அனைவருக்கும் தான தர்மங்களை செய்து வந்தார். இறுதியில் மிகச் சிறந்த யாகம் ஒன்றை செய்ய முடிவு செய்தார் மகாபலி. இதனால் தேவர்கள் அனைவரும் நடுங்கினர். யாகம் நிறைவு பெற்றால், தேவர் உலகத்தை பிடிக்கும் சக்தி, மகாபலிக்கு கிடைத்துவிடும் என்பது அவர்களின் அச்சமாக இருந்தது. இதனால் மகாவிஷ்ணுவை நாடினர் தேவர்கள்.
அதையடுத்து மகாவிஷ்ணு, வாமன அவதாரம் எடுத்தார். மகாபலி நடத்திய யாகத்திற்கு சென்ற, வாமனர், அவரிடம் 3 அடி மண் கேட்டார். அதற்கு மகாபலியும் ஒப்புக் கொண்டார். ஒரு அடியால் பூமியையும், மற்றொரு அடியால் ஆகாயத்தையும் அளந்த வாமனப் பெருமாள், 3-வது அடியை எங்கே வைக்க? என்று கேட்டார்.
அதற்கு மகாபலி, 3-வது அடியை தன் தலையில் வைக்கும்படி பணிந்து நின்றார். அவர் தலையில் கால் வைத்து பாதாளத்திற்குள் தள்ளினார் மகாவிஷ்ணு. இருப்பினும் மகாபலியின் பக்தியில் உருகிப்போனார் மகாவிஷ்ணு. சிறந்த பக்தனை அழித்த பாவம் நீங்க, இந்தத் தலத்தில் வந்து திருமால் வழிபட்டதாக கூறப்படுகிறது.
எலியாக இருந்து இத்தலத்தில் இறையருளால் மகாபலி சக்ரவர்த்தியாக உயர்வு பெற்றவர், தான் இறந்தாலும் வருடத்திற்கு ஒரு முறை தன் மக்களை காண இறைவனிடம் வேண்டினார். அதற்கு இறைவன் அனுமதி அளித்தார். அதன்படி, அவர் வரும் நாள் ஓணம் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இதில் இக்கோவில் ஓணம் பண்டிகையோடு தொடர்புடையது என்பதற்கு சான்றாகும். இந்த வரலாற்றை எடுத்துரைக்கும் விதமாக இக்கோவில் பிரகாரத்தில் சிற்பங்களும், கல்வெட்டுகளும் உள்ளன.
கோவில் அமைப்பு
கோவில் முகப்பில் கம்பீரமான ராஜகோபுரம் அமைந்துள்ளது. சாமி சன்னிதிக்கு நேர் எதிரே நந்தி உள்ளது. மூலவர் சன்னிதியில் எப்போதும் திரை மூடியே இருக்கும். திரை மூடி இருப்பதன் தத்துவம் பேரின்ப வடிவமாக இறைவன் எழுந்தருளி இருக்கிறார் என்பதாகும். மேலும், இக்கோவிலில் கர்ப்பகிரகமே, பள்ளியறையாக இருப்பதால் தனி பள்ளியறை கிடையாது.
இதுமட்டுமின்றி, இறைவனை விஷ்ணு தொடர்ந்து பூஜை செய்து வருவதாக ஐதீகம். இந்த சிவபூஜையை யாரும் கலைத்து விடக்கூடாது என்பதற்காக சிவபெருமானிடம், விஷ்ணு வரம் கேட்டார். அதன்படி, காவல் புரிவதற்காக 11 ருத்ரர்களில் ஒருவரான குபேர பீம ருத்ரர் உள்ளார். இவர் மூலவர் சன்னிதி முன்புள்ள திரையில் உருவமாக பொறிக்கப்பட்டுள்ளார். இந்த ருத்ரர் எட்டு திக்கிலும் அக்னியை எரியவிட்டு, தன்னுடைய எட்டு கைகளில் ஆயுதங்களை ஏந்தி காவல் புரிகிறார்.
ருத்ரருக்கு முதல் மரியாதை
இதனால், திரையில் உள்ள ருத்ரருக்கு தான் கோவிலில் முதல் மரியாதை. சாமியை தரிசிக்க வேண்டும் என்றால், முதலில் ருத்ரருக்கு தீபாராதனை செய்த பிறகு, மூலவரான வாமனபுரீஸ்வரரை தரிசிக்க முடியும். பொதுவாக அனைத்து சிவன் கோவில்களிலும் பூஜை நேரத்தில் சிவனை அதிக நேரம் தரிசிக்கலாம். ஆனால், இங்கு ஈசனை 2 அல்லது 3 வினாடிகள் மட்டுமே தரிசனம் செய்ய முடியும். அதன்பிறகு, சன்னிதியில் திரை போடப்படுகிறது.
அம்பாள் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறார். உதவி நாயகி என்பது அன்னையின் திருநாமம். கோவிலில் விநாயகர், முருகன், துர்க்கை, நவக்கிரகம் போன்ற சன்னிதிகள் உண்டு.
சிறப்புகள்
இத்தலத்தில் விநாயகருக்கு எதிரில் மூஷிக வாகனம் இல்லை. மேலும், இங்குள்ள தட்சிணாமூர்த்தி, நாகத்தை கையில் ஏந்திய நிலையில் வித்தியாசமான தோற்றத்துடன் காட்சியளிக்கிறார். குருபார்க்க கோடி நன்மை என்பதற்கேற்ப, இங்கு தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை மாலை சாத்தி, வழிபட்டால் ராகு, கேது தோஷம், சர்ப தோஷம் உள்ளிட்டவைகள் நீங்கும் என்பது ஐதீகம்.
துர்க்கையின் பாதத்திற்கு கீழ், எருமை தலை தான் எல்லா கோவில்களிலும் இருக்கும். ஆனால், வாமனபுரீஸ்வரர் கோவிலில் துர்க்கை கையில் கரம் திரும்பி உள்ளதோடு, கதாயுதமும் தாங்கி, தாமரை பீடத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பது சிறப்பாகும்.
பூர்வ ஜென்ம பகை, கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு, ஜாதகத்தில் உள்ள தோஷங்களை நிவர்த்தி செய்ய வாமனபுரீஸ்வரருக்கு பரிகாரம் செய்தால் அனைத்தும் நீங்கும். பிரதோஷத்தன்று சாமியை தரிசித்தால் 16 முறை காசியில் உள்ள இறைவனையும், 8 முறை திருவண்ணாமலை ஈசனையும், 3 முறை சிதம்பரம் நடராஜரையும் தரிசித்த பலன் கிடைக்குமாம். அதே தினத்தில் நந்தியை தரிசித்தால் எல்லா சிவன்கோவில்களுக்கும் 3 முறை சென்று வந்த பலன் கிடைக்கும் என்பது பெரியவர்களின் கூற்றாகும். இந்த கோவில் பிரம்ப ஸ்தலத்தில் 5-வது இடமாகவும், ருத்ர ஸ்தலத்தில் 7-வது இடமாகவும் உள்ளது.
இங்குள்ள இறைவனை வாமனபுரீஸ்வரர், உதவிநாயகர், மாணிக்கவரதர், அருள்புரீஸ்வரர் என்றும், அம்மனை அம்புஜாட்சி, உதவிநாயகி, மாணிக்கவள்ளி, ஞானம்பாள் என்றும் போற்றி வணங்குகிறார்கள்.
பிரசித்தி பெற்ற இத்தலத்தில் உள்ள ஈசனை வழிபட்டால் காசிக்கு சென்ற புண்ணியம் கிடைக்க பெறும் என்பது நம்பிக்கை.