கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்
பசுபதீஸ்வரர் கோவிலில் அலங்காரவல்லி எனும் கிருபாநாயகி சன்னிதி மற்றும் வடிவுடையாள் சன்னிதி என இரண்டு தாயாருக்கும் நந்தி உள்ளது சிறப்புமிக்கதாகும்.
கொங்கு மண்டலத்தில் உள்ள ஏழு சிவத்தலங்களாகிய ஆதி கருவூர், வெஞ்சமாங்கூடலூர், திருமுருகன் பூண்டி, அவினாசி, திருச்செங்கோடு, பவானி, திருப்பாண்டிக்கொடுமுடி என்பனவற்றுள் முதன்மையானதாக உள்ளது ஆதி கருவூர் எனப்படும்(கரூர்) கல்யாண பசுபதீஸ்வர சுவாமி திருக்கோவில். ஆதி கருவூர் என இத்தலம் அழைக்கப்படுவதன் காரணம் உலகம் தோன்றும்போது முதன் முதலாக தோன்றிய ஊர் என்பதாகவும், பிரம்மன் தனது படைப்பு தொழிலை முதல் முதலாக தொடங்கிய இடம் என்பதாகவும் கொள்ளலாம்.
மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் மூன்று சிறப்புக்களையும் உள்ளடக்கியதாக இத்தலம் உள்ளது. முதலில் தோன்றியமையால் ஆதிபுரம் எனவும், பெருமாள் பள்ளிகொண்ட ஊர் என்பதால் பாஸ்கரபுரம் எனவும், சோழர்களால் வெல்லப்பட்ட காலத்தே வீரசோழபுரம் எனவும், வஞ்சி மரங்கள் செறிந்திருந்தமையால் வஞ்சுளாரண்யம் எனவும், மலை-காடு-ஆறு-தீர்த்தம்-நகரம்-கோவில் எனும் ஆறு மங்கல அம்சங்கள் அமையப் பெற்றதால் ஷண்மங்கல ஷேத்ரம் எனவும், ஆ(காமதேனு) வழிபட்டமையால் ஆனிலை எனவும், முதன் முதலில் கரு உருவான (பிரம்மனது படைப்பில் முதல் உயிர்) காரணத்தால் கர்ப்பபுரி எனவும் பல்வேறு பெயர்களால் கருவூர் அழைக்கப்படுகின்றது.
தல புராணம்
பிரம்மன் தானே ஆதிகர்த்தா என்றும், தான் படைப்பு தொழிலை செய்யாவிட்டால் காத்தல், அழித்தல் முதலியவைகளை செய்பவர்களுக்கும் வேலையில்லை என்றெண்ணி மிகுந்த இறுமாப்படைந்தான். பிரம்மனது இறுமாப்பையும், அறியாமையையும் போக்க இறைவன் எண்ணினார். பிரம்மன் படைப்பினை தொடங்கினான். ஒரு உயிரும் உருவாகவில்லை. கர்வம் ஒழிந்தது. சிவனை நோக்கி தவமியற்ற தொடங்கினான். சிவன் கயிலையை அடைந்து தன்னை வணங்கிய காமதேனுவை நோக்கி, நீ நிலவுலகம் சென்று பிரம்மனை போல் படைப்பு தொழில் செய்வாயாக என வரம் அளித்தார்.
தவமியற்றிய பிரம்மனுக்கு காட்சி தந்து, 'ஆம்பிரமா நதிக்கரையில் வஞ்சிவனம் எனப்படும் கருவூரில், என்னை தியானித்து வழிபடுவாயாக' என்று அருளினார். அதன்படி பிரம்மதேவன், ஆம்பிர நதிக்கரையில் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்தார். இதையடுத்து சிவபெருமான், நான்முகன் முன்பு தோன்றி 'யாம் அனைத்து தீமைகளையும் களைந்தோம். இத்தலத்தில் பெருவேள்வி ஒன்று இயற்றி கலைமகளை மணம் செய்து படைப்பு தொழிலையும், இவ்விடத்திலேயே நடத்துவாயாக' என திருவாய் மலர்ந்தருளினார்.
பிரம்மனும் திருஆனிலை தென் திசையில் வஞ்சளேஸ்வரத்தின் மேற்கு பகுதியில் ஆம்பிராவதியின் வடபுறத்தில் தனது பெயரால் பிரம்ம தீர்த்தம் ஏற்படுத்தி வழிபட்டார். பின் வெண்ணெய்மலையின் வடபால் பெரிய வேள்விச்சாலை ஏற்படுத்தி வேள்வி செய்தார். பின்னர் கலைமகளை மணம் முடித்தார். தொடர்ந்து அந்தப்பகுதியில் சிவபெருமானுக்கு திருக்கோவில் ஒன்றையும் அமைத்தார். அக்கோவிலின் தென்கிழக்கு திசையில் காளி கோவில் ஒன்றும், அய்யனார் கோவில் ஒன்றும் கட்டுவித்தார் (காளி கோவிலே கருவறையின் காவல் தெய்வமான வஞ்சியம்மன்). மேருமலைக்கு நிகரான திருத்தேர் செய்து மூவுலகத்தவரையும் வரச்செய்து பங்குனி உத்திர திருவிழாவினை நடத்தி முடித்து தேவர்கள் போற்ற நாமகளுடன் தனது உலகமான சத்யலோகம் சென்றடைந்தார்.
காமதேனு மண்ணுலகம் வந்து தவம் செய்ய இடம் தேடி அலைகையில், எதிர்ப்பட்ட நாரத முனிவரிடம் கேட்க, அவர் ஆம்பிர நதிக்கரையில் வஞ்சி வனம் எனும் தலமே தவத்திற்கு சிறந்தது என்று கூறினார். காமதேனு வராககிரி தொடங்கி சிவத்தலங்களை வழிபட்டவாறே வஞ்சிவனம் வந்து தவம் செய்ய தொடங்கியது. ஒரு நாள் ஆகாயத்தில் இருந்து ஒரு அசரீரி ஒலித்தது. 'காமதேனுவே! வஞ்சி வனத்துள் ஒரு புற்றிடத்தில், பாதாளத்தில் நின்று தோன்றும் ஆதிலிங்கம் எனும் மகாலிங்கம் உள்ளது. அது சுயம்பு மூர்த்தியாகும். அதனை பூஜித்து வருவாயாக!' என்றது.
காமதேனு வழிபாடு
காமதேனுவும் அவ்வாறே சென்று ஆதிலிங்கம் கண்டு தனது மடியில் இருந்த பாலை சொரிந்து தினமும் வழிபாடு செய்து வந்தது. ஒரு நாள் அதன் கால் குளம்பு இறைவனின் திருமுடியில் இடப்பாகத்தில் பட்டு விடவே, அதில் இருந்து ரத்தம் வழிய ஆரம்பித்தது. அதை கண்ணுற்ற காமதேனு பதைபதைத்தது.
அப்போது இறைவன் தோன்றி 'காமதேனுவே! வருந்தாதே! இது உன் பிழையன்று. எமது திருவிளையாடலே! நீ நம்மை வழிபட்டமையால், பசுபதி நாதர் என்ற பெயரால், என்னை புவனங்கள் மூன்றும் போற்றும்' என்றார்.
தனது திருவுளம் இருப்பின் பிரம்மன் மட்டுமல்ல, ஒரு பசுவும் படைப்பு தொழில் செய்யும் என்பதை உணர்த்தவே இத்திருவிளையாடல் நடத்தப்பெற்றது. பிறகு பிரம்மனிடம் படைப்பு தொழிலை ஒப்படைத்து விட்டு காமதேனுவிற்கு சுவர்க்கம் சென்று வாழ்வாயாக என்று சிவபெருமான் கூறினார்.
ஆனிலையப்பரின் மூத்த ஆதிசக்தியாக இங்கு கிருபாநாயகி காட்சி தருகின்றார். கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்தரும் கிருபாநாயகியின் திருவடியின் கீழ் சக்ர பீடம் பிரதிஷ்டை உள்ளது. மேலும் அதன்கீழ் சிங்க உருவம் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
கோவில் அமைப்பு
கோவிலின் ராஜகோபுரம் ஏழு நிலைகளுடன் 108 அடி உயரம் கொண்டதாக உள்ளது. இதில் திருவிளையாடல் புராணம், தசாவதாரம் மற்றும் தெய்வங்கள் சுதை சிற்பங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளன. பங்குனி மாதத்தில் 14, 15, 16 ஆகிய தேதிகளில் சூரியன் தனது கதிர்களால் சிவனை வழிபடும் அமைப்பாக இக்கோவில் ராஜகோபுரம் அமைந்துள்ளது.
ராஜகோபுரத்தை கடந்து சென்றால் சிறிய கோபுரம் ஐந்து நிலைகளுடன் உள்ளது. இரண்டிற்கும் இடைப்பட்ட இடத்தில் விளக்கேற்றும் வகையில் கல் தூண் ஒன்று இருக்கிறது. இதன் நான்கு பகுதிகளிலும் புடைப்பு சிற்பங்கள் உள்ளன. தெற்கு நோக்கியவாறு விநாயகரும், கிழக்கு நோக்கியவாறு உள்ள சிற்பங்கள் 12 நாகங்களால் அமைக்கப்பெற்று, நாகபந்தரின் கீழ் காமதேனு தனது நாவால் சிவலிங்கத்தை வருடி, பால்சொரியும் காட்சியமைப்பில் உள்ளது.
இந்த கோவிலில் அம்மனுக்கென்று தனியாக பிரகாரம் உள்ளது. கிழக்கு நோக்கி அலங்காரவல்லி எனும் கிருபாநாயகியின் சன்னிதி, பிரகாரம் வரும் அமைப்புடன் உள்ளது. தெற்கு நோக்கியவாறு சவுந்தரநாயகி எனும் வடிவுடையாளின் சன்னிதியும், அதனையடுத்து இறைவனது பள்ளியறையும் அமைந்துள்ளது. இரண்டு தாயாருக்கும் நந்தி உள்ளது சிறப்புமிக்கதாகும்.
கோவிலில் சிவலிங்கத்திற்கு நேர் எதிரில், கிழக்கில் இருந்து மேற்காக முதலில் கொடிமரமும், பலிபீடமும், அதனையடுத்து நந்திகேஸ்வரரின் திருமேனியும் உள்ளன. மூலவர் இருக்கும் கருவறையை சுற்றி நர்த்தன விநாயகர், தென்முகக்கடவுள், அர்த்தநாரீஸ்வரர், பிரம்மதேவர், துர்க்கா பரமேஸ்வரி சன்னிதிகள் உள்ளன. மேலும் நவக்கிரகங்கள், வைரவர் முதலிய திருவுருவங்களும் இங்கு அமைந்துள்ளன.
இங்கு உள்ள ஆனிலையெனும் லிங்க வடிவமானது, முற்றிலும் சுயம்பு மூர்த்தியாகும். சுயம்பு லிங்கமானது வடபுறம் சிறிது சாய்ந்தாற்போல் உள்ளது. இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், ஏற்றுக்கொள்ளப்படுவது இரண்டு காரணங்களாகும். ஒன்று கதிரவனின் வழிபாட்டை பங்குனியில் ஏற்றுக்கொள்ளும் பொருட்டு சாய்ந்திருக்கிறது என்று கூறப்படுவது. மற்றொன்று தைப்பூசத்தன்று தன்னுள்ளே ஐக்கியமான சித்தர் கருவூராரை தனக்கு இடப்புறத்தே அமர்த்தியதால். காமதேனு வழிபடும்போது குளம்பு சிவலிங்கத்தின் மீது பட்டதால் ஏற்பட்ட குழிவான தழும்பு வடிவம் உள்ளதை காணலாம்.