மும்மூர்த்திகள் அருள்பாலிக்கும் கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில்

கொடுமுடி மகுடேஸ்வரர் ஆலயத்தில் மும்மூர்த்திகளுக்கும் தனித்தனியாக மூன்று கோபுரங்களும், தனித்தனியாக மூன்று சன்னதிகளும் உள்ளன.

Update: 2024-11-29 00:30 GMT

ஈரோடு மாவட்டம் கொடுமுடி என்னும் ஊரில் அமைந்திருக்கிறது மகுடேஸ்வரர் கோவில். திருவண்ணாமலையில் சிவனே மலையாக இருப்பது போல, இங்கு மலையின் முடியாக சிவன் இருக்கிறார் என்று கருதப்படுகிறது. இதனாலேயே இது கொடுமுடி என்ற பெயரை பெற்றதாம். இங்கு எழுந்தருளியிருக்கும் சிவபெருமான் மகுடேஸ்வரர் என்ற திருநாமத்துடனும், தாயார் வடிவுடை நாயகி என்ற திருநாமத்துடனும் அழைக்கப்படுகின்றனர்.

தல புராணம்

சிவபெருமானின் திருக்கல்யாணத்தை காண்பதற்காக படைக்கும் கடவுளான பிரம்மனும், காக்கும் கடவுளான விஷ்ணுவும் இந்த தலத்திற்கு வந்ததாக புராணங்கள் கூறுகின்றன. அதேபோல் ஒரு முறை ஆதிசேஷன் மற்றும் வாயு பகவானுக்கிடையில் யார் பெரியவர் என்ற வாக்குவாதம் ஏற்பட்டபோது தங்களின் பலத்தை காண்பிக்க இருவருக்கும் இடையே ஒரு போட்டி ஏற்பட்டது. அப்போது இந்திரன் விதித்த போட்டி விதிமுறைகளின்படி, ஆதிசேஷன் மேரு மலையை பற்றிக்கொள்ள, வாயு பகவானோ தனது காற்றின் விசையால் ஆதிசேஷனை எதிர்த்து போரிட வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி, வாயு பகவான் தன் முழு பலத்தையும் செலுத்த, மேருமலையின் ஒரு பகுதியானது சிறு சிறு துண்டுகளாக சிதறி தென் திசையின் பல பாகங்களில் வந்து விழுந்தது. அவ்வாறு சிதறிய ஒவ்வொரு கல்லும் சிவலிங்கமாக காணப்பட்டதாகவும், அவற்றில் ஒன்று தான் இந்த கொடுமுடி மகுடேஸ்வரர் ஆலயம் என்றும் வரலாறு விளக்குகிறது.

மும்மூர்த்திகள்

இக்கோவில் காவிரி ஆற்றின் மேற்கரையில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. 640 அடி நீளமும் 484 அடி அகலமும் கொண்டுள்ளது. மும்மூர்த்திகளுக்கும் தனித்தனியாக மூன்று கோபுரங்களும், தனித்தனியாக மூன்று சன்னதிகளும் மூன்று வாயில்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன.

கோவிலினுள் சென்ற உடனே கொடிமரம் உள்ளது. கொடிமரத்தையடுத்து நந்தீஸ்வரர் காட்சியளிக்கிறார். மேலும் இந்த சன்னதியில் நவகிரகங்கள், தக்ஷிணாமூர்த்தி, சூரியன், 63 நாயன்மார்கள், முருகப்பெருமான் ஆகியோர் வீற்றிருக்கின்றனர். இன்னும் சிறப்பாக இந்த கோவிலின் மேற்கூரையில் ராசி சக்கரங்கள் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளன. சிவபெருமான் சன்னதியின் வலதுபுறத்தில் வடிவுடையம்மன் சன்னதி இடம்பெற்றிருக்கிறது. அம்பாள் சன்னதியின் உட்பிரகாரத்தில் வல்லப கணபதி, சோழீஸ்வரர், விசுவேசர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி ஆகியோர் உள்ளனர்.

 

வீரநாராயணப் பெருமாள்

இங்கு மூலவர் வீரநாராயணப் பெருமாளை பார்த்தபடி கருடாழ்வார் இருக்கிறார். மூலவர் பெருமாள் சயன கோத்தில், அற்புதமாக காட்சியளிக்கிறார். மேலும் 12 ஆழ்வார்கள், பரமபதநாதர், ராமானுஜர், நாகர், வெங்கடாசலபதி, ஆஞ்சநேயர் ஆகியோரும் உள்ளனர். இக்கோவிலின் ஆஞ்சநேயர் சற்று வித்தியாசமாக கோர பல்லில் காட்சியளிக்கிறார். இங்கு மகாலட்சுமிக்கு தனி சன்னதியும் அமைக்கப்பட்டுள்ளது.

மகுடேஸ்வரர், பிரம்மன்

 

 பிரம்மன்

இங்கு பிரம்மா, கர்ம காரகன், ஆயுள்காரகன் என்று அழைக்கப்படும் சனிபகவானுக்கு உகந்த வன்னிமரத்தடியில் எங்கும் காணப்படாத மூன்று முகங்களை கொண்டு எழுந்தருளியுள்ளார். இத்திருத்தலத்தில் சனிபகவான் நின்ற நிலையில் இருக்கிறார். இந்த சனிபகவானின் சன்னதிக்கு நேர் எதிரே அவருடைய வாகனமான காக்கை இருக்கிறது. இந்த காகத்திற்கு முன்பு பக்தர்கள் எள் பொட்டலங்களை கொண்டு தங்களுக்கு தாங்களே தலைக்கு மேல் சுற்றி நெருப்பில் போடுகின்றனர். இப்படி செய்வதால் சனி தோஷம் நிச்சயம் நீங்கும் என்று நம்பப்படுகிறது.

ஈரோட்டில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள இந்த ஆலயம், முற்பிறவியில் செய்த பாவங்களையும், இப்பிறவியில் செய்த பாவங்களையும் போக்கும் ஸ்தலம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்