களைகட்டியது விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்.. வீட்டில் பூஜை செய்வது எப்படி?
பூஜித்த விநாயகரை நீரில் கரைக்கும்வரை வீட்டில் வைத்து தொடர்ந்து பூஜை செய்ய வேண்டும்.
முழுமுதற் கடவுளான பிள்ளையார் அவதரித்த தினமான விநாயகர் சதுர்த்தி இன்று உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதிலும் கொண்டாட்டம் களைகட்டி உள்ளது. இந்தியாவின் பல்வேறு இடங்களில், விநாயகர் சதுர்த்தி விழா இன்று தொடங்கி 17-ம் தேதி முடிய 10 நாள் விழாவாக கொண்டாடப்படும். பல்வேறு ஆன்மிக அமைப்புகள் சார்பில் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை செய்யப்படுகின்றன. வீடுகளிலும் தங்கள் வசதிக்கு ஏற்ப பிள்ளையார் சிலைகளை வாங்கி பூஜை செய்கிறார்கள்.
விநாயகர் சதுர்த்திக்கு புதிய விநாயகர் சிலையை வாங்கி, அதற்கு 3 நாட்கள் முதல் ஒரு வாரம்வரை பூஜை செய்து, பின்னர் நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம்.
வீட்டில் பூஜை செய்வது எப்படி?
விநாயகர் சதுர்த்தி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி சுத்தமான ஆடை அணிந்துசென்று, விநாயகரை வாங்கிவந்து, சிவப்பு அல்லது மஞ்சள் துணியால் அலங்கரித்து, மேடை அமைத்து அதில் அமரவைக்க வேண்டும். பிறகு விநாயகரை அலங்கரித்து, அவருக்கு உரிய மந்திரங்களை சொல்லி, பாடல்களை பாடி மனமுருக வேண்டிக்கொள்ளலாம். மேலும் விநாயகருக்கு பிடித்த அவல், சுண்டல், பொரி, கொழுக்கட்டை, பழங்கள் உள்ளிட்டவற்றை படைத்து வழிபடலாம். விநாயகர் அகவல், காப்பு, புராணம் ஆகியவற்றை படிக்கலாம்.
விநாயகர் சதுர்த்தி நாளில் விரதம் இருப்பவர்கள் ஒருவேளை உணவு உண்டு, இரவில் பால், பழம் மட்டும் சாப்பிட வேண்டும். அன்று மாலையில் சந்திரனை பார்த்தல் கூடாது. விநாயகருக்கு பூஜை முடிந்த பின் சந்திரனையும் வணங்குதல் நல்லது.
விநாயகர் சதுர்த்தி நாளில் விநாயகரை தூய மனதுடன் வழிபட்டால் வாழ்க்கையில் செல்வம், செழிப்பு, மகிழ்ச்சி ஆகியவை கிடைக்கும் என்பது நம்பிக்கை.
பூஜித்த விநாயகரை நீரில் கரைக்கும்வரை வீட்டில் வைத்து தொடர்ந்து பூஜை செய்ய வேண்டும்.
இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி பரவலாக கொண்டாடப்படுகிறது. இருப்பினும் மராட்டியம், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்காளம், ராஜஸ்தான், கோவா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இந்து அமைப்புகள் சார்பில் வெகு விமரிசையாக விழா நடைபெறுதை காணலாம். இந்தியா தவிர நேபாளம், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, மொரீஷியஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் இந்த விழா கொண்டாடப்படுகிறது.