பொன்னம்பலமேட்டில் மகர ஜோதியாக காட்சியளித்த அய்யப்பன்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
பொன்னம்பல மேட்டில் தெரியும் மகரஜோதியை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்திருந்தனர்.;
சபரிமலை,
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகர விளக்கை முன்னிட்டு கடந்த மாதம் நடை திறக்கப்பட்டது. தினசரி சாமி அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம், புஷ்பாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்று வந்தது.
இந்த சூழலில் மகர ஜோதி தரிசனத்திற்காக அய்யப்பன் விக்கிரகத்தில் அணிவிக்கும் ஆபரணங்கள் பந்தளம் அரண்மனையிலிருந்து கொண்டு வரப்பட்டது. நேற்று முன்தினம் அதிகாலை, 5 மணி முதல் பந்தளம் வலியக்கோயிக்கல் சாஸ்தா கோவிலில் பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட்ட திருவாபரணங்களை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். மதியம், பின்னர் திருவாபரண பவனி புறப்படுவதற்கான ஏற்பாடுகள் தொடங்கின. பேழைகள் அடைக்கப்பட்டு கோவிலில் உச்ச பூஜை நடந்தது.
தொடர்ந்து தீபாராதனைக்கு பின்னர் பந்தளம் ராஜ பிரதிநிதி ராஜராஜ வர்மாவுக்கு உடைவாள் வழங்கப்பட்டதும், திருவாபரண பேழைகள் கங்காதரன் குருசாமி குழுவினரின் தலையில் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, கோவிலில் இருந்து திருவாபரண பேழைகள் வெளியே வந்த போது, ஆகாயத்தில் கருடன் வட்டமிட்டது. பக்தர்களின் சரண கோஷம் விண்ணை தொடும் அளவு எழுந்தது. தொடர்ந்து, திருவாபரண பவனி புறப்பட்டது.
மகரஜோதி பூஜைக்கு முன்னோடியாக நடைபெறும் சுத்தி கிரியைகள் சன்னிதானத்தில் தொடங்கியது. நேற்று முன்தினம் மாலை தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் சுத்திகிரியை பூஜைகளை நடத்தினார். இன்று மதியம் உச்ச பூஜைக்கு முன்னால் பிம்பசுத்தி பூஜைகள் நடைபெற்றது.
இதையொட்டி, எருமேலியில் அம்பலப்புழா மற்றும் ஆலங்காடு பக்தர்களின் பேட்டை துள்ளல் நடைபெற்றது. அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் இன்று மாலை சந்நிதானத்தை வந்தடைந்தது. இந்த ஊர்வலத்துக்கு சரங்குத்தியில் தேவசம்போர்டு சார்பில் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து மகர விளக்கு பூஜைக்கு முன்னதாக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்ட நிலையில் மகரஜோதி ஏற்பட்டது.
இந்நிலையில் சபரிமலையில் மகரவிளக்கு பூஜையை ஒட்டி அய்யப்பனுக்கு திருவாபரணம் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதனையடுத்து பொன்னம்மபல மேட்டில் மகர ஜோதியாக சுவாமி அய்யப்பன் பக்தர்களுக்கு 3 முறை காட்சி அளித்தார்.
அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் "சுவாமியே சரணம் அய்யப்பா" என்று விண்ணதிர சரண கோஷம் முழங்கினர். முன்னதாக பொன்னம்பல மேட்டில் தெரியும் மகரஜோதியை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்திருந்தனர்.
மகரஜோதியை முன்னிட்டு கூட்ட நெரிசலை தடுக்க இந்த ஆண்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. சபரிமலை பொன்னம்பலமேட்டில் மகரஜோதி காண சன்னிதானம் மற்றும் நிலக்கல், பம்பை, புல்லு மேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் காத்திருந்தநிலையில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். .