இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 18-12-2024

Update: 2024-12-18 05:45 GMT
Live Updates - Page 4
2024-12-18 09:31 GMT

ஜமைக்கா நாட்டில் நடந்த துப்பாக்கிசூட்டில் நெல்லையை சேர்ந்த இளைஞர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2 பேர் காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. பிராவிடன்ஸ் தீவில் சூப்பர் மார்க்கெட்டில் இந்திய நேரப்படி அதிகாலை 1.30 க்கு துப்பாக்கிசூடு நடந்துள்ளது. கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிசூட்டில் நெல்லை விக்னேஷ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. 

2024-12-18 09:26 GMT

தென்மேற்கு வங்க்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றுள்ள நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலையில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் தேங்கிய மழைநீரால் வாகனஓட்டிகள் அவதி அடைந்தனர்.

2024-12-18 09:17 GMT

அம்பேத்கர் குறித்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேச்சு காரணமாக எழுந்த கடும் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

2024-12-18 09:16 GMT

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை ஆய்வு செய்யும் நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் இடம்பெற பிரியங்கா காந்தியின் பெயரை காங்கிரஸ் பரிந்துரை செய்துள்ளது.

2024-12-18 09:11 GMT

மாநிலங்களவை உறுப்பினரும் முன்னாள் மத்திய மந்திரியுமான சரத்பவார் விவசாய சங்க குழு பிரதிநிதிகளுடன் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

2024-12-18 09:07 GMT

கேரம் வீராங்கனை காசிமாவுக்கு ரூ.1 கோடி பரிசு

அமெரிக்காவில் நடைபெற்ற போட்டியில் பட்டம் வென்ற கேரம் வீராங்கனை காசிமாவுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.1 கோடி பரிசு வழங்கப்பட்டது. காசிமாவுக்கு ரூ.1 கோடிக்கான காசோலையை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். வழங்கினார். வீராங்கனைகள் மித்ரா, நாகஜோதி ஆகியோருக்கு தலா ரூ.50 லட்சம் வழங்கினார். அரசு பரிசுத்தொகை அறிவிக்கவில்லை என காசிமாவின் தந்தை வேதனை தெரிவித்த நிலையில் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

2024-12-18 08:31 GMT

நாடாளுமன்ற மாநிலங்களவையில் அரசியல் சாசனம் பற்றிய 2 நாள் விவாதத்தின் முடிவாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று பேசும்போது, அம்பேத்கரை பற்றி சர்ச்சையாக பேசினார் என கூறப்படுகிறது. இந்த நிலையில், நாடாளுமன்றம் இன்று கூடியதும் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அம்பேத்கரின் பெயருக்கு பதிலாக கடவுள் பெயரை கூறலாம் என அமித்ஷா பேசினார் என்று குற்றச்சாட்டு கூறப்பட்டது. அமித்ஷா தன்னுடைய பேச்சின்போது, அம்பேத்கரை புண்படுத்தி விட்டார் என எம்.பி.க்கள் கூறினர். அமித்ஷா, அவருடைய பேச்சுக்கு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்நிலையில், அம்பேத்கரை அவமதித்த காங்கிரசின் இருண்ட வரலாற்றையே நாடாளுமன்றத்தில் அமித்ஷா அம்பலப்படுத்தினார் என பிரதமர் மோடி கருத்து தெரிவித்து உள்ளார். அம்பேத்கரை அமித்ஷா அவமதித்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ள நிலையில், பிரதமர் மோடி தொடர்ந்து கூறும்போது, காங்கிரஸ் அம்பேத்கரை ஒரு முறை அல்ல, இரண்டு முறை தேர்தலில் தோற்கடித்தது.

அம்பேத்கருக்கு எதிராக ஜவகர்லால் நேரு பிரசாரத்தில் ஈடுபட்டார். ஆனால், நாங்கள் அம்பேத்கரை முழுமையாக மதிக்கிறோம் என கூறியுள்ளார். அமித்ஷா கூறிய உண்மைகளால் காங்கிரஸ் கட்சியினர் திகைத்து போய் விட்டனர். அவர்கள் தற்போது நாடகங்களில் ஈடுபடுகிறார்கள். மக்களுக்கு உண்மை தெரியும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.

2024-12-18 07:49 GMT

காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி வலுப்பெற்று உள்ளது.

அது, அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரை நோக்கி நகர கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

2024-12-18 07:33 GMT

பொங்கல் சிறப்பு தொகுப்பு விற்பனை தொடக்கம்

கூட்டுறவு விற்பனை மையங்களில் பொங்கல் சிறப்பு தொகுப்பு விற்பனையை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார். இதில், பொங்கல் கொண்டாடுவதற்கான பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

2024-12-18 07:13 GMT

தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவருடைய எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு உள்ள பதிவில், அதிக பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்.

நாட்டைப் பற்றியும் மக்களைப் பற்றியும் அரசியல்சட்டத்தின் பாதுகாப்பு பற்றியும் கவலைப்படுவோர் புரட்சியாளர் அம்பேத்கர் பெயரைத்தான் சொல்வார்கள்! சொல்ல வேண்டும்! என தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்