இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 18-12-2024

Update: 2024-12-18 05:45 GMT
Live Updates - Page 5
2024-12-18 07:07 GMT

நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே அதானி விவகாரம், சம்பல் வன்முறை, மணிப்பூர் விவகாரம் குறித்து அவையில் விவாதம் நடத்த வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால், அவை நடவடிக்கைகள் முடங்கின. இந்நிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவையில் அரசியல் சாசனம் பற்றிய 2 நாள் விவாதத்தின் முடிவாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று பேசும்போது, அம்பேத்கரை பற்றி சர்ச்சையாக பேசினார் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், நாடாளுமன்றம் இன்று கூடியதும் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி, அக்கட்சியின் தலைவர் மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரான மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் எம்.பி.க்கள் குமாரி செல்ஜி மற்றும் கே.சி. வேணுகோபால் மற்றும் தி.மு.க. எம்.பி. டி.ஆர். பாலு உள்ளிட்ட பிற எதிர்க்கட்சி எம்.பி.க்களும் அம்பேத்கரின் புகைப்படங்களை கைகளில் ஏந்தியபடி கோஷம் எழுப்பினர். அமித்ஷா, அவருடைய பேச்சுக்கு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர்.

2024-12-18 06:51 GMT

எதிர்க்கட்சிகள் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு

2024-12-18 06:39 GMT

விழுப்புரத்தில் 21-ந்தேதி அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்; எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், சமீபத்தில் உருவான பெஞ்சல் புயலால் பெய்த கனமழையாலும், எவ்வித முன்அறிவிப்பும் இன்றி நள்ளிரவில் திடீரென சாத்தனூர் அணையில் இருந்து 1 லட்சத்து 68 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறந்து விட்டதாலும் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் உடனடியாக நிவாரண உதவிகளை வழங்கிட வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழக விழுப்புரம் மாவட்டத்தின் சார்பில், 21.12.2024 சனிக்கிழமை காலை 10 மணியளவில், விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில், கழக அமைப்பு செயலாளரும், விழுப்புரம் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம், தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

தி.மு.க. அரசின் அலட்சிய போக்கை கண்டித்து நடைபெற உள்ள இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், விவசாய பெருமக்கள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

2024-12-18 06:04 GMT

தமிழக கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திர அஸ்வின் (வயது 38) ஓய்வு அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். பந்து வீச்சில் மட்டுமின்றி பேட்டிங்கிலும் சிறப்பாக பங்காற்றியவர் அஸ்வின். அவர் சர்வதேச போட்டிகளில் மொத்தம் 765 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 6 சதங்கள் உள்பட 3,503 ரன்கள் எடுத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த ஆட்டங்களில் 300 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தவர்.

2025-ம் ஆண்டில் ஐ.பி.எல். போட்டிகளில், சென்னை அணிக்காக அஸ்வின் விளையாட உள்ளார்.

2024-12-18 05:55 GMT

சற்று குறைந்த தங்கம் விலை

இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.57,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.7,135-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்