இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 18-12-2024
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் அரசியல் சாசனம் பற்றிய 2 நாள் விவாதத்தின் முடிவாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று பேசும்போது, அம்பேத்கரை பற்றி சர்ச்சையாக பேசினார் என கூறப்படுகிறது. இந்த நிலையில், நாடாளுமன்றம் இன்று கூடியதும் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அம்பேத்கரின் பெயருக்கு பதிலாக கடவுள் பெயரை கூறலாம் என அமித்ஷா பேசினார் என்று குற்றச்சாட்டு கூறப்பட்டது. அமித்ஷா தன்னுடைய பேச்சின்போது, அம்பேத்கரை புண்படுத்தி விட்டார் என எம்.பி.க்கள் கூறினர். அமித்ஷா, அவருடைய பேச்சுக்கு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்நிலையில், அம்பேத்கரை அவமதித்த காங்கிரசின் இருண்ட வரலாற்றையே நாடாளுமன்றத்தில் அமித்ஷா அம்பலப்படுத்தினார் என பிரதமர் மோடி கருத்து தெரிவித்து உள்ளார். அம்பேத்கரை அமித்ஷா அவமதித்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ள நிலையில், பிரதமர் மோடி தொடர்ந்து கூறும்போது, காங்கிரஸ் அம்பேத்கரை ஒரு முறை அல்ல, இரண்டு முறை தேர்தலில் தோற்கடித்தது.
அம்பேத்கருக்கு எதிராக ஜவகர்லால் நேரு பிரசாரத்தில் ஈடுபட்டார். ஆனால், நாங்கள் அம்பேத்கரை முழுமையாக மதிக்கிறோம் என கூறியுள்ளார். அமித்ஷா கூறிய உண்மைகளால் காங்கிரஸ் கட்சியினர் திகைத்து போய் விட்டனர். அவர்கள் தற்போது நாடகங்களில் ஈடுபடுகிறார்கள். மக்களுக்கு உண்மை தெரியும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.
காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி வலுப்பெற்று உள்ளது.
அது, அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரை நோக்கி நகர கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
பொங்கல் சிறப்பு தொகுப்பு விற்பனை தொடக்கம்
கூட்டுறவு விற்பனை மையங்களில் பொங்கல் சிறப்பு தொகுப்பு விற்பனையை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார். இதில், பொங்கல் கொண்டாடுவதற்கான பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவருடைய எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு உள்ள பதிவில், அதிக பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்.
நாட்டைப் பற்றியும் மக்களைப் பற்றியும் அரசியல்சட்டத்தின் பாதுகாப்பு பற்றியும் கவலைப்படுவோர் புரட்சியாளர் அம்பேத்கர் பெயரைத்தான் சொல்வார்கள்! சொல்ல வேண்டும்! என தெரிவித்து உள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே அதானி விவகாரம், சம்பல் வன்முறை, மணிப்பூர் விவகாரம் குறித்து அவையில் விவாதம் நடத்த வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால், அவை நடவடிக்கைகள் முடங்கின. இந்நிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவையில் அரசியல் சாசனம் பற்றிய 2 நாள் விவாதத்தின் முடிவாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று பேசும்போது, அம்பேத்கரை பற்றி சர்ச்சையாக பேசினார் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், நாடாளுமன்றம் இன்று கூடியதும் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி, அக்கட்சியின் தலைவர் மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரான மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் எம்.பி.க்கள் குமாரி செல்ஜி மற்றும் கே.சி. வேணுகோபால் மற்றும் தி.மு.க. எம்.பி. டி.ஆர். பாலு உள்ளிட்ட பிற எதிர்க்கட்சி எம்.பி.க்களும் அம்பேத்கரின் புகைப்படங்களை கைகளில் ஏந்தியபடி கோஷம் எழுப்பினர். அமித்ஷா, அவருடைய பேச்சுக்கு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர்.