28-ம் தேதி பா.ம.க. பொதுக்குழு கூட்டம் - அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு

2025-ல் மேற்கொள்ளப்பட வேண்டிய பணித்திட்டங்கள் குறித்து பொதுக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-12-18 06:48 GMT

கோப்புப்படம்

சென்னை,

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டம், "2024-ம் ஆண்டுக்கு விடை கொடுப்போம்; 2025-ம் ஆண்டை வரவேற்போம்" என்ற தலைப்பில் டிசம்பர் 28-ம் தேதி நடைபெறவுள்ளது. புதுச்சேரி நாவற்குளம் நெடுஞ்சாலையில், சுங்கச்சாவடி அருகில் உள்ள சங்கமித்ரா திருமண அரங்கத்தில் 28.12.2024 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு புத்தாண்டு பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெறும்.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் முன்னிலையில் நடைபெறும் சிறப்பு பொதுக்குழு கூட்டத்திற்கு கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையேற்பார். கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே. மணி, பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன், பொருளாளர் திலகபாமா ஆகியோர் பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். இக்கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகளும், பா.ம.க.வின் பல்வேறு அணிகள், வன்னியர் சங்கம், சமூக முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட துணை அமைப்புகள் ஆகியவற்றின் அனைத்து நிலை நிர்வாகிகளும், சிறப்பு அழைப்பாளர்களும் பங்கேற்பர்.

இந்தக் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களுடன் நிறுவனர் ராமதாஸ் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக் கொள்வார். 2024-ம் ஆண்டில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்ட கட்சி மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்படுவதுடன், 2025-ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணித்திட்டங்கள் குறித்து இந்தப் புத்தாண்டு சிறப்புப் பொதுக்குழு கூட்டத்தில் விரிவாக விவாதித்து முடிவெடுக்கப்படவுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்