நாடாளுமன்ற மாநிலங்களவையில் அரசியல் சாசனம் பற்றிய 2... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 18-12-2024

நாடாளுமன்ற மாநிலங்களவையில் அரசியல் சாசனம் பற்றிய 2 நாள் விவாதத்தின் முடிவாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று பேசும்போது, அம்பேத்கரை பற்றி சர்ச்சையாக பேசினார் என கூறப்படுகிறது. இந்த நிலையில், நாடாளுமன்றம் இன்று கூடியதும் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அம்பேத்கரின் பெயருக்கு பதிலாக கடவுள் பெயரை கூறலாம் என அமித்ஷா பேசினார் என்று குற்றச்சாட்டு கூறப்பட்டது. அமித்ஷா தன்னுடைய பேச்சின்போது, அம்பேத்கரை புண்படுத்தி விட்டார் என எம்.பி.க்கள் கூறினர். அமித்ஷா, அவருடைய பேச்சுக்கு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்நிலையில், அம்பேத்கரை அவமதித்த காங்கிரசின் இருண்ட வரலாற்றையே நாடாளுமன்றத்தில் அமித்ஷா அம்பலப்படுத்தினார் என பிரதமர் மோடி கருத்து தெரிவித்து உள்ளார். அம்பேத்கரை அமித்ஷா அவமதித்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ள நிலையில், பிரதமர் மோடி தொடர்ந்து கூறும்போது, காங்கிரஸ் அம்பேத்கரை ஒரு முறை அல்ல, இரண்டு முறை தேர்தலில் தோற்கடித்தது.

அம்பேத்கருக்கு எதிராக ஜவகர்லால் நேரு பிரசாரத்தில் ஈடுபட்டார். ஆனால், நாங்கள் அம்பேத்கரை முழுமையாக மதிக்கிறோம் என கூறியுள்ளார். அமித்ஷா கூறிய உண்மைகளால் காங்கிரஸ் கட்சியினர் திகைத்து போய் விட்டனர். அவர்கள் தற்போது நாடகங்களில் ஈடுபடுகிறார்கள். மக்களுக்கு உண்மை தெரியும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.

Update: 2024-12-18 08:31 GMT

Linked news