டெல்லியில் சுவர் இடிந்து விழுந்து விபத்து: 3 தொழிலாளர்கள் பலி

டெல்லியில் மழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2024-06-29 06:18 GMT

புதுடெல்லி,

டெல்லியில் கடந்த மாதம் முழுவதும் கடுமையான வெப்பம் சுட்டெரித்த நிலையில், கடந்த 2 நாட்களாக தொடர்ந்து இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே நேற்று வசந்த் விஹார் பகுதியில் கட்டுமான பணிக்காக தோண்டப்பட்டு இருந்த அஸ்திவாரக் குழியின் அருகே தொழிலாளர்கள் சிலர் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு இருந்த சுவர் இடிந்து விழுந்தது. இதில் 3 தொழிலாளிகள் உயிருடன் மண்ணில் புதைந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினரும், தேசிய பேரிடர் மீட்புப்படையினரும் மீட்புப்பணிகளை துவக்கினர்.

இந்நிலையில், இடிபாடுகளில் இருந்து 3 தொழிலாளர்களின் உடல்கள் இன்று காலை மீட்கப்பட்டதாக தீயணைப்புத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். இதில் உயிரிழந்தவர்கள் சந்தோஷ் குமார் யாதவ் (19), சந்தோஷ் (38) ஆகிய 2 தொழிலாளிகளில் அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் ஒருவரின் அடையாளம் கண்டறியப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் கனமழை காராணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக, டெல்லி விமான நிலைய கூரை விழுந்ததில் ஒருவரும், பிரேம் நகர் பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவரும், நியூ உஸ்மான்பூர் மற்றும் ஷாலிமார் பாக் ஆகிய இடங்களில் நீரில் மூழ்கி 3 பேர்களும் அடங்குவர்.

Tags:    

மேலும் செய்திகள்