புதிய குற்றவியல் சட்டத்தில் போலீஸ் காவலில் எடுக்கும் நாட்கள் நீட்டிப்பா? அமித்ஷா விளக்கம்

தாமதத்துக்குப் பதிலாக, இனி விரைவான விசாரணை மற்றும் நீதி கிடைக்கும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.

Update: 2024-07-01 13:08 GMT

புதுடெல்லி,

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட காலனியாதிக்க காலத்துச் சட்டங்களான இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆா்பிசி), இந்திய சாட்சியங்கள் சட்டம் (ஐஇசி) ஆகிய சட்டங்களுக்குப் பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்), பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரின்போது எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த புதிய சட்டங்களுக்கான மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் இந்த சட்டங்களுக்கு, ஜனாதிபதி ஒப்புதல் அளித்த பிறகு அரசிதழில் கடந்த டிசம்பரில் வெளியானது. இந்த நிலையில், 3 புதிய குற்றவியல் சட்டங்களும் இன்று (திங்கள்கிழமை) முதல் அமலுக்கு வந்தன. நடைமுறைக்கு வந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்கள் தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அமித் ஷா கூறியதாவது:

இன்று அமலுக்கு வந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்கள் இந்தியாவில் பிரிட்டிஷ் சட்டங்களின் சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததோடு மட்டுமில்லாமல், குற்றவியல் நீதி முறையை சுதந்திரமாக மாற்றியுள்ளது. இந்தச் சட்டங்கள் நமது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையிலேயே உள்ளன.இன்று முதல் காலனித்துவ சட்டங்கள் அகற்றப்பட்டு, இந்திய நாடாளுமன்றத்தில் உருவாக்கப்பட்ட சட்டங்கள் நடைமுறைக்கு கொண்டு வரப்படுகின்றன.

தாமதத்துக்குப் பதிலாக, இனி விரைவான விசாரணை மற்றும் நீதி கிடைக்கும். முன்பு பழைய குற்றவியல் சட்டங்கள் மூலம் காவல் துறையின் உரிமைகள் மட்டுமே பாதுகாக்கப்பட்டன. ஆனால், இப்போது புதிய சட்டங்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் புகார் கொடுப்பவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு தீர்வு காண்பதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய குற்றவியல் சட்டங்களால் பலர் பயனடைவார்கள். புதிய சட்டங்கள் படியும் போலீஸ் காவலில் எடுக்கும் நாட்கள் 15 நாட்கள்தான். இதற்கு முன்பாக குற்றம் சாட்டப்பட்ட நபர் போலீஸ் காவலில் அனுப்பப்படும் போது, அந்த நபர் மருத்துவமனையில் 15 நாட்கள் அனுமதிக்கப்பட்டால் போலீஸ் காவல் என்பது காலாவதியாகிவிடும். அவரிடம் விசாரணை மேற்கொள்ள முடியாது. ஆனால், புதிய பி.என்.எஸ் சட்டத்தின் படி, அதிகபட்சமாக 15 நாட்கள் காவலில் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அதிகபட்ச வரம்பான 60 நாட்களுக்குள் பகுதிகளாக எடுத்துக் கொள்ளலாம்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்