ராகுல் காந்தி இந்துக்களை அவமதிக்கவில்லை - பிரியங்கா காந்தி
மக்களவையில் ராகுல் காந்தி இந்துக்களை வன்முறையாளர்கள் என்று அழைத்ததாக பா.ஜனதா குற்றம்சாட்டி இருந்தது.;
புதுடெல்லி,
ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசிய நிலையில், இந்து கடவுளான சிவன் படத்தைக் காட்டி தனது உரையைத் தொடங்கினார்.
தொடர்ந்து பா.ஜனதாவினர் உண்மையான இந்துக்கள் இல்லை என்று கூறிய ராகுல் காந்தி, தங்களை இந்துக்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் 24 மணி நேரமும் "வன்முறையிலும் வெறுப்பிலும்" ஈடுபடுகிறார்கள் என்றும், பா.ஜனதாவினர் வன்முறை செய்பவர்கள் என்றும் அவர்கள் இந்துக்களின் ஒட்டுமொத்த பிரதிநிதிகள் இல்லை என்றும் தெரிவித்தார். மேலும், இந்து மதம் என்பது பயம், வெறுப்பு, பொய்களைப் பரப்பும் மதம் இல்லை என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் பிரதமர் மோடியே எழுந்து ராகுல் காந்தி பேச்சைக் குறுக்கிட்டார். ராகுல் காந்தி பேச்சு இந்துக்கள் மீதான தாக்குதல் என பிரதமர் மோடி எதிர்ப்பு தெரிவித்தார்.
பாரதிய ஜனதா கட்சியைப் பற்றி பேசுவதாக ராகுல்காந்தி கூறியபோதும், உள்துறை மந்திரி அமித்ஷா, ராகுல் காந்தியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார்.
மக்களவையில் ராகுல் காந்தி இந்துக்களை வன்முறையாளர்கள் என்று அழைத்ததாக பா.ஜனதா குற்றம்சாட்டிய நிலையில், காங்கிரஸ் முக்கிய தலைவர் பிரியங்கா காந்தி , தனது சகோதரர் இந்துக்களை அவமதிக்கவில்லை, ஆனால் காவி கட்சி மற்றும் அதன் தலைவர்களைப் பற்றி பேசுவதாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ராகுலால் இந்துக்களை அவமதிக்க முடியாது. அவர் அதை மிகத் தெளிவாகச் சொன்னார். அவர் பா.ஜனதாவைப் பற்றி பேசினார், அதன் தலைவர்களைப் பற்றி பேசினார். பா.ஜனதாவோ, ஆர்.எஸ்.எஸ். அல்லது மோடியோ முழு இந்து சமுதாயம் அல்ல" என்று பிரியங்கா காந்தி கூறினார்.