கடும் குளிர்: ஜார்கண்டில் பள்ளிகளை 13-ந் தேதிவரை மூட உத்தரவு
ஜார்கண்ட் மாநிலத்தில் கடும் குளிர் நிலவி வருகிறது.;
புதுடெல்லி,
வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடுமையான பனி பெய்து வருகிறது. டெல்லியில், எதுவுமே பார்க்க முடியாத அளவுக்கு பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால், ரெயில், விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விமானங்கள் தரையிறங்க முடியாமல் தவித்தன. சாலைகளில் வாகனங்கள் முன்பக்க விளக்கை எரியவிட்டு குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டன. காஷ்மீரில் வெப்பநிலை உறைநிலை அளவுக்கு சென்று விட்டது. தலைநகர் ஸ்ரீநகர் உள்பட பெரும்பாலான பகுதிகளில் புதிதாக பனிப்பொழிவு காணப்பட்டது.
ஜார்கண்ட் மாநிலத்திலும் கடும் குளிர் நிலவி வருகிறது. கடும் குளிர் காரணமாக, மாநிலத்தில் நாளை முதல் 13-ந் தேதிவரை, மழலையர் பள்ளி முதல் 8-ம்வகுப்புவரை அனைத்து வகையான பள்ளிகளையும் மூட ஜார்கண்ட் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அரியானா, பஞ்சாப் ஆகிய வடமாநிலங்களிலும் பனிப்பொழிவு நிலவியது.