அக்னி வீரர் திட்டம் குறித்து பேசிய ராகுல்: பதிலடி கொடுத்த ராஜ்நாத் சிங்

நீட் தேர்வின் மூலம் கோடிக்கணக்கான ரூபாய்க்கு வியாபாரம் நடக்கிறது என்று ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

Update: 2024-07-01 11:02 GMT

புதுடெல்லி,

மக்களவையில், ஜனாதிபதி உரை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர்  பேசியதாவது:-

அயோத்தியாவில் வெற்றி பெற்ற சமாஜ்வாதி கட்சியின் உறுப்பினருக்கு எனது வாழ்த்து. அயோத்தியா என்ற பெயரை சொன்ன உடனே என்னுடைய மைக் அணைக்கப்பட்டு விட்டது. ராமர் பிறந்த மண்ணிலேயே பா.ஜனதாவிற்கு செய்தி வழங்கப்பட்டுவிட்டது. அந்த செய்தி நமது கண்முன்னே அமர்ந்திருக்கிறது. அயோத்தியாவில் என்ன நடந்தது. எப்படி நீங்கள் வெற்றி பெற்றீர்கள் என தெரிந்து கொண்டேன்.

சமாஜ்வாதி கட்சியின் உறுப்பினரிடம் நான் கேட்டு தெரிந்து கொண்டேன். அயோத்தியாவில் சிறு வியாபாரிகளை தெருவோரத்தில் வீசிவிட்டனர். அயோத்தி மக்களின் நிலத்தை பறித்து விட்டனர். வீடுகளை இடித்துவிட்டனர். ராமர் கோவில் திறந்து வைக்கப்பட்டபோது அதில் அம்பானி, அதானி மட்டும்தான் இருந்தனர். ராமர் கோவில் திறப்பில் அயோத்தியாவை சேர்ந்த மக்கள் இல்லை. அது அந்த மக்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. இதனால் தான் அயோத்தி மக்கள் பா.ஜனதாவிற்கு சரியான தீர்ப்பை வழங்கிவிட்டனர்.

அயோத்தி மக்கள் உங்களை தோற்கடித்துவிடுவார்கள் என்று முன்னரே பிரதமரிடம் ஆய்வாளர்கள் தெரிவித்துவிட்டனர். 

ஜனாதிபதி உரையில் நீட் குறித்து எந்த வார்த்தையும் இடம்பெறவில்லை. நீட் தேர்வின் மூலம் தொழிற்கல்வியை வியாபாரக்கல்வியாக்கிவிட்டனர். நீட் நுழைவுத்தேர்வு பணம் படைத்தவர்களுக்கான தேர்வாக அமைந்துவிட்டது.

7 ஆண்டுகளில் 70 முறை நீட் வினாத்தாள் கசிந்துள்ளது. நீட் தேர்வின் மூலம் கோடிக்கணக்கான ரூபாய்க்கு வியாபாரம் நடக்கிறது. நீட் குறித்து விவாதம் நடத்தக்கோரினால் அதனை ஏற்க மத்திய அரசு மறுக்கிறது என்றார்.

தொடர்ந்து ராகுல்காந்தி பேசுகையில்,

வேளாண் திருத்தச்சட்டம் விவசாயிகளுக்கானது அல்ல, அம்பானி, அதானிக்கானது. அரவணைத்து ஆதரிக்க வேண்டிய விவசாயிகளை மத்திய அரசு தீவிரவாதிகள் என்றது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் ஓராண்டு காலம் போராட்டம் நடத்தினர் என்றார்.

குறைந்தபட்ச ஆதார விலை தரவில்லை என்ற ராகுல்காந்தியின் புகாருக்கு மத்திரி சிவராஜ் சிங் சவுகான் மறுப்பு தெரிவித்தார்.

அக்னி வீரர் திட்டம் குறித்து ராகுல்காந்தி பேசுகையில்,

அக்னி வீரர் திட்டத்தில் ஒரு வீரர் உயிரிழந்தால், அதை வீர மரணமாக பா.ஜனதா அரசு ஏற்காது. அக்னி வீரர் திட்டத்தில் ஒரு வீரருக்கு 6 மாதங்கள் மட்டுமே பயிற்சி அளிக்கிறார்கள். முறையான பயிற்சி அளிக்கப்படுவதில்லை. அக்னி வீரர் திட்டம் என்பது 'யூஸ் அண்ட் த்ரோ' போன்றது.

6 மாதம் மட்டுமே பயிற்சி பெறும் வீரர், 5 ஆண்டு பயிற்சி பெறும் சீன வீரரை எப்படி எதிர்கொள்வார்?. அக்னிவீரர் திட்டத்தால் ராணுவத்தில் பிளவு ஏற்படும். ராணுவத்தில் உள்ள ஒருவருக்கு அதிக சலுகை கிடைக்கும். மற்றவருக்கு சலுகை கிடைக்காது. அக்னிவீரர் திட்டம் ராணுவத்தின் திட்டமல்ல, பிரதமர் மோடியின் திட்டம் என்றார்.

ராஜ்நாத் சிங் பதிலடி

அக்னிவீரர் திட்டம் குறித்து ராகுல் பேசிய போது, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் குறுக்கிட்டு பேசியதாவது: ராகுல்காந்தி தவறான விவரம் கூறுகிறார். அக்னி வீரர் திட்டத்தில் உயிரிழந்தால் ரூ.1 கோடி இழப்பீடு தரப்படுகிறது. நாடாளுமன்றத்தை தவறாக ராகுல் வழி நடத்துகிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து மணிப்பூர் வன்முறை குறித்து ராகுல்காந்தி பேசியதாவது:

மத்திய அரசின் கொள்கையால் மணிப்பூர் மாநிலத்தில் கலவரம் ஏற்பட்டுள்ளது. கலவரத்திற்கு மத்திய அரசே காரணம். மணிப்பூர் இந்தியாவின் ஒரு பகுதி இல்லையா? பிரதமர் மோடி ஏன் அங்கு செல்லவில்லை? பிரதமரையும் உள்துறை மந்திரியும் பொறுத்தவரை மணிப்பூர் ஒரு மாநிலமே இல்லை. பிரதமர் மோடியோ, உள்துறை அமைச்சரோ ஒரு முறை கூட மணிப்பூர் செல்லாதது ஏன்? என ராகுல் கேள்வி எழுப்பினார்.

மேலும் பேசுகையில், சிறு, குறு வணிகர்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர்.பணமதிப்பிழப்பால் அடிதட்டு வியாபாரிகள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர்.பணமதிப்பிழப்பு மூலம் இந்தியாவின் முதுகெலும்பை உடைத்து விட்டார் பிரதமர் நரேந்திர மோடி.

குஜராத் தேர்தலில் பா.ஜனதாவை இந்தியா கூட்டணி தோற்கடிக்கும் என்பதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். காங்கிரஸ் உங்களை கண்டு அஞ்சவில்லை, காங்கிரசை கண்டுதான் நீங்கள் அஞ்சுகிறீர்கள். பிரதமர் மோடி கை கொடுத்து வாழ்த்திய போது குனிந்து கை கொடுத்தீர்கள், ஆனால் நான் கை கொடுத்த போது நிமிர்ந்து நின்று கை கொடுத்தேன். நாடாளுமன்றத்தில் சபாநாயகரை விட உயர்ந்தவர் என யாரும் இல்லை, எனவே சபாநாயகர் யாருக்கும் தலைவணங்க வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்