'அதிஷி ஆயிரம் மடங்கு மேலானவர்' - டெல்லி துணை நிலை கவர்னர் புகழாரம்

டெல்லி முதல்-மந்திரி அதிஷி குறித்து டெல்லி துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா பாராட்டு தெரிவித்துள்ளார்.

Update: 2024-11-22 15:23 GMT

புதுடெல்லி,

டெல்லி முதல்-மந்திரியாக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியது. குறிப்பாக முதல்-மந்திரி அலுவலகத்திற்கு செல்லக் கூடாது, முதல்-மந்திரியாக கோப்புகளை கையாளக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

இதையடுத்து சிறையில் இருந்து வெளியே வந்த அரவிந்த் கெஜ்ரிவால், நான் நேர்மையானவன் என்று மக்கள் தீர்ப்பளிக்கும் வரை முதல்-மந்திரி நாற்காலியில் அமரமாட்டேன் என்று கூறி முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து டெல்லியில் நடைபெற்ற ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், டெல்லியின் புதிய முதல்-மந்திரியாக அதிஷி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர் செப்டம்பர் 21-ந்தேதி, டெல்லி முதல்-மந்திரியாக அதிஷி பதவியேற்றுக் கொண்டார். முன்னதாக டெல்லி ஆம் ஆத்மி அரசாங்கத்திற்கும், டெல்லியின் துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனாவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. அந்த சமயத்தில் கெஜ்ரிவால், அதிஷி உள்ளிட்ட மூத்த ஆம் ஆத்மி தலைவர்களை வி.கே.சக்சேனா கடுமையாக விமர்சித்து வந்தார்.

இந்த நிலையில், தற்போதைய டெல்லி முதல்-மந்திரி அதிஷி குறித்து டெல்லி துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா பாராட்டு தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள இந்திரா காந்தி பெண்கள் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் அதிஷியும், வி.கே.சக்சேனாவும் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் பேசிய வி.கே.சக்சேனா, "இதற்கு முன்பு இருந்தவரை விட அதிஷி ஆயிரம் மடங்கு மேலானவர் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும்" என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்