"மணிப்பூரில் ரத்தக்கறை படிந்துள்ளதை நேரில் சென்று பாருங்கள்" - மக்களவையில் மஹுவா மொய்த்ரா ஆவேசம்

பா.ஜனதாவினர் இது மைனாரிட்டி அரசு என்பதை இன்னும் உணரவே இல்லை என்று மஹுவா மொய்த்ரா தெரிவித்தார்.

Update: 2024-07-01 12:15 GMT

புதுடெல்லி,

மூன்றாவது முறையாக பதவியேற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் ஆறாவது நாளான இன்று. மக்களவையில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே காரசாரமான விவாதம் நடந்தது.

இத்தகைய சூழலில் தான் நாடாளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராகுல் காந்தி முதல் முறையாக இன்று உரையாற்றினார். அதில் அவர், பா.ஜனதாவினர் உண்மையான இந்துக்கள் இல்லை என்றும், பா.ஜனதாவினர் வன்முறை செய்பவர்கள் என்றும் அவர்கள் இந்துக்களின் ஒட்டுமொத்த பிரதிநிதிகள் இல்லை என்றும் தெரிவித்தார். மேலும், இந்து மதம் என்பது பயம், வெறுப்பு, பொய்களைப் பரப்பும் மதம் இல்லை என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்.

இந்நிலையில் மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, "கடந்த முறை நான் இங்கு (நாடாளுமன்றத்தில்) நின்றபோது எனக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டது. ஒரு எம்.பி.யின் குரல்வளையை நெறித்ததால் ஆளும் பா.ஜனதா பெரும் விலை கொடுத்துவிட்டது. என்னை ஒடுக்க நீங்கள் நினைத்தீர்கள்.. ஆனால் மக்கள் உங்களது 63 நாடாளுமன்ற எம்.பி.க்களை நிரந்தரமாக உட்கார வைத்துவிட்டனர்.

தேர்தல் ஆணையத்தை மீறி எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றுள்ளோம். ஆளும் கட்சியின் விதிமீறல்களை தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளவே இல்லை. நாங்கள் நெருப்பாற்றில் நீந்தி வந்துள்ளோம். இன்னமும் பா.ஜனதாவினர் இது மைனாரிட்டி அரசு என்பதை உணரவே இல்லை. எங்களை- எதிர்க்கட்சிகளை உங்களால் ஒன்றுமே செய்ய முடியாது.

செங்கோல் என்பது மன்னராட்சியின் அடையாளம். இந்திய வரலாற்றிலேயே இதுவரை இல்லாத வகையில் செங்கோலுடன் ஜனாதிபதி அழைத்துவரப்பட்டார். இது ஜனநாயக நாடு. ஜனநாயக நாட்டில் செங்கோல் என்பது எதற்காக? கடவுளிடம் ஆணவத்துடன் நடந்து கொண்டால் தண்டிக்கப்படுவர் என்பதை பா.ஜனதாவினர் உணர்ந்து கொள்ள வேண்டும்.

மணிப்பூரில் ரத்தக்கறை படிந்துள்ளதை நேரில் சென்று பாருங்கள். மணிப்பூர் மாநில மக்கள் கிழக்கை பாருங்கள் என கேட்கவில்லை. கிழக்கில் அரசாங்கம் என்பது செயல்பட்டாக வேண்டும் என்றுதான் மணிப்பூர் மக்கள் கேட்கிறார்கள். வடகிழக்கு மாநிலங்களுக்கு 4 மடங்கு கூடுதல் நிதி ஒதுக்கி இருப்பதாக ஜனாதிபதி உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மணிப்பூர் பற்றி ஒரு வார்த்தை கூட இல்லையே? ஏன்?" என அவர் கேள்வி எழுப்பினார்.

Tags:    

மேலும் செய்திகள்