மத்திய கிழக்கில் போர் பதற்றம்.. ஈரானின் எண்ணெய் உற்பத்தி நிலையங்களை தாக்க இஸ்ரேல் திட்டம்?


தினத்தந்தி 1 Oct 2024 10:44 PM IST (Updated: 2 Oct 2024 10:21 PM IST)
t-max-icont-min-icon

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

ஜெருசலேம்,

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதனால், மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தலைநகர் டெல் அவிவ், ஜெருசலேம் உள்பட இஸ்ரேலின் அனைத்து பகுதிகளையும் குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Live Updates

  • 2 Oct 2024 11:19 AM IST

    இஸ்ரேலின் 2 ராணுவ தளங்களை இலக்காக கொண்டு ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது.

    மொசாட் மற்றும் இஸ்ரேலின் உளவு பிரிவு தலைமையகங்களின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதனை ஈரானின் ராணுவ அதிகாரி முகமது பாகேரி தெரிவித்து உள்ளார்.

  • 2 Oct 2024 10:19 AM IST

    ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பிரான்ஸ் அதிபர் கண்டனம்

    இஸ்ரேல் மீதான ஈரானின்  தாக்குதல்களை வன்மையாக கண்டிப்பதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கூறியுள்ளார். இஸ்ரேலின் பாதுகாப்பிற்காக மத்திய கிழக்கில் தனது ராணுவத்தை ஒன்று திரட்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளை ஹிஸ்புல்லா நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் பிரெஞ்சு பிரசிடென்சி அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

  • 2 Oct 2024 10:11 AM IST

    பதிலடி கொடுத்தால் அவ்வளவுதான்.. ஈரான் ராணுவ அதிகாரி எச்சரிக்கை

    ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்ரேல் ராணுவம் கூறியிருந்த நிலையில், ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    ஈரான் மீண்டும் தாக்கப்பட்டால், இஸ்ரேல் முழுவதும் உள்ள உள்கட்டமைப்பைத் தாக்குவோம் என ஈரான் ராணுவத்தின் மேஜர் ஜெனரல் முகமது பாகேரி கூறியுள்ளார். இன்னும் தீவிரமாக மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்துவதுடன், இஸ்ரேல் அரசாங்கத்தின் அனைத்து உள்கட்டமைப்புகளும் குறிவைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

  • 2 Oct 2024 9:45 AM IST

    இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு முற்றிலும் கண்டனம் தெரிவிக்கிறேன் என இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் தெரிவித்து உள்ளார்.

    இஸ்ரேல் தன்னை பாதுகாத்து கொள்வதற்கான உரிமைக்கு இங்கிலாந்து ஆதரவு அளிக்கும் என்றும் கூறியுள்ளார். ஈரான், தன்னுடைய கூட்டாளிகளான ஹிஸ்புல்லா போன்ற அமைப்புகளுடன் இணைந்து கொண்டு நடத்தும் இதுபோன்ற தாக்குதல்களை நிறுத்தி கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

  • 2 Oct 2024 7:02 AM IST

    இஸ்ரேல் மீது 180-க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளை ஈரான் வீசிய நிலையில், கடவுளிடம் இருந்து கிடைத்த வெற்றி மற்றும் வெற்றியை நெருங்கி விட்டோம் என்று ஈரான் தலைவர் அலி காமினி இன்று வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில் பகிர்ந்து உள்ளார்.

  • 2 Oct 2024 6:20 AM IST

    இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலை சந்தேகத்திற்கு இடமின்றி வன்மையாக கண்டிக்கிறேன் என அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் கூறியுள்ளார்.

  • 2 Oct 2024 5:43 AM IST

    லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா ஆயுதப்பிரிவு முக்கிய தளபதி பலி

    லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் ஆயுதப்பிரிவு முக்கிய தளபதி முகமது ஜாபர் கசர் கொல்லப்பட்டார். ஈரானில் இருந்து ஆயுதங்களை லெபனானுக்குள் கொண்டுவரும் ஹிஸ்புல்லா பிரிவின் தலைவராக முகமது செயல்பட்டு வந்துள்ளார்.

  • 2 Oct 2024 4:52 AM IST

    இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்: கொண்டாடிய ஈரான் மக்கள்

    இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இஸ்ரேலில் 2 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. 181 ஏவுகணைகள் ஏவப்பட்ட நிலையில் அவற்றில் பெரும்பாலானவை நடுவானில் இஸ்ரேலின் ஏவுகணை தடுப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டன. ஏவுகணை தாக்குதலில் பள்ளிக்கட்டிடம் சேதமடைந்துள்ளது.

    இந்நிலையில், இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதை ஈரான் மக்கள் கொண்டாடினர். தலைநகர் தெஹ்ரானில் உள்ள இங்கிலாந்து தூதரகம் முன் திரண்ட ஈரானியர்கள் ஈரான், ஹிஸ்புல்லா கொடிகளை ஏந்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

  • 2 Oct 2024 3:52 AM IST

    ஈரான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது; நிச்சயம் விலைகொடுக்கும் - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

    இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, இஸ்ரேல் பாதுகாப்பு கேபினெட் கூட்டம் ஜெருசலேமில் நடைபெற்றது. இதில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பங்கேற்றார். கூட்டத்தில் பேசிய நெதன்யாகு, இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவி ஈரான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது. இந்த தாக்குதலுக்கு ஈரான் விலை கொடுக்கும். ஈரானின் தாக்குதல் தோல்வியடைந்துவிட்டது. உலகின் மிகவும் அதிநவீன இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு தாக்குதலை தடுத்து நிறுத்திவிட்டது.

    எதிரிகளுக்கு எதிரான தாக்குதல் மற்றும் நம்மை நாம் தற்காத்துக்கொள்ளும் உறுதி குறித்து ஈரான் ஆட்சியாளர்களுக்கு புரியவில்லை. ஹமாஸ் தலைவர் சின்வர், ஹமாஸ் தளபதி முகது டிப்பிற்கு அது புரியவில்லை. ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ருல்லா, ஹிஸ்புல்லா தளபதி பகத் ஷருக்கிற்கு அது புரியவில்லை. தெஹ்ரானில் உள்ளவர்களுக்கும் அது புரியாது என நினைக்கிறேன். எங்கள் மீது யார் தாக்குதல் நடத்தினாலும் அவர்கள் மீது நாங்கள் தாக்குதல் நடத்துவோம் என அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்’ என்றார்.

  • 2 Oct 2024 3:33 AM IST

    ஆச்சரியமளிக்கும் பதிலடி தாக்குதல் - இஸ்ரேல் ராணுவம்

    ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு ஆச்சரியமளிக்கும் பதிலடி தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஆச்சரியமளிக்கும் பதிலடி தாக்குதல் எப்போது என்பதை முடிவேடுப்போம்’ என பதிவிட்டுள்ளது.


Next Story