ஈரான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது; நிச்சயம் விலைகொடுக்கும் - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, இஸ்ரேல் பாதுகாப்பு கேபினெட் கூட்டம் ஜெருசலேமில் நடைபெற்றது. இதில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பங்கேற்றார். கூட்டத்தில் பேசிய நெதன்யாகு, இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவி ஈரான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது. இந்த தாக்குதலுக்கு ஈரான் விலை கொடுக்கும். ஈரானின் தாக்குதல் தோல்வியடைந்துவிட்டது. உலகின் மிகவும் அதிநவீன இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு தாக்குதலை தடுத்து நிறுத்திவிட்டது.
எதிரிகளுக்கு எதிரான தாக்குதல் மற்றும் நம்மை நாம் தற்காத்துக்கொள்ளும் உறுதி குறித்து ஈரான் ஆட்சியாளர்களுக்கு புரியவில்லை. ஹமாஸ் தலைவர் சின்வர், ஹமாஸ் தளபதி முகது டிப்பிற்கு அது புரியவில்லை. ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ருல்லா, ஹிஸ்புல்லா தளபதி பகத் ஷருக்கிற்கு அது புரியவில்லை. தெஹ்ரானில் உள்ளவர்களுக்கும் அது புரியாது என நினைக்கிறேன். எங்கள் மீது யார் தாக்குதல் நடத்தினாலும் அவர்கள் மீது நாங்கள் தாக்குதல் நடத்துவோம் என அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்’ என்றார்.