இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் - பெரும் பதற்றம்


LIVE
தினத்தந்தி 1 Oct 2024 5:14 PM GMT (Updated: 2 Oct 2024 12:13 AM GMT)

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

ஜெருசலேம்,

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதனால், மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தலைநகர் டெல் அவிவ், ஜெருசலேம் உள்பட இஸ்ரேலின் அனைத்து பகுதிகளையும் குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Live Updates

  • 1 Oct 2024 6:54 PM GMT

    மத்திய கிழக்கில் இன்று இரவு சக்திவாய்ந்த தாக்குதல் நடத்தப்படும் - இஸ்ரேல்

    இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் மத்திய கிழக்கில் இன்று இரவு சக்திவாய்ந்த தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில்,

    இஸ்ரேல் மீது ஈரான் 181 ஏவுகணைகளை ஏவியுள்ளது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் வான்பாதுகாப்பு அமைப்புகள் இணைந்து ஏவுகணை தாக்குதலை முறியடித்துள்ளது.

    ஏவுகணை தாக்குதல் தொடர்பான பாதிப்புகளை விசாரித்து வருகிறோம். அதுதொடர்பான விவரங்களை எதிரிகளுக்கு கொடுக்கப்போவதில்லை. ஈரான் இன்று இரவு மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கை மத்திய கிழக்கை போர் பதற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இன்றைய நிகழ்வுக்கு நிச்சயம் விளைவுகள் உண்டு. மத்திய கிழக்கில் இன்று இரவு சக்திவாய்ந்த தாக்குதல் தொடர்ந்து நடத்தப்படும்’ என்றார்.

  • 1 Oct 2024 6:44 PM GMT

    ஈரானின் ஏவுகணைகளை நடுவானில் சுட்டு வீழ்த்திய இஸ்ரேல் வான்பாதுகாப்பு அமைப்பு

    ஈரான் ஏவிய ஏவுகணைகளை இஸ்ரேலின் வான்பாதுகாப்பு அமைப்பான அயன் டூம் நடுவானில் சுட்டு வீழ்த்தின. ஆனால், ஒருசில வானில் வீழ்த்தப்பட்ட ஏவுகணைகளின் பாகங்கள் விழுந்து டெல் அவிவில் 2 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • 1 Oct 2024 6:33 PM GMT

    இஸ்ரேலில் பயங்கரவாத தாக்குதல்: 7 பேர் பலி

    இஸ்ரேலின் ஜபா நகரில் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு , கத்திக்குத்து தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 9 பேர் படுகாயமடைந்தனர்.

    தாக்குதல் நடத்திய 2 பயங்கரவாதிகளும் இஸ்ரேல் பாதுகாப்புப்படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

  • 1 Oct 2024 6:28 PM GMT

    நஸ்ரல்லா கொல்லப்பட்டதற்கு பதிலடி:

    லெபனானில் கடந்த 28ம் தேதி இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். நஸ்ரல்லா கொலைக்கு பதிலடியாகவே இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.

  • 1 Oct 2024 6:21 PM GMT

    181 ஏவுகணைகள்

    இஸ்ரேல் மீது 181 ஏவுகணைகளை ஏவி ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.

  • 1 Oct 2024 6:13 PM GMT

    இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

    காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.

    மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் 117 பணய கைதிகளை உயிருடன் மீட்டுள்ளது.

    அதேபோல், ஹமாஸ் ஆயுதக்குழுவினர்களால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட பணய கைதிகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. ஆனால், இன்னும் 100க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் ஹமாஸ் வசம் பணய கைதிகளாக உள்ளனர்.

    அதேவேளை, இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    இதனிடையே, இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளும் ஆதரவு அளித்து வருகின்றனர்.

    லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் கடந்த ஆண்டு அக்டோபர் 8ம் தேதி முதல் இஸ்ரேல் மீது தொடர்ந்து ராக்கெட் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

    அந்தவகையில் லெபனான் தலைநகர் பெரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் தலைமையிடத்தை குறிவைத்து இஸ்ரேல் கடந்த வெள்ளிக்கிழமை குண்டுமழை பொழிந்தது. இந்த அதிரடி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டார்.

    ஹமாஸ் அமைப்பினர், ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது.

    இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள ஈரான் தூதரகம் மீது கடந்த ஏப்ரல் 1ம் தேதி வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஈரான் புரட்சிப்படை மூத்த தளபதி முகமது ரிசா சகிதி, ஈரானிய புரட்சிப்படை வீரர்கள் 6 பேர், சிரியாவை சேர்ந்த 6 பேர் என மொத்தம் 13 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதாக ஈரான் குற்றஞ்சாட்டியது.

    இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, ஏப்ரல் 13ம் தேதி இரவு இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் மீது ஈரான் நேரடியாக 120 பாலிஸ்டிக், ஏவுகனைகள், 170 டிரோன்கள், 30 குரூஸ் ஏவுகணைகளை ஏவியது.

    இதனிடையே, ஹமாஸ் அமைப்பின் தலைவராக இருந்த இஸ்மாயில் ஹனியே ஈரானில் கொல்லப்பட்டார். கடந்த ஜூலை 31ம் தேதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இஸ்மாயில் கொல்லப்பட்டார். இஸ்மாயிலை இஸ்ரேல் கொலை செய்ததாக ஈரான் குற்றஞ்சாட்டியது.

    இதனை தொடர்ந்து லெபனானில் செயல்பட்டுவரும் ஹிஸ்புல்லா அமைப்பை குறிவைத்து கடந்த 28ம் தேதி இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் தலைவரான நஸ்ரல்லா கொல்லப்பட்டார். நஸ்ரல்லா கொல்லப்பட்டதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் தெரிவித்திருந்தது.

    அதேவேளை, லெபனானில் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தி வந்தது. இந்நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேல் மீது ஈரான் நேரடி தாக்குதல் நடத்துவது இது 2வது முறை ஆகும்.


Next Story