மத்திய கிழக்கில் போர் பதற்றம்.. ஈரானின் எண்ணெய் உற்பத்தி நிலையங்களை தாக்க இஸ்ரேல் திட்டம்?


தினத்தந்தி 1 Oct 2024 10:44 PM IST (Updated: 2 Oct 2024 10:21 PM IST)
t-max-icont-min-icon

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

ஜெருசலேம்,

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதனால், மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தலைநகர் டெல் அவிவ், ஜெருசலேம் உள்பட இஸ்ரேலின் அனைத்து பகுதிகளையும் குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Live Updates

  • இஸ்ரேல் கேப்டன்கள் மூவர் உயிரிழப்பு
    2 Oct 2024 9:14 PM IST

    இஸ்ரேல் கேப்டன்கள் மூவர் உயிரிழப்பு

    லெபனானில் இஸ்ரேல் ராணுவத்துக்கும் ஹிஸ்புல்லாக்களுக்கும் இடையே சண்டை நீடித்து வரும் நிலையில், தெற்கு லெபனானில் நிகழ்ந்த சண்டையில் இஸ்ரேல் ராணுவத்தை சேர்ந்த 3 கேப்டன்கள் உட்பட 8 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

  • சிதைந்த ஏவுகணை மீது ஏறி புகைப்படம் எடுத்துக்கொள்ளும் மக்கள்
    2 Oct 2024 8:40 PM IST

    சிதைந்த ஏவுகணை மீது ஏறி புகைப்படம் எடுத்துக்கொள்ளும் மக்கள்

    இஸ்ரேல் மீது ஈரான் சுமார் 180க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசியது. அவைகளை இஸ்ரேலின் வான்பாதுகாப்பு அமைப்பான அயன் டோம் நடுவானில் இடைமறித்து அழித்தது. ஆனால் சில ஏவுகணைகள் இஸ்ரேலுக்குள் விழுந்து வெடித்தது. அந்தவகையில் தெற்கு இஸ்ரேலின் அராட் அருகே, இஸ்ரேல் ராணுவத்தால் தடுத்து நிறுத்தப்பட்ட ஈரானிய ஏவுகணையின் சிதைந்த பாகங்கள் கீழே விழுந்து கிடக்கின்றன. அதில் பொதுமக்கள் ஏறி புகைப்படங்களை எடுத்துகொண்டனர். 

  • 2 Oct 2024 8:28 PM IST

    பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈரான் உச்ச தலைவர்

    இரானின் உச்ச தலைவர் அலி கமேனி இன்று (அக்டோபர் 2) டெஹ்ரானில் இரானின் அந்நாட்டின் முக்கிய தலைவர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நாட்டில் நிலவும் பதற்றம் மற்றும் போருக்கு அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளே காரணம். அவர்கள் இங்கு அமைதியை நிலைநாட்டுவதாக பொய்யான வாக்குறுதிகளை அளிக்கின்றனர். அந்த நாடுகள் இங்கிருந்து வெளியேற வேண்டும் (Get lost) அப்போதுதான் இங்குள்ள நாடுகள் அமைதியாக இருக்கும் என்றார்.

    இதற்கிடையே இரானின் உச்ச தலைவர் அலி கமேனி பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

  • லெபனானுக்குள் இஸ்ரேல் வீரர் உயிரிழப்பு
    2 Oct 2024 8:08 PM IST

    லெபனானுக்குள் இஸ்ரேல் வீரர் உயிரிழப்பு

    லெபனானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவம், லெபனான் எல்லைக்குள் இஸ்ரேல் வீரர் ஒருவர் உயிரிழந்திருப்பதை உறுதி செய்துள்ளது. ஐடிஃப் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், கேப்டன் எய்டன் யிட்சாக் லெபனான் எல்லைக்குள் இன்று நடந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளார். 22 வயதான எய்டன், கொரில்லா யுத்தத்தில் சிறப்பு பெற்ற கமாண்டோ பிரிவின் அங்கமான எகோஸ் தளபதியாக இருந்தார் என்று தெரிவித்துள்ளது.

  • மத்திய கிழக்கில் ஏற்பட்ட தீ நரகமாக மாறுகிறது: ஐ.நா கவலை
    2 Oct 2024 8:00 PM IST

    மத்திய கிழக்கில் ஏற்பட்ட தீ நரகமாக மாறுகிறது: ஐ.நா கவலை

    மத்திய கிழக்கில் ஏற்பட்ட தீ நரகமாக மாறுகிறது என்று ஐ.நா. சபையில் அந்தோனியோ குட்டரெஸ் கவலை தெரிவித்துள்ளார். அங்கு ஐநா ஊழியர்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் லெபனானில் போரை முற்றிலும் தவிர்க்க வேண்டியது மிகவும் அவசியம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் போர் தீவிரமடைந்தால் பேரழிவுகளை ஏற்படுத்தும் என்று கூறினார். 

  • கச்சா எண்ணெய் விலை கணிசமாக அதிகரிப்பு
    2 Oct 2024 6:16 PM IST

    கச்சா எண்ணெய் விலை கணிசமாக அதிகரிப்பு

    இஸ்ரேல் மீது இரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 74.40 அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. நேற்றைய வர்த்தகத்தின் நடுவே கச்சா எண்ணெய் விலை 5 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்தது.

    அமெரிக்காவின் ஆற்றல் தகவல் ஆணைய தரவுகளின்படி, உலகின் ஏழாவது மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தியாளராக ஈரான் உள்ளது. ஓபெக் எனப்படும் கச்சா எண்ணெய் உற்பத்தியாளர் கூட்டமைப்பில் உள்ள நாடுகளில் 3-வது பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தியாளராகவும் ஈரான் இருக்கிறது.

    அந்த பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஈரான் அருகேயுள்ள ஹோர்முஸ் நீரிணை வழியே எண்ணெய்க் கப்பல் போக்குவரத்து தடைபடலாம் என்ற அச்சம் நிலவுகிறது. ஓமன் - ஈரான் இடையே உள்ள ஹோர்முஸ் நீரிணை வழியே உலக வர்த்தகத்தில் 25 சதவீத கச்சா எண்ணெய் அனுப்பி வைக்கப்படுகிறது.

    ஓபெக் கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், இராக் ஆகிய நாடுகளும் கூட ஹோர்முஸ் நீரிணை வழியேதான் கச்சா எண்ணெயை உலக சந்தைக்கு கொண்டு வருகின்றன.

  • 2 Oct 2024 4:48 PM IST

    மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இஸ்ரேலுக்கு மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளது ஈரான்.

    இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை விரைவில் கொலை செய்யப்போவதாக கூறி ஈரானிய உளவுத்துறை அமைச்சகம் ஒரு அச்சுறுத்தலை வெளியிட்டுள்ளது. மரண தண்டனைக்கான பெயர் பட்டியலில், இஸ்ரேலில் உள்ள பாதுகாப்பு அமைப்பின் தலைவர்கள் மற்றும் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் பெயர்கள் புகைப்படங்களுடன் உள்ளன. 

  • 2 Oct 2024 4:46 PM IST

    இஸ்ரேல் - ஈரான் பதற்றத்தை தணிக்கும் வகையில் ஜி7 நாடுகளின் தலைவர்கள் கூட்டத்துக்கு இத்தாலி அழைப்பு விடுத்துள்ளது.

  • இஸ்ரேல் பிரதமருக்கு ஈரான் கொலை மிரட்டல்
    2 Oct 2024 4:45 PM IST

    இஸ்ரேல் பிரதமருக்கு ஈரான் கொலை மிரட்டல்

    இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கொலை செய்யப்போவதாக ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது. ஈரானின் தாக்குதலுக்கு உரிய பதிலடி தரப்படும் என்று இஸ்ரேல் எச்சரித்து இருந்தநிலையில் ஈரான் மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளது. ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடியாக, ஈரானில் உள்ள எண்ணெய் உற்பத்தி நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என தகவல் வெளியாகி உள்ளது. 

  • 2 Oct 2024 4:44 PM IST

    இஸ்ரேல் மீதான ஈரானின் ஏவுகணை தாக்குதலுக்கு ஜப்பான் கண்டனம் தெரிவித்துள்ளது.


Next Story