காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார் : நாளை இறுதிச்சடங்கு


தினத்தந்தி 14 Dec 2024 10:40 AM IST (Updated: 14 Dec 2024 2:56 PM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று உயிரிழந்தார்

Live Updates

  • 14 Dec 2024 2:36 PM IST

    ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவு: எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

    ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

    தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.

    அன்புச் சகோதரர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும், உற்றார், உறவினர்களுக்கும், காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுக்கும், உறுப்பினர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

  • 14 Dec 2024 2:15 PM IST

    ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மறைவுக்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இரங்கல்


    காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மறைவுக்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், “தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான E.V.K.S.இளங்கோவன் அவர்கள், உடல் நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைகிறேன்.

    அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன். ஓம் சாந்தி” என்று அதில் பதிவிட்டுள்ளார்.


  • 14 Dec 2024 2:04 PM IST

    ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மறைவுக்கு தி.மு.க. எம்.பி. கனிமொழி இரங்கல்


    தி.மு.க. எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியுற்றேன்.

    இத்துயர்மிகு வேளையில் அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


  • 14 Dec 2024 1:51 PM IST

    ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவை ஏற்க மனம் மறுக்கிறது - ராமதாஸ் இரங்கல்


    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது: -

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார் என்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

    நீண்ட பாரம்பரியம் கொண்ட அரசியல் குடும்பத்திலிருந்து வந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தமிழகத்தில் மிகவும் நெருக்கடியாக கால கட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பை ஏற்று, அதை வலுப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டவர். பாட்டாளி மக்கள் கட்சியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர். என் மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்தவர்.

    தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் பயிலரங்க வளாகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை வழிகாட்டிகளாக தந்தைப் பெரியார், அண்ணல் அம்பேத்கர், கார்ல் மார்க்ஸ் ஆகியோரின் உருவச் சிலைகள் அமைக்கப்பட்ட போது, அவற்றில் தந்தைப் பெரியாரின் சிலையை இளங்கோவன் அவர்களை அழைத்து தான் திறக்கச் செய்தேன். தமிழ்நாட்டு அரசியலில் அவர் பயணிக்க வேண்டிய தொலைவும், படைக்க வேண்டிய சாதனைகளும் ஏராளமாக இருந்த நிலையில் அவரது மறைவை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது.

    ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், காங்கிரஸ் கட்சினர் உள்ளிட்ட அனைவருக்கும் இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். 

  • 14 Dec 2024 1:32 PM IST

    ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவு: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இரங்கல்


    முன்னாள் மத்திய மந்திரியும், டி.என்.பி.சி.சி. முன்னாள் தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவு வருத்தம் அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 


  • 14 Dec 2024 1:25 PM IST

    ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

    சென்னை,

    சென்னை மணப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். அத்துடன், ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் குடும்பத்தினருக்கும் முதல்-அமைச்சர் ஆறுதல் செலுத்தினார். மேலும், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு ஆகியோரும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

     

  • 14 Dec 2024 12:59 PM IST

    மனதில் பட்டதை பேசக்கூடியவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்


    ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மறைவு அரசியல்ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் மிகவும் வேதனையை ஏற்படுத்துவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.


  • 14 Dec 2024 12:26 PM IST

    ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமான செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன் - விஜய் இரங்கல்

    நடிகரும், த.வெ.க. தலைவருமான விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி

    "மிகப்பெரிய அரசியல் பாரம்பரியத்தைக் கொண்டவரும், தந்தை பெரியாரின் குடும்பத்தைச் சேர்ந்தவரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், முன்னாள் மத்திய ஜவுளித்துறை இணை மந்திரியும், தற்போதைய ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலக்குறைவால் காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்."

  • 14 Dec 2024 12:23 PM IST

    ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைவு: காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே இரங்கல்

    ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைவுக்கு காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஒரு நேர்மையான மற்றும் தைரியமான தலைவர், அவர் ஒருமித்த கருத்தை உருவாக்குபவர். காங்கிரஸ் கட்சி மற்றும் தந்தை பெரியாரின் முற்போக்கு கொள்கைகளை நிலைநிறுத்த அவர் தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தார், உறுதியான அர்ப்பணிப்புடன் தமிழக மக்களுக்கு சேவை செய்தவர். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்" என்று அதில் கார்கே பதிவிட்டுள்ளார்.



  • 14 Dec 2024 12:22 PM IST

    ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இழப்பு பேரிழப்பு: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:

    "தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் (75) உடல் நலக்குறைவால் இன்று (14.12.2024) மருத்துவ மனையில் காலமானார் என்ற துயரச் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

    ஜெ.ஜெயலலிதா. ஆசிரியர் கி.வீரமணி, வைகோ, இரா.நல்லகண்ணு, ஜி.கே மூப்பனார், என்.சங்கரய்யா போன்ற அரசியல் தலைவர்களோடு இணைந்து செயல்பட்டவர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருமுறை பொறுப்பேற்று செயல்பட்டவர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர்களின் நட்பை பெற்று, தொடர்ந்து உறவில் இருந்து வந்தவர்.

    சத்தியமங்கலம் சட்டமன்ற தொகுதியில் 1984 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றத்தில் சிறப்பாக பணியாற்றியவர். 2004 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் கோபிச்செட்டி பாளையம் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்று, ஒன்றிய அரசில் மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சராக பணியாற்றியவர். அந்த நேரத்தில் ஜவுளித் துறை நெருக்கடிக்கு காரணமாக இருந்த சென்வாட் வரி நீக்க பாடுபட்டவர். பழனி - சாம்ராஜ் நகர் ரயில் பாதை அமைப்பதற்கான ஆரம்ப நிலை பணிகளை தொடக்கி வைத்தவர்.

    உயர்மட்டத் தலைவர்களோடு மட்டும் அல்லாமல் அடிமட்டத் தொண்டர்களிடமும், பொதுமக்களிடமும் இரண்டறக் கலந்து பழகி வந்தவர். மனதில் தோன்றும் கருத்தை வெளிப்படையாக பேசுபவர். இதனால் ஏற்படும் சர்ச்சைகள் பற்றி கவலைப்படாதவர். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா மறைவுக்கு பிறகு நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டு வந்தவர்

    மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகள் வலிமை பெற்று, வகுப்புவாத, மதவெறி சக்திகளை எதிர்த்து போராடும் காலத்தில் இளங்கோவன் மறைவு பேரிழப்பாகும்."

     


Next Story