கேரளாவில் பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 123 ஆக உயர்வு - இரவிலும் தொடரும் மீட்பு பணிகள்


தினத்தந்தி 30 July 2024 1:40 AM GMT (Updated: 30 July 2024 6:59 PM GMT)

கேரளாவில் கனமழை பெய்து வரும் நிலையில், வயநாட்டில் அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக அங்கு கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அந்த வகையில், கேரளாவின் வயநாடு பகுதியில் நேற்று இரவு மிகக் கனமழை பெய்தது. இந்த கனமழையை தொடர்ந்து அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.இன்று அதிகாலை 2 மணியளவில் சூரல்மலை பகுதியில் முதலில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது.

இதையடுத்து, அதிகாலை 4.30 மணிக்கு 2-வதாக மற்றொரு பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவுகளால் வைத்திரி, வெள்ளேரிமலை, மேப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் பயங்கர பாதிப்பு ஏற்பட்டது. அட்டமலையில் இருந்து முண்டகை பகுதியை சென்றடைவதற்கான ஒரே ஒரு பாலமும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது.

நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை தற்போது 123 ஆக அதிகரித்துள்ளது.

Live Updates

  • 30 July 2024 12:12 PM GMT

    மீட்புப்பணியில் விமானப்படையின் 2 விமானங்கள் : கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தகவல்

    செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கேரள முதல்மந்திரி பினராயி விஜயன், “விமானப்படையின் 2 விமானங்கள் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது. 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப்படையினர் இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர். திருவனந்தபுரம், கோழிக்கோட்டில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

    மண்ணில் புதைந்த உடல்களை கண்டறிய காவல்துறை மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. வயநாடு, கோழிக்கோடு பகுதிகளில் இருந்து தடவியல் நிபுணர்கள் சென்றுள்ளனர். கோழிக்கோடு, கண்ணூர், திருச்சூர் ஆகிய பகுதிகளில் இருந்து சிறப்பு மருத்துவ குழுக்கள் சென்றுள்ளன. போக்குவரத்துக்காக பாதிக்கப்பட்டுள்ள சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காயமடைந்த நபர்களை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் சூழ்நிலையை உணர்ந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டியது அவசியம். அரசின் மீட்பு நடவடிக்கைகள் முழுமை அடைய பாதிக்கப்பட்ட மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

  • 30 July 2024 11:23 AM GMT

    கேரளா நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 107ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



  • 30 July 2024 11:11 AM GMT

    வயநாடு அருகே வெள்ளரி மலைப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்று வெள்ள நீரில் அடித்துச்செல்லப்பட்டது. மேலும் ஒரு பள்ளி முற்றிலுமாக மண்ணில் புதையுண்டது.

  • நிலச்சரிவில் சிக்கி தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் உயிரிழப்பு
    30 July 2024 10:42 AM GMT

    நிலச்சரிவில் சிக்கி தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் உயிரிழப்பு

    நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே புளியம்பாறையைச் சேர்ந்த காளிதாஸ் என்பவர் சூரமலை பகுதிக்கு கட்டட வேலைக்காக சென்று இருந்தார். இந்தநிலையில் வயநாட்டில் உறவினர் வீட்டில் தங்கியிருந்து பணி புரிந்தபோது மண்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி காளிதாஸ் உயிரிழந்துள்ளார்.

  • 30 July 2024 10:36 AM GMT

    கேரளாவில் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

    கேரளாவில் கனமழைக்கு வாய்ப்புள்ளதால் அங்கு ரெட் அலர்ட் விடுக்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிகோடு, வயநாடு, கன்னூர், காசர் கோடு ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், ஏர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும், திருவனந்தபுரம், கொல்லம் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 

  • 30 July 2024 10:24 AM GMT

    வயநாடு: நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 84 ஆக அதிகரிப்பு

    கேரளாவின் வயநாடு பகுதியில் நேற்று இரவு மிகக் கனமழை பெய்தது. இந்த கனமழையை தொடர்ந்து அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது.

    நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களை ஹெலிகாப்டர் மூலமாக மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 84 ஆக அதிகரித்துள்ளது. 

  • 30 July 2024 10:17 AM GMT

    அதிகரிக்கும் பலி எண்ணிக்கை: கேரளாவில் இன்றும், நாளையும் துக்கம் அனுசரிப்பு

    கேரளாவின் வயநாடு பகுதியில் நேற்று இரவு மிகக் கனமழை பெய்தது. இந்த கனமழையை தொடர்ந்து அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களை ஹெலிகாப்டர் மூலமாக மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 84 ஆக உயர்ந்துள்ளது.

    இந்நிலையில் கேரளாவில் இன்றும், நாளையும் துக்கம் கடைபிடிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இதன்படி இன்றும் நாளையும் அனைத்து அரசு நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்கள் ரத்து செய்யப்படுவதாக கேரள அரசு அறிவித்துள்ளது. 

  • நிலச்சரிவு - சிறப்பு அதிகாரியை நியமித்தது கேரள அரசு
    30 July 2024 10:04 AM GMT

    நிலச்சரிவு - சிறப்பு அதிகாரியை நியமித்தது கேரள அரசு

    வயநாடு நிலச்சரிவு பணிகளை மேற்பார்வையிட சிறப்பு அதிகாரியை கேரள மாநில அரசு நியமித்துள்ளது. மீட்பு, நிவாரணப்பணிகளை கவனிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி சீரம் சாம்ப சிவராவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 80 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 

  • 30 July 2024 9:57 AM GMT

    வயநாடு: நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 80 ஆக உயர்வு

    கேரளாவின் வயநாடு பகுதியில் நேற்று இரவு மிகக் கனமழை பெய்தது. இந்த கனமழையை தொடர்ந்து அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களை ஹெலிகாப்டர் மூலமாக மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் 80 பேர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக கேரள தலைமைச் செயலாளர் வி.வேணு தெரிவித்தார்.

    மேலும் 116 பேர் படுகாயங்களுடன் மாவட்டத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக மாநில வருவாய்த்துறை அமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    இதனிடையே மத்திய இணை மந்திரி ஜார்ஜ் குரியன், நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்கு தலைமை தாங்க வயநாடு செல்கிறார். பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின் பேரில், தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள், துணை ராணுவப் படைகள், கேரள அரசு அதிகாரிகள் மற்றும் பிற நிறுவனங்களை மத்திய மந்திரி ஒருங்கிணைப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  • 30 July 2024 9:44 AM GMT

    கேரளாவில் உயர் அலை எச்சரிக்கை

    கேரள மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் 63 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கேரளா கடற்கரைகளில் நாளை இரவு 11.30 மணி வரை உயர் அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி கேரள கடற்கரைகளில் 2.8 மீட்டர் உயர அலை வீசக்கூடும் என தேசிய கடல்சார் ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


Next Story