கேரளாவில் பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 123 ஆக உயர்வு - இரவிலும் தொடரும் மீட்பு பணிகள்
கேரளாவில் கனமழை பெய்து வரும் நிலையில், வயநாட்டில் அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக அங்கு கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அந்த வகையில், கேரளாவின் வயநாடு பகுதியில் நேற்று இரவு மிகக் கனமழை பெய்தது. இந்த கனமழையை தொடர்ந்து அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.இன்று அதிகாலை 2 மணியளவில் சூரல்மலை பகுதியில் முதலில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது.
இதையடுத்து, அதிகாலை 4.30 மணிக்கு 2-வதாக மற்றொரு பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவுகளால் வைத்திரி, வெள்ளேரிமலை, மேப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் பயங்கர பாதிப்பு ஏற்பட்டது. அட்டமலையில் இருந்து முண்டகை பகுதியை சென்றடைவதற்கான ஒரே ஒரு பாலமும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது.
நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை தற்போது 123 ஆக அதிகரித்துள்ளது.
Live Updates
- 30 July 2024 2:56 PM IST
ரெட் அலெர்ட்: கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு
கேரளாவில் கனமழைக்கு வாய்ப்புள்ளதால் அங்கு ரெட் அலர்ட் விடுக்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி காசர்கோடு, கன்னூர், வயநாடு, மலப்புரம், திருச்சூர், இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- 30 July 2024 2:33 PM IST
வயநாடுக்கு விரையும் ராகுல்காந்தி, பிரியங்கா
காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் கூறுகையில்,
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியும், பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் வயநாட்டுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர்.
மேலும், பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் முழு ஒத்துழைப்பை அளிப்பதாக உறுதியளித்துள்ளார். மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான அனைத்து முயற்சிகள் நடந்து வருவதாகவும் அவர் கூறினார்.
- 30 July 2024 1:07 PM IST
வயநாடு நிலச்சரிவு குறித்து கேரள முதல் மந்திரி பினராயி விஜயனுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் பேசினார்.
நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு ₹5 கோடியை வழங்க உள்ளது. மேலும், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இருவர் தலைமையில் ஒரு குழு அங்கு செல்ல இருக்கிறது.
- 30 July 2024 12:53 PM IST
- பல்வேறு மாநிலங்களில் இருந்தும், கேரளாவுக்கு மீட்புக்குழு விரைந்துள்ளது.
- மீட்பு பணியில் தமிழக மீட்பு படையை சேர்ந்த 60 பேர் ஈடுபட்டுள்ளனர்
- தமிழகத்தில் இருந்து மேலும் 200 பேர் கொண்ட மீட்பு குழு கேரளா புறப்பட்டுள்ளது.
- அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு குழுவில் இருந்து அதிகாரிகள் உட்பட 260 பேர் வயநாடு விரைந்துள்ளனர்
- பெங்களூருவில் இருந்தும் கூடுதல் தேசிய மீட்பு படை வீரர்கள் வயநாடு விரைவு
- 30 July 2024 12:02 PM IST
கேரள நிலச்சரிவு குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் முழக்கத்தில் ஈடுபட்டன. வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று கேரள மாநில எம்பிக்கள் வலியுறுத்தினர். மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்று எம்பிக்கள் று தொடர்ந்து முழக்கமிட்டனர். அவையில் விவாதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று கேரள எம்பிக்கள் பேசுவதற்கு மாநிலங்களவை தலைவர் அனுமதி அளித்தார்.
- 30 July 2024 11:26 AM IST
விரைந்தது ராணுவம்
கேரளாவின் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட உடன் உடனடியாக ராணுவத்தின் உதவி கோரப்பட்டது. இதனையடுத்து காலாட்படை பட்டாலியனைச் சேர்ந்த 225 பேர் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மருத்துவ அதிகாரிகள் குழு தலைமையில், 40 பேர் அடங்கிய குழுவினர் மீட்பு பணிக்கு உதவுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.
குன்னூர் கண்டோன்மென்டில் இருந்தும் இரண்டு குழுவினர் வயநாடு விரைந்து உள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர் விமானப்படைக்கு சொந்தமான ஏஎல்எச் மற்றும் எம்ஐஐ 7 ஹெலிகாப்டர்களும், சாரங் வகை ஹெலிகாப்டர்களும் மீட்பு பணியில் முன்னின்று உதவி வருகின்றன.
- 30 July 2024 10:49 AM IST
கேரளாவில் அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
- 30 July 2024 10:37 AM IST
நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள வயநாட்டில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மீட்பு பணியில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. பல வீடுகள் மண்ணோடு மண்ணாக அடித்து செல்லப்பட்டன. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. தற்போது வரை பலி எண்ணிக்கை 36-ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வயநாடு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீட்பு பணிகள் தொடர்பாக நேரில் சென்று அறியவும் மீட்பு பணிகளை துரிதப்படுத்தவும் சம்பவ இடத்திற்கு செல்ல ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
- 30 July 2024 9:54 AM IST
கேரள நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ராணுவம் ஈடுபடுத்தப்பட உள்ளது.