2026 டி20 உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்ற அணிகள் - முழு விவரம்

2026 டி20 உலகக்கோப்பை தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.

Update: 2024-07-02 11:02 GMT

துபாய்,

20 அணிகள் கலந்து கொண்ட 9வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் கடந்த மாதம் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் 7 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்நிலையில் அடுத்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 2026ம் ஆண்டு நடைபெறுகிறது. இந்த தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் 20 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.

2024 டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற்ற முறையிலேயே அடுத்த டி20 உலகக்கோப்பை தொடரும் நடைபெற உள்ளது. இந்நிலையில் 2026ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ள அணிகளின் விவரங்களை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது.

அதன்படி 2026 டி20 உலகக்கோப்பை தொடரை நடத்தும் நாடுகள் அடிப்படையில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் நேரடியாக தகுதிபெற்றுள்ளன. இதையடுத்து 2024 டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் சுற்றுக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்கா, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா (இந்தியா தவிர) அணிகளும் தகுதி பெற்றுள்ளன.

இதையடுத்து சர்வதேச டி20 தரவரிசை (அணிகள் தரவரிசை) அடிப்படையில் நியூசிலாந்து (6வது இடம்), பாகிஸ்தான் (7வது இடம்), அயர்லாந்து (11வது இடம்) அணிகள் அடுத்த டி20 உலகக்கோப்பை தொடருக்கு தகுதிபெற்றுள்ளன. மொத்தம் 20 அணிகளில் 12 அணிகள் தற்போது தகுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மீதம் உள்ள 8 இடத்திற்கு தகுதி சுற்று போட்டிகள் நடத்தப்பட உள்ளன.



Tags:    

மேலும் செய்திகள்