டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: விராட் கோலி குறித்த மஞ்ச்ரேக்கர் விமர்சனத்திற்கு மிஸ்பா உல் ஹக் பதிலடி

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஒருவேளை இந்தியா தோல்வியை சந்தித்திருந்தால் அதற்கு காரணம் விராட் கோலியாக இருந்திருப்பார் என்று சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விமர்சித்திருந்தார்.

Update: 2024-07-04 15:24 GMT

கராச்சி,

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வந்த டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 176 ரன்கள் எடுத்தது. இந்தியா தரப்பில் விராட் கோலி 59 பந்தில் 76 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து 177 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 169 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 7 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி திரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இந்த தொடரில் மற்ற போட்டிகளில் சொதப்பிய விராட் கோலி முக்கியமான இறுதிப்போட்டியில், விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணியை நங்கூரமாக நிலைத்து நின்று காப்பாற்றினார். அதனால் இறுதிப்போட்டியில் ஆட்ட நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆட்ட நாயகன் விருது வாங்கிய நிகழ்விலேயே சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்தார். இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக ஓய்வை அறிவித்துள்ளார்.

இருப்பினும் ஆரம்பத்திலேயே விக்கெட் விழுந்ததால் அப்போட்டியில் விராட் கோலி கொஞ்சம் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடினார். அதனால் ஒருவேளை இந்தியா தோல்வியை சந்தித்திருந்தால் அதற்கு காரணம் விராட் கோலியாக இருந்திருப்பார் என்று சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விமர்சித்திருந்தார். மேலும் ஆட்டநாயகன் விருதை ஜஸ்பிரித் பும்ரா போன்ற ஏதேனும் பவுலருக்கு கொடுத்திருக்கலாம் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் அவரைப் போன்ற விமர்சகர்களுக்கு பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் மிஸ்பா-உல்-ஹக் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "விராட் கோலி நிறைய பந்துகளை எடுத்துக் கொண்டார் என்று சொல்வதை நான் ஏற்றுக்கொள்வேன். அது நல்லது. ஆனால் ஒருவேளை விராட் கோலி ரிஸ்க் எடுத்து விளையாடி அவுட்டாகியிருந்தால் இந்தியா 140 - 150 ரன்களை மட்டுமே கட்டுப்படுத்தியிருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும். எனவே சூழ்நிலை இருபக்கமும் சென்றிருக்கலாம். ஏனெனில் அந்த நேரத்தில் இந்தியா இரு புறமும் (வெற்றி, தோல்வி) செல்வதற்கான இடத்தில் நின்று கொண்டிருந்தனர். விராட் அவுட்டாகி இருந்தால் 140 ரன்கள் மட்டுமே எடுத்திருப்பார்கள். எனவே அந்த ரிஸ்க்கை புரிந்து கொண்டு விளையாடிய விராட் கோலி இந்தியாவை வெற்றி பெற வைத்து விட்டார்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்