நான் சொன்னதை விராட் கோலி இறுதிப்போட்டியில் செய்து காட்டினார் - பாண்டிங் பெருமிதம்

டி20 உலகக்கோப்பையில் சுமாராக விளையாடிய போது விராட் கோலியின் பார்ம் பற்றி பலமுறை தம்மிடம் கேட்கப்பட்டதாக ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

Update: 2024-07-04 12:02 GMT

சிட்னி,

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வந்த டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 176 ரன்கள் எடுத்தது. இந்தியா தரப்பில் விராட் கோலி 59 பந்தில் 76 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து 177 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 169 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 7 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி திரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

முன்னதாக நடப்பு தொடரில் முதன் முறையாக தொடக்க வீரராக களமிறங்கிய விராட் கோலி டி20 உலகக்கோப்பையில் முதல் முறையாக டக் அவுட்டாகி தடுமாற்றமாக செயல்பட்டார். லீக் மற்றும் சூப்பர் 8 சுற்று வரை ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. அதனால் அவரை மீண்டும் 3-வது இடத்தில் களமிறக்குமாறு நிறைய கோரிக்கைகள் எழுந்தன.

இருப்பினும் ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோரின் ஆதரவால் தொடர்ந்து தொடக்க வீரராகவே விளையாடிய விராட் கோலி மாபெரும் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 76 ரன்கள் குவித்தார். குறிப்பாக 34 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறிய போது அசத்திய அவர் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார். அந்த வகையில் தன்னை சாம்பியன் வீரர் என்பதை நிரூபித்த விராட் கோலி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

இந்நிலையில் சுமாராக விளையாடிய போது விராட் கோலியின் பார்ம் பற்றி பலமுறை தம்மிடம் கேட்கப்பட்டதாக ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ஆனால் அத்தனை முறையும் அசத்துவார் என்று தாம் சொன்ன வார்த்தையை விராட் கோலி பைனலில் காப்பாற்றியதாக பாண்டிங் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "முதலில் விராட் கோலி இந்திய அணியில் இருக்க வேண்டுமா? என்ற பேச்சுக்கள் காணப்பட்டன. பின்னர் தொடர் நடைபெறும்போது அவர் ரன்கள் அடிக்கவில்லை. அப்போது குறைந்தது 10 முறை அவருடைய பார்ம் பற்றி என்னிடம் கேட்டிருப்பார்கள். அப்போதெல்லாம் அவரை விடுங்கள். பெரிய தருணம் வரும்போது கண்டிப்பாக அவர் உயர்ந்து நின்று அசத்துவார் என்று சொன்னேன். அப்படி நான் சொன்னதை அவர் இறுதிப்போட்டியில் செய்து காட்டியுள்ளார். குறிப்பாக ஆரம்பத்திலேயே 3 விக்கெட்டுகள் இழந்த இந்தியா அழுத்தத்திற்குள் தள்ளப்பட்டபோது விராட் கோலி சிறப்பாக விளையாடினார்.

அது அவரால் போட்டியை எந்தளவுக்கு புரிந்து வைத்து தன்னுடைய அணிக்காக வெற்றியை பெற்றுக் கொடுக்கும் ஆட்டத்தை விளையாட முடியும் என்பதை காட்டியது. ஆனால் அது அவருக்கு எளிதாக இல்லை. அன்றைய நாளில் அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தன்னுடைய மெதுவான அரை சதத்தை அடித்தார். அப்படி கடினமாக வேலை செய்த அவர் 50 ரன்கள் கடந்ததும் வேகமாக ரன்கள் அடித்தார். அது தான் அவரிடமிருந்து அணிக்கு தேவைப்பட்டது. தனது கெரியர் முழுவதும் அவர் இப்படி சூழ்நிலைகளைப் படித்து அதற்கு தகுந்தாற்போல் விளையாடி அசத்தி வருகிறார்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்