முதலாவது டி20 போட்டி: பந்துவீச்சில் அசத்தியும் தோல்வியடைய காரணம் இதுதான் - சுப்மன் கில் வருத்தம்
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது.;
ஹராரே,
சுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கிடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது.
அதன்படி இவ்விரு அணிகளுக்கிடையே முதலாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே 115 ரன்கள் மட்டுமே அடித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கிளைவ் மடாண்டே 29 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் ரவி பிஷ்னோய் 4 விக்கெட்டுகளும், வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 116 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி எளிதில் வெற்றி பெறும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் உள்ளூர் சூழலை சாதகமாக பயன்படுத்தி கொண்ட ஜிம்பாப்வே பந்து வீச்சாளர்கள் இந்திய அணியை 102 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி அசத்தினர். இதன் மூலம் 13 ரன்கள் ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக சுப்மன் கில் 31 ரன்கள் அடித்தார். ஜிம்பாப்வே சார்பில் அதிகபட்சமாக கேப்டன் சிக்கந்தர் ரசா மற்றும் சதாரா தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.
இந்நிலையில் பேட்டிங்கில் அவசரமாக விளையாடியதே தோல்விக்கான காரணம் என்று வருத்தம் தெரிவித்த கேப்டன் சுப்மன் கில் இது பற்றி பேசியது பின்வருமாறு:- "நாங்கள் பந்து வீச்சில் நன்றாக செயல்பட்டோம். ஆனால் களத்தில் எங்களை நாங்களே கீழே விட்டோம். நாங்கள் எங்கள் தரத்திற்கு தகுந்தாற்போல் செயல்படவில்லை. பேட்ஸ்மேன்கள் அனைவரும் அவசரமாக செயல்பட்டது போல் தெரிந்தது. நாங்கள் நேரம் எடுத்து பேட்டிங்கை மகிழ்ச்சியுடன் செய்வது பற்றி பேசினோம். ஆனால் அது அந்த வழியில் செல்லவில்லை. 5 விக்கெட்டுகள் இழந்ததும் நான் கடைசி வரை நின்றிருந்தால் எங்களுக்கு நன்றாக அமைந்திருக்கும். ஆனால் நான் அவுட்டானதும் எஞ்சிய போட்டியும் முடிந்தது. கடைசியில் கொஞ்சம் நம்பிக்கை இருந்தது. ஆனால் 115 ரன்கள் துரத்தும்போது உங்களுடைய பத்தாவது பேட்ஸ்மேன் களத்தில் போராடினால் நீங்கள் ஏதோ தவறு செய்துள்ளீர்கள் என்று அர்த்தம்" என கூறினார்.